Last Updated:
திலக் வர்மா நல்ல ஃபார்மில் இருப்பதால் அவர் இந்த பிரிவில் இன்னும் ஏராளமான ரன்களை சேர்ப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்ற 2 ஆவது டி20 கிரிக்கெட் போட்டியில் ஆட்டமிழக்காமல் 72 ரன்கள் சேர்த்ததன் மூலம் இந்திய அணியின் திலக் வர்மா புதிய சாதனையை ஏற்படுத்தியுள்ளார். இந்த சாதனையை மற்ற வீரர்கள் யாரும் எளிதில் நெருங்கி விட முடியாது என்று விமர்சகர்கள் கூறியுள்ளனர்.
இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான டி20 தொடரில் கொல்கத்தாவில் நடைபெற்ற முதல் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதையடுத்து 2 ஆவது டி20 போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடைபெற்றது.
டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் யாதவ் பந்துவீச்சை தேர்வு செய்தார். மேலும் முதல் டி20 போட்டியில் விளையாடிய நிதிஷ் குமார், ரிங்கு சிங் அணியில் இல்லை. அவர்களுக்கு பதிலாக வாஷிங்டன் சுந்தர், துருவ் ஜேரல் அணியில் இடம் பெற்று இருந்தனர். இந்திய அணி சீரான இடைவெளியில் விக்கெட்களை வீழ்த்தினாலும் இங்கிலாந்து அணி அதிரடியாகவே பேட்டிங் செய்து வந்தது. இறுதியாக இங்கிலாந்து அணி 20 ஒவர்கள் முடிவுக்கு 9 விக்கெட் இழப்பிற்கு 165 ரன்களை குவித்தது.
166 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் விளையாடினர். சஞ்சு சாம்சன்(5), அபிஷேக் ஷார்மா (12), கேப்டன் சூர்யகுமார் யாதவ் (12), துருவ் ஜேரல் (4), ஹர்திக் பாண்டியா(7) என ஆட்டமிழந்தனர். ஒரு புறம் விக்கெட் வீழ்ந்தாலும் மூன்றாவது வீரராக களமிறங்கிய திலக் வர்மா அதிரடியாக விளையாடி அரைசதம் கடந்தும் இந்திய அணியின் வெற்றிக்காக போராடினார்.
பரபரப்பாக சென்ற இந்த போட்டியில் கடைசி ஓவரில் இந்திய அணி 8 விக்கெட்களை இழந்து இருந்த நிலையில் வெற்றி 6 ரன்கள் தேவைப்பட்டது. கடைசி ஓவரை திலக் வர்மா எதிர்கொள்ள இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜேமி ஓவர்டன் பந்துவீசினார். முதல் பந்தில் 2 ரன்களும், 2வது பந்தில் பவுண்டரி விளாசி இந்திய அணி 2 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி வைத்தார். திலக் வர்மா 55 பந்துகளில் 72 ரன்களை குவித்து இந்திய அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றார். இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
நேற்றைய ஆட்டத்தில் ஆட்டமிழக்காமல் 72 ரன்கள் குவித்ததன் மூலம் உலக சாதனையை திலக் வர்மா ஏற்படுத்தியுள்ளார். அதாவது சர்வதேச டி20 போட்டிகளில் ஆட்டமிழக்காமல் ஒரு பேட்ஸ்மேன் எடுத்த அதிகபட்ச ஸ்கோர் என்ற சாதனையை செய்துள்ளார் திலக் வர்மா.
சர்வதேச டி20 போட்டிகளில் அவர் 107, 120, 19, 72 ஆகிய ரன்களை ஆட்டமிழக்காமல் எடுத்திருக்கிறார். ஒட்டுமொத்தமாக இது 318 ரன்கள் ஆகும். அடுத்தடுத்த இடங்களில் நியூசிலாந்து அணியின் மார்க் சாப்மேன் 271, ஆஸ்திரேலியாவின் ஆரோன் பின்ச் 240 ரன்கள், இந்தியாவின் ஸ்ரேயாஸ் ஐயர் 240 ரன்கள், டேவிட் வார்னர் 239 ரன்கள் எடுத்து உள்ளனர்.
திலக் வர்மா நல்ல ஃபார்மில் இருப்பதால் அவர் இந்த பிரிவில் இன்னும் ஏராளமான ரன்களை சேர்ப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
January 26, 2025 6:00 PM IST