Last Updated:

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 2024-2025 நிதி ஆண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கையை தாக்கல் செய்தார். 2025-2026 நிதி ஆண்டில் 6.3%-6.8% வளர்ச்சி எதிர்பார்க்கப்படுகிறது.

நிர்மலா சீதாராமன்நிர்மலா சீதாராமன்
நிர்மலா சீதாராமன்

மக்களவையில் பொருளாதார ஆய்வறிக்கையை தாக்கல் செய்த மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அடுத்த நிதி ஆண்டில் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சி 6.8 சதவீதம் வரை இருக்கும் என தெரிவித்தார்.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று தொடங்கிய நிலையில், ஆண்டின் முதல் கூட்டத் தொடர் என்பதால், இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசு தலைவர் பங்கேற்றார். இதற்காக, குடியரசு தலைவர் மாளிகையில் இருந்து குதிரை பூட்டப்பட்ட வண்டியில் திரௌபதி முர்மு, அரசு மரியாதையுடன் நாடாளுமன்றம் சென்றார். செங்கோல் முன்னதாக கொண்டு செல்லப்பட்ட நிலையில், குடியரசு தலைவர் திரௌபதி முர்மு நாடாளுமன்றத்திற்குள் நுழைந்தார். அவரை துணை குடியரசு தலைவர் ஜெகதீப் தன்கர், பிரதமர் நரேந்திர மோடி, சபாநாயகர் ஓம் பிர்லா வரவேற்றனர்.

பின்னர் குடியரசு தலைவரின் உரையுடன் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்கியது. அப்போது பேசிய குடியரசு தலைவர் திரௌபதி முர்மு மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், மற்றும் கும்பமேளாவில் உயிரிழந்த பக்தர்களுக்கு இரங்கல் தெரிவித்தார். மத்திய அரசின் திட்டங்களை பட்டியலிட்ட அவர், அதனால் மக்கள் அடைந்துள்ள பயன்களையும் எடுத்துரைத்தார். குறிப்பாக, பாதுகாப்பு துறையில் இந்தியா தன்னிறைவு அடைந்ததாக கூறிய அவர், இந்தியாவில் தயாரிப்போம் என்ற நிலையை கடந்து உலகிற்காக தயாரிப்போம் என்ற நிலையை நாடு எட்டி இருப்பதாக கூறினார்.

இந்நிலையில், மக்களவையில் 2024 – 2025 நிதி ஆண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கையை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். தலைமை பொருளாதார ஆலோசகர் ஆனந்த நாகேஸ்வரன் தலைமையிலான குழு நடப்பு நிதியாண்டில் பொருளாதார செயல்திறனை அடிப்படியாக கொண்டு பொருளாதார ஆய்வறிக்கையை தயாரித்துள்ளது . அதில் 2025 – 2026 நிதி ஆண்டின் பொருளாதார வளர்ச்சி 6.3 சதவீதம் முதல் 6.8 சதவீதம் வரை இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்த பணவீக்கம் 5 புள்ளி 2 சதவீதம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் நிதி ஆண்டின் முதல் பாதியில் உணவுப் பொருட்களின் விலைகளைக் கட்டுப்படுத்த வாய்ப்புள்ளதாக நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். பல்வேறு வளர்ச்சி முயற்சிகள் இருந்த போதிலும் நாட்டின் விவசாயத் துறை தொடர் வீழ்ச்சியை சந்தித்து வருவதாக அவர் தெரிவித்தார். 2017 முதல் 2023 நிதி ஆண்டு வரை வேளாண் துறை வளர்ச்சி ஆண்டுதோறும் சராசரியாக 5 சதவீதமாக இருந்த நிலையில், அடுத்தடுத்து உருவான சவால்களுக்கு மத்தியில் வளர்ச்சி விகிதம் பின்னடைவை சந்தித்துள்ளதாக அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

இதையடுத்து பொருளாதார ஆய்வறிக்கைக்கு மக்களைவையில் ஒப்புதல் வழங்கப்பட்டது. அதை தொடர்ந்து மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. தொடர்ந்து மாநிலங்களவையில் பொருளாதார ஆய்வறிக்கையை நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்து ஒப்புதல் பெற உள்ளார். இதனிடையே, பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்பட்டதை தொடர்ந்து மும்பை பங்குசந்தை சென்செக்ஸ் 540 புள்ளிகள் வரை உயர்ந்தது.

தமிழ் செய்திகள்/வணிகம்/

ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சி… பொருளாதார ஆய்வறிக்கையை தாக்கல் செய்தார் நிர்மலா சீதாராமன்



Source link