வங்கிகள் மற்றும் வங்கி அல்லாத தனியார் நிதி நிறுவனங்கள் மக்களின் வசதிக்காக, கிரெடிட் கார்டுகளை வழங்கி வருகின்றன. இந்த கிரெடிட் கார்டுகள் தனிநபரின் கிரெடிட் ஸ்கோரை சோதித்த பிறகே வழங்கப்படுகிறது. ஏனெனில் இந்த கார்டை பெறுபவர் கடனாக பெற்ற தொகையை திருப்பி செலுத்தும் விகிதம், ஒருவரின் கிரெடிட் ஸ்கோர் மூலம் அளவிடப்படுகிறது. இவ்வாறாக, கிரெடிட் கார்டை ஒருவர் வாங்கிய பிறகு, அதனை பயன்படுத்த தொடங்கியதும், கடன் தொகையை மாதந்தோறும் ஒரு குறிப்பிட்ட தேதியில் செலுத்த வேண்டியிருக்கும். சில கடினமான சூழ்நிலைகளில், சிலர் நிலுவைத் தொகையை முழுவதுமாக செலுத்த முடியாமல் போகலாம். முழுத்தொகையை செலுத்த முடியாதவர்களுக்கு வங்கி, குறைந்தப்பட்ச தொகையை செலுத்தும் வாய்ப்பை வழங்குகிறது. அந்த தொகையையும் செலுத்தாவிட்டால் வட்டி, அபராதம் ஆகியவை விதிக்கப்படும்.
எனவே, இதனை தவிர்க்க உதவும் சில வழிகளை தற்போது விரிவாக பார்ப்போம். ஒரு கிரெடிட் கார்டைப் பயன்படுத்தி மற்றொரு கிரெடிட் கார்டிற்கு நேரடியாக பணம் செலுத்துவது பொதுவாக சாத்தியமில்லை. ஆனால் கட்டணங்களை திறம்பட நிர்வகிக்க சில மாற்று முறைகள் உள்ளன. ஒரு கிரெடிட் கார்டைப் பயன்படுத்தி மற்றொரு கிரெடிட் கார்டு பில்லை செலுத்த உதவும் சில செயல்முறைகளை இங்கே தெரிந்து கொள்வோம். அதே நேரத்தில், இதன் நன்மைகள், தீமைகள் மற்றும் இதனை முயற்சிப்பதற்கு முன் கவனிக்க வேண்டிய சில முக்கியமான காரணிகளையும் தெரிந்து கொள்வோம்.
உங்கள் கிரெடிட் கார்டு பில்களை செலுத்துவதற்கான ஸ்மார்ட் டிப்ஸ்
குறைந்தபட்ச தொகையை விட அதிகமாக செலுத்துங்கள்: வங்கி நிர்ணயிக்கும் குறைந்தபட்ச தொகையை செலுத்துவதை விட, சற்று கூடுதல் தொகையை செலுத்துவதன் மூலம் கணிசமாக வட்டியிலிருந்து தப்பிக்கலாம். பணம் உங்கள் கணக்கில் இருந்து தானாகவே எடுக்கப்படும் போது, காலக்கெடு தவறவிடப்படாது என்பதை உறுதிசெய்ய முடியும், அதேநேரம் உங்கள் கிரெடிட் ஸ்கோரைப் பாதிக்கும் மற்ற அபராதங்களிலிருந்தும் நீங்கள் தப்பிக்கலாம்.
சலுகை காலம் குறித்து எச்சரிக்கை தேவை: சலுகை காலங்கள் குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இதன் மூலம் பணம் செலுத்த வேண்டிய தேதியான, பில்லிங் சைக்கிள் எப்போது வரும் என்பதை நீங்கள் அறிந்து கொள்ள முடியும்.
ஒரு கிரெடிட் கார்டிலிருந்து மற்றொரு கிரெடிட் கார்டு பில்லை செலுத்துவதன் நன்மைகள்…
வெகுமதிகள்: சில கிரெடிட் கார்டுகளின் பேமெண்ட் டிரான்ஸ்பர் மூலம், நீங்கள் குறிப்பிட்ட ரிவார்டு பாய்ண்ட்கள் அல்லது கேஷ்பேக்கைப் பெறலாம்.
தாமதக் கட்டணங்கள்: வேறு ஒரு கிரெடிட் கார்டு மூலம் பணம் செலுத்துவது, சரியான நேரத்தில் பணம் செலுத்துவதை உறுதி செய்வதோடு, தாமதமாக செலுத்துவதால் பிடிக்கப்படும் கட்டணங்களைத் தவிர்க்கவும் உதவும்.
கடனை நிர்வகித்தல்: அதிக வட்டி வசூலிக்கும் கார்டுகளில் இருக்கும், நிலுவைத் தொகையை குறைந்த வட்டி விகிதங்களை கொண்ட கிரெடிட் கார்டுக்கு மாற்றுவதன் மூலம் ஒட்டுமொத்த கடனையும் குறைக்கலாம்.
சரியான நேரத்தில் பணம் செலுத்துதல்: உங்கள் கிரெடிட் கார்டு முழு வரம்பு அல்லது நிதி அவசரநிலையின் போது நீங்கள் செலவு செய்யும் பட்சத்தில், அந்த பில்லுக்கான உங்களது கட்டணம் தவறவிடப்படாது. ஏனெனில் அது மற்றொரு கிரெடிட் கார்டைப் பயன்படுத்தி செலுத்தப்படுவதால் சரியான நேரத்தில் பணம் செலுத்தப்படும்.
ஒரு கிரெடிட் கார்டு மூலம் இன்னொரு கிரெடிட் கார்டுக்கான பில்லை செலுத்துவது எப்படி?
ஒரு கிரெடிட் கார்டைப் பயன்படுத்தி மற்றொரு கிரெடிட் கார்டின் பில்லை நேரடியாக செலுத்த முடியாது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். இருப்பினும், மறைமுகமாக பணம் செலுத்துவதற்கு பல மாற்று முறைகள் உள்ளன.
பேலன்ஸ் டிரான்ஸ்பர்
- ஒரு கிரெடிட் கார்டில் இருந்து மற்றொரு கிரெடிட் கார்டுக்கு, குறைந்த வட்டி விகிதத்தில் உங்கள் நிலுவைத் தொகையை மாற்றுவதற்கு பேலன்ஸ் டிரான்ஸ்பர் ஒரு நல்ல வழியாகும்.
- குறைந்த வட்டி விகிதங்களில் பணம் செலுத்த அல்லது கடன்களை ஒருங்கிணைப்பதற்கு இது ஒரு சிறந்த வழி.
- இருப்பினும், பேலன்ஸ் டிரான்ஸ்பர் கட்டணம் பொதுவாக 1% முதல் 3% வரை இருக்கும்.
ரொக்க முன்பணம்
- ஒரு கிரெடிட் கார்டிலிருந்து பணத்தை எடுத்து, அந்த பணத்தைப் மற்றொரு கிரெடிட் கார்டுக்கான பில்லை செலுத்த பயன்படுத்தலாம்.
- ஆனால் நீங்கள் எடுக்கும் பணத்திற்கு ஏற்ப வட்டி விகிதங்கள் இருக்கும் என்பதால் கூடுதல் சுமையாக இருக்கலாம். ஏனெனில், முன்பணத்தை ரொக்கமாக எடுக்கும் போது, அதிகபட்ச கட்டணங்கள் மற்றும் வட்டி விகிதங்கள் விதிக்கப்படலாம்.
கட்டண சேவைகள்
- சில மூன்றாம் தரப்பு கட்டண சேவைகளில், கிரெடிட் கார்டைப் பயன்படுத்தி மறைமுகமாக மற்றொரு கிரெடிட் கார்டு பில்லைச் செலுத்தலாம்.
- பரிவர்த்தனைகளில் நிபந்தனைகள் அல்லது கட்டணங்கள் இருக்கலாம் என்பதால் தளத்தின் விதிமுறைகளை முழுவதுமாக கவனிப்பது நல்லது.
கவனிக்க வேண்டியவை
வட்டி மற்றும் கட்டணங்கள்: பேலன்ஸ் டிரான்ஸ்பர் மற்றும் ரொக்க முன்பணங்கள் உடனடியாக திருப்பிச் செலுத்தப்படாவிட்டால், அவை பெரும்பாலும் கட்டணங்கள் மற்றும் அதிக வட்டி விகிதங்களுக்கு வழிவகுக்கும்.
கிரெடிட் ஸ்கோர் பாதிப்பு: கடன் இருப்புகளை மாற்றுவது உங்கள் கடன் பயன்பாட்டு விகிதத்தை அதிகரிக்கும். இதனால் உங்கள் கிரெடிட் ஸ்கோர் குறைய வாய்ப்புள்ளது.
கடினமான சூழலில், ஒரு கிரெடிட் கார்டை பயன்படுத்தி மற்றொரு கிரெடிட் கார்டுக்கான பில்லை செலுத்துவது எளிதாக இருக்கலாம். ஆனால், அதற்கான கட்டணங்கள், வட்டி மற்றும் கடன் மதிப்பீடுகளுக்கான தாக்கங்களைப் புரிந்துகொள்வது அவசியம்.
February 05, 2025 5:03 PM IST