Last Updated:

சச்சின் டெண்டுல்கருக்கு பிசிசிஐ வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கியது. ஜஸ்பிரித் பும்ரா, ஸ்மிருதி மந்தனா, தீப்தி சர்மா, ரவிச்சந்திரன் அஸ்வின் உள்ளிட்டோர் விருதுகள் பெற்றனர்.

நமன் விருதுகள்நமன் விருதுகள்
நமன் விருதுகள்

கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதை வழங்கி பிசிசிஐ கவுரவித்துள்ளது.

மும்பையில் நடந்த இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய விருது வழங்கும் விழாவில், சி.கே.நாயுடு வாழ்நாள் சாதனையாளர் விருதை சச்சினுக்கு ஐசிசி தலைவர் ஜெய் ஷா வழங்கினார். 664 சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இந்தியாவுக்காக விளையாடியுள்ள அவர், 100 சதங்களை விளாசி ‘கிரிக்கெட்டின் கடவுள்’ என போற்றப்படுகிறார்.

அதேபோல 2024-ஆம் ஆண்டின் சிறந்த சர்வதேச கிரிக்கெட் வீரருக்கான விருதை ஜஸ்பிரித் பும்ரா பெற்றார். சிறந்த வீராங்கனைக்கான விருதை ஸ்மிருதி மந்தனா பெற்றார்.

அதுமட்டுமின்றி, சர்வதேச கிரிக்கெட் போட்டியில் அதிக ரன்களை எடுத்த வீராங்கனைக்கான விருதை ஸ்மிருதி மந்தனாவும், அதிக விக்கெட்டுகளை எடுத்த வீராங்கனைக்காக தீப்தி சர்மாவும் பெற்றனர்.

அண்மையில் ஓய்வு பெற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு பிசிசிஐ-யின் சிறப்பு விருது வழங்கப்பட்டது. சர்வதேச போட்டிகளில் அறிமுக வீரருக்கான விருதை சர்ஃபராஸ் கானும், சிறந்த அறிமுக வீராங்கனை விருது ஆஷா சோப்னாவுக்கும் வழங்கப்பட்டது.

மேலும் 16 வயதுக்குட்பட்டவர்களுக்கான விஜய் மெர்ச்சண்ட் கோப்பையில் அதிக விக்கெட்டுகளை எடுத்ததற்காக ஹெம்சுதேஷன் ஜெகநாதன் என்ற தமிழக வீரரும், 23 வயதுக்குட்பட்டவர்களுக்கான சி.கே.நாயுடு தொடரில் அதிக விக்கெட்டுகளை எடுத்ததற்காக வித்யூத் என்ற தமிழக வீரரும் விருது பெற்றனர்.



Source link