Last Updated:
Seeman | தமிழ்நாட்டு உள்நாட்டு அரசியல் முரண்பாடுகளுக்குள் தமிழீழ விடுதலைப் போராட்டத்தையும் இழுத்து விடும் முயற்சிகளை சீமான் உட்பட எந்த அரசியல் தலைவர்களும் மேற்கொள்ளக் கூடாது என ருத்ரகுமரன் கோரியுள்ளார்.
பெரியாரையும் பிரபாகரனையும் எதிர் துருவங்களாக முன்னிறுத்தும் நாம்தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு, நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் என்ற அமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது.
அமெரிக்காவின் நியூயார்க்கில் இருந்து இயங்கும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் என்ற அமைப்பின் பிரதமர் பதவியில் இருக்கும் விசுவநாதன் ருத்ரகுமரன் என்பவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், சீமானின் அணுகுமுறை தமிழீழ மக்களின் போராட்டத்தில் தமிழ்நாட்டு மக்கள் வழங்கும் ஆதரவுக்கு கேடு விளைவிக்கும் என்று சுட்டிக்காட்டியுள்ளார். பிரபாகரனின் கருத்துகளை தமது அரசியல் தேவைக்கு ஏற்ப வளைத்து திரித்துப் பயன்டுத்துவது அரசியல் அறம் அற்ற போக்கு எனவும் கூறியுள்ளார்.
இது தொடர்பாக விசுவநாதன் ருத்ரகுமரன் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:- தந்தை பெரியாரையும் தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரனையும் எதிர்த் துருவங்களாக முன்னிறுத்தி நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமானால் கட்டியமைக்கபடும் பொய்விம்பத்தை நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் வன்மையாகக் கண்டிக்கிறது. இத்தகைய அணுகுமுறை தமிழீழ மக்களின் தேசிய விடுதலைப் போராட்டத்துக்கு தமிழ்நாடு மக்கள் வழங்கும் ஆதரவுக்கு கேடு விளைவிக்கக் கூடியது என்பதனையும் நாம் சுட்டிக் காட்ட விரும்புகிறோம்.
தேசியத் தலைவர் தமிழ்நாட்டின் உள்நாட்டு அரசியற் சூழலைக் கடந்து, ஒட்டு மொத்தத் தமிழ்நாடு மக்களும் அரசியற் கட்சிகளும் ஈழத் தமிழ் மக்களின் தேசிய விடுதலைப் போராட்டத்துக்கு ஆதரவு வழங்க வேண்டும் என்ற நிலைப்பாட்டைக் கொண்டிருந்தவர்.நமது விடுதலை இயக்கத்துக்கு கடினமான நேரங்களில் உறுதுணையாக நின்றவர்களுக்கு என்றும் மரியாதையுடன் மதிப்பளித்து வந்தவர்.
இதையும் படிங்க : “சீமான் – பிரபாகரன் சந்திப்பு உண்மை.. ஆனால் புகைப்படங்கள் வழங்கப்படவில்லை” – வெளிவந்த புது அறிக்கை!
தமிழ் உணர்வுடனும் தமிழீழ விடுதலைப் பற்றுடனும் திராவிட இயக்க வழிவந்த தோழர்கள் போராட்டத்தின் ஆரம்ப காலம் முதல் போராட்டத்துக்கு ஆற்றிய பங்களிப்பும் பணியும் என்றும் தேசியத் தலைவரதும் தமிழீழ மக்களதும் மனங்களை நெகிழச் செய்தவை. இத்தகைய நமது சொந்தங்களுக்கு எதிரான தளத்தில் நமது தேசியத் தலைவரை நிறுத்தும் முயற்சியினை சீமான் கைவிட வேண்டும் எனவும் நாம் அவரைக் கோருகிறோம்.தேசியத் தலைவரால் தனது மாவீரர் நாள் உரைகளிலும் அறிக்கைகளிலும் கடிதங்களிலும் செவ்விகளிலும் அவரால் உத்தியோகபூர்வமாகப் பதிவு செய்யப்பட்ட கருத்துகள் மட்டுமே அவரது கருத்துகளாகக் கருதப்படும்.இவற்றை விட அவர் சார்பில் கருத்துரைக்கவோ அல்லது அவரது கருத்துகளை தமது அரசியற் தேவைக்கேற்ப வளைத்துத் திரித்துப் பயன்படுத்தவோ எவரும் முனையின் அது அரசியல் அறம் அற்ற ஒரு போக்காகும். இத்தகைய அணுகுமுறை தேசியத் தலைவர் கடைப்பிடித்த அறநெறிக்கு முரணானது ஆகும்.
இதையும் படிங்க : “சீமானின் பிரபாகரனுடனான சந்திப்பு உண்மை… நேரில் பார்த்த பல போராளிகள் இன்னமும் இருக்கிறார்கள்” – தமிழீழ அரசியல் துறை வெளியிட்ட விளக்கம்!
தமிழீழ மக்களின் தேசியப் பிரச்சினையும் தமிழ்நாட்டு மக்களின் தேசியப்பிரச்சினையும் வேறுபட்டவை, தனித்துவமானவை. தமிழீழ மக்களின் தேசிய விடுதலைப் போராட்டத்தைத் தமிழீழ மக்களே தலைமை தாங்க முடியும் தலைமை தாங்க வேண்டும். சிங்களத்தின் தமிழின அழிப்பில் இருந்து எம்மைப் பாதுகாத்துக் கொள்ள தமிழ்நாட்டில் இருந்து கட்சி வேறுபாடு கடந்து பரந்து பட்ட ஆதரவைத் தமிழீழ மக்கள் எதிர்பார்க்கிறார்கள். இத்தகைய சூழலில். தமிழ்நாட்டின் உள்நாட்டு அரசியல் முரண்பாடுகளுக்குள் தமிழீழத் தேசியத் தலைவரையும் தமிழீழ விடுதலைப் போராட்டத்தையும் இழுத்து விடும் முயற்சிகளை சீமான் உட்பட எந்த அரசியற்கட்சித் தலைவர்களும் மேற்கொள்ளக்கூடாது என்பதே நமது வேண்டுதல் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
February 03, 2025 1:52 PM IST
Seeman | பெரியாரையும் பிரபாகரனையும் எதிர் துருவங்களாக முன்னிறுத்துவதா? – நாதகவுக்கு ‘நாடு கடந்த தமிழீழ அரசாங்கம்’ அமைப்பு கண்டனம்!