மும்பையில் நடந்த இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய விருது வழங்கும் விழாவில், சி.கே.நாயுடு வாழ்நாள் சாதனையாளர் விருதை சச்சினுக்கு ஐசிசி தலைவர் ஜெய் ஷா நேற்று வழங்கினார். 664 சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இந்தியாவுக்காக விளையாடியுள்ள அவர், 100 சதங்களை விளாசி ‘கிரிக்கெட்டின் கடவுள்’ என போற்றப்படுகிறார்.

அதேபோல 2024-ஆம் ஆண்டின் சிறந்த சர்வதேச கிரிக்கெட் வீரருக்கான விருதை ஜஸ்பிரித் பும்ரா பெற்றார். சிறந்த வீராங்கனைக்கான விருதை ஸ்மிருதி மந்தனா பெற்றார்.

அதுமட்டுமின்றி, சர்வதேச கிரிக்கெட் போட்டியில் அதிக ரன்களை எடுத்த வீராங்கனைக்கான விருதை ஸ்மிருதி மந்தனாவும், அதிக விக்கெட்டுகளை எடுத்த வீராங்கனைக்காக தீப்தி சர்மாவும் பெற்றனர்.

இதையும் படிங்க – சச்சின், பும்ரா முதல் அஸ்வின் வரை..! வீரர்களுக்கு நமன் விருதுகள் வழங்கி கவுரவித்த பிசிசிஐ

அண்மையில் ஓய்வு பெற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு பிசிசிஐ-யின் சிறப்பு விருது வழங்கப்பட்டது. சர்வதேச போட்டிகளில் அறிமுக வீரருக்கான விருதை சர்ஃபராஸ் கானும், சிறந்த அறிமுக வீராங்கனை விருது ஆஷா சோப்னாவுக்கும் வழங்கப்பட்டது.

இந்நிலையில் சச்சினுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது குறித்து விருதுநகர் மக்களவை தொகுதியின் காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் தனது எக்ஸ் பக்கத்தில், கிரிக்கெட்டில் அமித் ஷாவின் மகன் ஜெய் ஷாவின் பங்களிப்பு பூஜியமாக உள்ளது.

கவாஸ்கர், ரவி சாஸ்திரி போன்ற இந்தியாவுக்கு பெருமை சேர்த்தவர்கள் இருக்கும்போது சச்சினுக்கு ஜெய் ஷா விருது வழங்கியது நகைப்புக்குரியதாக உள்ளது என்று தெரிவித்துள்ளார். இவரது பதிவு கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி உள்ளது.

இதேபோன்று அவர் வெளியிட்டுள்ள இன்ஸ்டாகிராம் வீடியோவில், வாரிசு அரசியல் என்று பிரதமர் மோடி விமர்சித்து பேசுகிறார். ஆனால் அமித் ஷாவின் மகன் ஜெய் ஷாவுக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவத்தை பார்த்து அதிர்ந்து போனேன். உலகப் புகழ் பெற்ற கவாஸ்கர், ரவி சாஸ்திரி போன்ற வீரர்களை கைத்தட்ட சச்சினுக்கு ஜெய் ஷா விருது கொடுத்துள்ளார். இது எவ்வளவு அவமானகரமான விஷயம்! அமித் ஷாவின் மகன் என்பது மட்டும்தான் ஜெய் ஷாவின் ஒரே சாதனை. கிரிக்கெட்டி ஒரு ரன் கூட எடுத்தது கிடையாது. உள்ளூர் போட்டிகளிலும் விளையாடியது கிடையாது. சச்சின், கவாஸ்கர் போன்றவர்கள் அவமதிக்கப்படுகிறார்கள் என்பதற்கான எடுத்துக்காட்டு தான் இந்த விருது வழங்கும் நிகழ்ச்சி. இது மிகவும் வேதனை அளிக்கிறது. கண்டிக்க தக்கது என்று கூறியுள்ளார்.





Source link