சிவாஜி கணேசனின் சினிமா என்ட்ரி; முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் அனல் பறக்கும் வசனம்; என அரசியல் ரீதியாகவும், திரைத்துறை கண்ணோட்டத்திலும் பல்வேறு சிறப்புகளைக் கொண்ட படம் பராசக்தி; ரஜினி படத்திற்கு “சிவாஜி” என்ற டைட்டில் வைக்கப்பட்டதற்கே ரசிகர்கள் சிலர் எதிர்ப்புத் தெரிவித்த நிலையில், சிவாஜியின் முதல் படமான பராசக்தி என்ற பெயரை மீண்டும் பயன்படுத்துவது எளிதான காரியமா என்ன?

சுதா கொங்கரா இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயனின் 25-ஆவது படத்திற்கு “பராசக்தி” என பெயர் வைக்கப்பட்டு, அதன் டீசர் வெளியான போதே சிவாஜி ரசிகர்களிடம் இருந்து எதிர்ப்பு எழலாம் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், விஜய் ஆண்டனி ரூபத்தில் பிரச்சனை புது ரூட்டில் வந்தது. இயக்குநர் அருண் பிரபு இயக்கத்தில் விஜய் ஆண்டனியின் 25 ஆவது படத்தின் தெலுங்கு பதிப்புக்கும் பராசக்தி என்ற பெயரே வைக்கப்பட்டிருந்தது.

இதையும் படிக்க: 16 வயதில் பிரபல நடிகருடன் திருமணம்.. விவகாரத்துக்கு பின்னர் கம்பேக் கொடுத்த நடிகை

இரண்டு நாயகர்களின் 25-ஆவது படத்தின், ஒரே தலைப்பு, ஒரே நாளிலேயே வெளியாக பெரும் விவாதமாக மாறியது. தனது படத்துக்கான தெலுங்கு டைட்டிலை கடந்த ஆண்டு ஜூலை மாதமே பதிவு செய்ததாக விஜய் ஆண்டனி விளக்கம் அளித்தார். அதே சமயம், ஜனவரி 11 ஆம் தேதியே பராசக்தி என்ற தலைப்பை பதிவு செய்ததாக, சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தின் தயாரிப்பாளரான டான் பிக்சர்ஸ் நிறுவனம் கூறியது.

மேலும், பராசக்தி பட தலைப்பை சிவகார்த்திகேயனுக்கு வழங்கியதாகவும் ஏவிஎம் நிறுவனம் வாழ்த்து தெரிவித்தது. இதனையடுத்து, சிவகார்த்திகேயன் படத்தின் தயாரிப்பாளரும், விஜய் ஆண்டனியும் நேரில் சந்தித்து கை கோர்த்த நிலையில், “தமிழ் தீ பரவட்டும்” என்ற வாசகத்துடன் சிவகார்த்திகேயனின் பராசக்தி பட போஸ்டர் வெளியானது. இதனால், படத்தலைப்பு பிரச்சனை முடிவுக்கு வந்ததாக கருதப்பட்டது.

ஆனால், திடீர் திருப்பமாக, பராசக்தி படத்தின் பெயரை யாரும் பயன்படுத்தக் கூடாது என்று அப்படத்தை தயாரித்த நேஷனல் பிக்சர்ஸ் நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது. நேஷனல் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் பெருமாள் முதலியார் பராசக்தி படத்தை தயாரித்ததாகவும், சில பகுதிகளின் விநியோக உரிமை மட்டுமே ஏவிஎம் வசம் இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: பிகினி உடையில் சூப்பர் ஹிட் படத்தில் நடித்த நடிகை.. பின் நெருக்கமான காட்சிகளுக்கு ‘நோ’.. யார் அந்த நடிகை?

கருணாநிதியின் கனல் தெறிக்கும் வசனங்களும், சிவாஜியின் உணர்ச்சிகரமான நடிப்பும் மக்கள் மனதில் நிலைத்து நிற்கும் நிலையில், விரைவில் “பராசக்தி” படம் பவள விழா காண உள்ளதாக நேஷனல் பிக்சர்ஸ் குறிப்பிட்டுள்ளது. எனவே, அப்படத்தை டிஜிட்டல் வடிவில் மேம்படுத்தி வெளியிட திட்டமிட்டு இருப்பதாகக் கூறியுள்ள தயாரிப்பு நிறுவனம், பராசக்தி படத்தின் தலைப்பை வேறு யாரும் தங்கள் படங்களுக்கு பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.

பராசக்தி படத்தின் தலைப்பை யார் பயன்படுத்துவது என்பதில் தொடங்கிய பிரச்சனை, தற்போது பராசக்தி படத்தின் உண்மையான உரிமையாளர் யார் என்ற வினாவில் வந்து நிற்கிறது. பராசக்தியின் அருள் யாருக்கு கிட்டும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.



Source link