நடிகை நயன்தாரா மீது வழக்கு தொடர தனுஷின் வொண்டர்பார் நிறுவனத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையான நயன்தாராவும், பிரபல இயக்குநர் விக்னேஷ் சிவனும் 2022-ஆம் ஆண்டு ஜூன் மாதம் 9-ஆம் தேதி திருமணம் செய்து கொண்டனர். சென்னை அருகே மாமல்லபுரத்தில் உள்ள தனியார் ரிசார்ட்டில் பிரமாண்டமாக நடந்த திருமணத்தில் முக்கியமான திரை பிரபலங்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் கலந்து கொண்டனர். திருமணத்தின் போது அது குறித்து வீடியோ வெளியாகாத நிலையில், திருமண நிகழ்வுடன் சேர்த்து, நயன்தாரா – விக்னேஷ் சிவனின் காதல் வாழ்க்கை, ‘Nayanthara: Beyond the Fairytale’ என்ற பெயரில் ஆவணப்படமாக தயாரானது.
2 ஆண்டுகளுக்கு மேலாக இந்த ஆவணப்படம் வெளியாகாததற்கு, ‘நானும் ரவுடிதான்’ படத்தின் காட்சிகளை பயன்படுத்த, அந்த படத்தின் தயாரிப்பாளரும் நடிகருமான தனுஷ் அனுமதிக்கவில்லை என நயன்தாரா குற்றம்சாட்டியிருந்தார்.
மேலும், டிரெய்லரில் 3 நொடி காட்சியை பயன்படுத்தியதற்கு தனுஷ் 10 கோடி ரூபாய் இழப்பீடு கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளதாகவும் குறிப்பிட்டிருந்த நயன்தாரா, தனுஷை கடுமையாக விமர்சித்து அறிக்கை வெளியிட்டிருந்தார்.
அறிக்கையில், தனுஷின் தொடர்ச்சியான பழிவாங்கும் நடவடிக்கைகளால் தானும், தனது கணவரும் மட்டுமின்றி ஆவணப்பட பணிகளில் பங்காற்றிய அனைவரும் பாதிப்படைந்திருப்பதாகவும் கூறியிருந்தார். கீழ்தரமான இந்த செயல், ஒரு மனிதராக தனுஷ் எப்படிப்பட்டவர் என்பதை வெளிச்சம்போட்டுக் காட்டுவதாகக் கூறிய நயன்தாரா, மேடைகளில் பேசுவதைப் போல், ஒரு சதவீதம் கூட தனுஷால் நடந்துகொள்ள முடியாது என்பதை அறிந்திருப்பதாகவும் விமர்சித்திருந்தார்.
தொடர்ந்து தனுஷ் அனுமதி தராதநிலையிலும் ஆவணப்படத்தில் ‘நானும் ரவுடிதான்’ படக் காட்சிகள் இடம்பெற்றிருந்தன.
இந்தநிலையில் தான் தற்போது நயன்தாராவுக்கு எதிராக வழக்கு தொடர தனுஷுக்கு உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி, நயன்தாராவுக்கு எதிராக உரிமையியல் வழக்கு தொடர தனுஷின் வொண்டர்பார் நிறுவனத்துக்கு அனுமதி வழங்கிய சென்னை உயர் நீதிமன்றம், மனு தொடர்பாக நயன்தாரா மற்றும் அவரது கணவர் விக்னேஷ் சிவன் ஆகியோர் பதிலளிக்கவும் உத்தரவிட்டது.
.