Last Updated:

கலைத்துறையில் சிறந்த பங்களிப்பை செலுத்தியதற்காக நடிகர் அஜித்குமாருக்கு மத்திய அரசு பத்ம பூஷண் விருது வழங்கி கௌரவித்துள்ளது. இது குறித்து அஜித் உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். 

News18

கலைத்துறையில் சிறந்த பங்களிப்பை செலுத்தியதற்காக நடிகர் அஜித்குமாருக்கு மத்திய அரசு பத்ம பூஷண் விருது வழங்கி கௌரவித்துள்ளது. இது குறித்து அஜித் உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பாக அஜித் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு: “இந்திய குடியரசுத் தலைவரால் மதிப்பிற்குரிய பத்ம விருதை பெறுவதில் பெருமையடைகிறேன். இந்த மரியாதையை எனக்கு வழங்கிய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மற்றும் பிரதமர் மோடிக்கு எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

இப்படியான உயர்மட்ட அங்கீகாரத்தை பெறுவது எனக்கு கிடைத்த பாக்கியமாக கருதுகிறேன். நமது தேசத்துக்கான எனது பங்களிப்புக்கு கிடைத்த இந்த அங்கீகாரத்துக்கு நன்றியுடையவனாக இருக்கிறேன். அதே நேரம் இந்த அங்கீகாரம் எனக்கான தனிப்பட்ட பாராட்டு மட்டுமல்லாமல், பலரின் கூட்டு முயற்சிகள் மற்றும் ஆதரவின் சான்று என்பதையும் நினைவில் கொள்கிறேன்.

திரைப்படத்துறையைச் சேர்ந்த அனைவருக்கும் இந்த நேரத்தில் நன்றியை உரித்தாக்கி கொள்கிறேன். உங்கள் உத்வேகம், ஒத்துழைப்பு மற்றும் ஆதரவு எனது பயணத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. மோட்டார் ரேஸிங் குழுமம் மற்றும் பிஸ்டல், ரைஃபிள் ஷூட்டிங் கூட்டமைப்பு உள்ளிட்டோர் இத்தனை ஆண்டுகள் எனக்கு வழங்கிய ஆதரவுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

விளையாட்டுத் துறையில் ஊக்கமளித்ததற்காக மெட்ராஸ் மோட்டார் ஸ்போர்ட்ஸ் கிளப் (MMSC), இந்திய மோட்டார் ஸ்போர்ட்ஸ் கிளப்களின் கூட்டமைப்பு (FMSCI), தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் (SDAT), இந்திய தேசிய துப்பாக்கி சங்கம், சென்னை ரைபிள் கிளப் உள்ளிட்டோருக்கு நன்றி. அன்புக்கும், ஆதரவுக்கும் புகலிடமாகவும், எனது பலமாகவும் இருக்கும் குடும்பத்துக்கும், நண்பர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

மறைந்த என் தந்தை இந்த நாளை காண இருந்திருக்க வேண்டும் என விரும்புகிறேன். ஆனால் நான் செய்யும் அனைத்திலும் அவரின் ஆன்மா இருப்பதை எண்ணி அவர் பெருமைப்படுவார் என நினைக்கிறேன். என்னை இந்த இடத்துக்கு உயர்த்த அனைத்து தியாகங்களையும் செய்த அம்மாவின் அளவுகடந்த அன்புக்கு நன்றி.

25 வருட அற்புதமான தோழியும், இணையரும், எனது வெற்றிக்கு அடித்தளமாக இருப்பவருமான எனது மனைவி ஷாலினிக்கு, என் குழந்தைகளான அனோஷ்கா மற்றும் ஆத்விக் ஆகியோருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

எனது நலம் விரும்பிகள், ரசிகர்களின் அன்பும், அசைக்க முடியாத ஆதரவும் தான் எனது ஆர்வத்தையும் அர்பணிப்பையும் தூண்டியது. இந்த விருது என்னுடையது போலவே உங்களுடையதும் தான். இந்த நம்பமுடியாத மரியாதைக்குரிய பயணத்தில் ஒரு பகுதியாக இருந்த உங்கள் அனைவருக்கும் நன்றி.

நேர்மையுடனும் ஆர்வத்துடனும் தொடர்ந்து சேவை செய்ய நான் கடமைப்பட்டுள்ளேன். மேலும் உங்கள் சொந்த பயணங்களில் நீங்கள் அனைவரும் நன்றாக இருக்க விரும்புகிறேன்” என தெரிவித்துள்ளார்.



Source link