இணையதளங்களில் நுழையும்போது “நான் ஒரு ரோபோ அல்ல” (I’m not a robot) என்று ஒரு பெட்டியைக் கிளிக் செய்திருப்பீர்கள் அல்லது மங்கலான போக்குவரத்து விளக்குகளை அடையாளம் காட்டியிருப்பீர்கள். இது வெறும் பாதுகாப்பிற்காக மட்டும் என்று நீங்கள் நினைத்திருந்தால், அது தவறு. இதற்குப் பின்னால் ஒரு பிரம்மாண்டமான “இலவச உழைப்புச் சுரண்டல்” மற்றும் “தொழில்நுட்பப் புரட்சி” ஒளிந்திருந்தது.

1. மங்கலான எழுத்துக்களும் மனித உழைப்பும்
2007-ல் இந்தத் திட்டம் தொடங்கியபோது, பழைய புத்தகங்களை டிஜிட்டல் மயமாக்குவதில் ஒரு சிக்கல் இருந்தது. கம்ப்யூட்டர்களால் சிதைந்த அல்லது மங்கலான எழுத்துக்களைப் படிக்க முடியவில்லை. அதற்கு கூகுல் ஒரு தந்திரத்தைக் கையாண்டது.

உங்களுக்குக் காட்டப்பட்ட இரண்டு வார்த்தைகளில், ஒன்று கூகுளுக்குத் தெரிந்த “பாதுகாப்பு வார்த்தை”, இன்னொன்று கம்ப்யூட்டரால் படிக்க முடியாத “புத்தக வார்த்தை”. நீங்கள் அதைத் துல்லியமாக டைப் செய்தபோது, ஒரு சதம் கூட வாங்காமல் இலவசமாக Google Books மற்றும் The New York Times போன்ற ஆவணங்களை டிஜிட்டல் மயமாக்க கூகுளுக்கு உதவியிருக்குறீர்கள்
கூகுள் புக்ஸ் (Google Books): மங்கலான அல்லது சிதைந்த எழுத்துக்கள் கொண்ட லட்சக்கணக்கான பழைய புத்தகங்களை டிஜிட்டல் முறைக்கு மாற்ற கூகுள் உங்கள் உதவியைப் பெற்றது. கம்ப்யூட்டரால் (OCR மென்பொருள்) படிக்க முடியாத வார்த்தைகளை நீங்கள் டைப் செய்தபோது, அந்தப் புத்தகங்கள் துல்லியமாக ஆவணப்படுத்தப்பட்டன
தி நியூயார்க் டைம்ஸ் (The New York Times): 1851-ஆம் ஆண்டிலிருந்து அந்தப் பத்திரிகை வெளியிட்ட சுமார் 13 மில்லியன் கட்டுரைகளை டிஜிட்டல் மயமாக்கும் பணியில் reCAPTCHA பயன்படுத்தப்பட்டது. இதன் மூலம் வரலாற்றுச் சிறப்புமிக்க செய்திகள் அனைத்தும் கணினித் தேடலுக்கு ஏற்றவாறு மாற்றப்பட்டன

2. தானியங்கி கார்களுக்குப் பயிற்சியளித்தல்
காலப்போக்கில் வார்த்தைகள் மறைந்து படங்கள் வந்தன. “இதில் எதிலெல்லாம் மோட்டார் சைக்கிள் இருக்கிறது?”, “டிராபிக் சிக்னல்களைத் தேர்ந்தெடுங்கள்” எனப் புதுப்புது வேலைகள் நமக்குத் தரப்பட்டன.
இங்கேதான் கூகுலின் மாஸ்டர் பிளான் இருந்தது. கூகுளின் Waymo எனப்படும் தானியங்கி கார்களுக்கு (Self-driving cars) சாலைகளை அடையாளம் காணப் பயிற்சி தேவைப்பட்டது. உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான மக்கள் அந்தப் படங்களைக் கிளிக் செய்ததன் மூலம், அந்தக் கார்களுக்கு எது சாலை, எது சிக்னல் என்பதை இலவசமாகப் புரிய வைத்தனர். உண்மையில், நாம் ஒரு ரோபோ அல்ல என்பதை நிரூபிக்க, இன்னொரு ரோபோவுக்கு ஆசிரியராக மாறியிருக்கிறோம்
3. மவுஸ் அசைவுகளின் மர்மம்
இன்று பல இடங்களில் படங்கள் தெரிவதில்லை. வெறும் ஒரு ‘கிளிக்’ மட்டுமே போதும். இது எப்படி வேலை செய்கிறது? அந்த ஒரு நொடியில் கூகுல் உங்கள் மவுஸ் நகரும் வேகத்தையும், அதன் வளைவுகளையும் கண்காணிக்கிறது
ரோபோக்கள் மிக நேர்த்தியாக மவுஸை நகர்த்தும், ஆனால் மனிதர்களின் கைகளில் ஒரு மெல்லிய நடுக்கம் இருக்கும். இந்த “மனிதத் தன்மையை” வைத்து நீங்கள் ரோபோ அல்ல என்பதை கூகுள் உறுதி செய்கிறது. இதையும் தாண்டி, உங்களின் முந்தைய இணையத் தேடல்கள் மற்றும் குக்கீ கோப்புகளைக் (Cookies) கவனிப்பதன் மூலம் உங்களைப் பற்றிய ஒரு டிஜிட்டல் வரைபடத்தை அது உருவாக்குகிறது
4. இந்தத் தரவுகள் எங்கே போகின்றன?
இந்த இலவச உழைப்பின் மூலம் கூகுல் பல வழிகளில் லாபம் ஈட்டுகிறது
- நிறுவனக் கட்டணம்: பெரிய நிறுவனங்கள் இந்தப் பாதுகாப்பைப் பயன்படுத்த கூகுளுக்குக் கோடி கணக்கில் பணம் செலுத்துகின்றன
- செயற்கை நுண்ணறிவு: உலகின் மிகச்சிறந்த AI மாடல்களை உருவாக்குவதற்கான “டேட்டா” (Data) நமது கிளிக்குகள் மூலம் கிடைக்கிறது
- விளம்பரங்கள்: நம்முடைய நடத்தையை ஆய்வு செய்து, நமக்குத் தேவையான விளம்பரங்களைக் காட்டி லாபம் சம்பாதிக்கிறது.
- முடிவுரை
“எந்த ஒரு சேவை இலவசமாகக் கிடைக்கிறதோ, அங்கே நீங்கள்தான் ஒரு விற்பனைப் பொருள்” ( If you are not paying for the product, you are the product) என்ற பழமொழி reCAPTCHA-விற்குப் பொருந்தும். நாம் பாதுகாப்பிற்காகச் செய்கிறோம் என்று நினைக்கும் ஒவ்வொரு கிளிக்கும், சிலிக்கான் வேலியில் இருக்கும் ஒரு பிரம்மாண்டமான இயந்திரத்திற்கு எரிபொருளாக மாறுகிறது.


