பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்தான் தாக்கல் செய்வார் என்பது எல்லோருக்கும் தெரியும். அந்த பட்ஜெட்டின் உருவாக்கத்தில் பல்வேறு துறை நிபுணர்கள், அதிகாரிகளின் பங்களிப்பும் முக்கியமானதாக இருக்கும். அந்த வகையில் பட்ஜெட் உருவாக்கத்தில் இடம்பெற்ற நிர்மலா சீதராமன் அணியின் 5 முக்கிய அதிகாரிகளை பார்க்கலாம்.

நிதித்துறை செயலாளர் துஹின் காந்தா பாண்டே

துஹின் காந்தா பாண்டே தற்போது நிதி மற்றும் வருவாய்த்துறை செயலாளராக பணியாற்றி வருகிறார். பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு, மத்திய பட்ஜெட் 2025 க்கு சில மாதங்களுக்கு முன்னதாகவே அவரை வருவாய் துறை செயலாளராக நியமித்தது . வருவாய்த் துறை, பொருளாதார விவகாரத் துறை, செலவினத் துறை உள்ளிட்ட நிதி அமைச்சகத்தின் அனைத்துத் துறைகளுக்கும் இடையேயான முக்கிய தகவல் தொடர்பு அதிகாரியாக பாண்டே செயல்பட்டு, பட்ஜெட் உருவாக்கத்தில் முக்கியமானவராக இருப்பார். வருமான வரிச் சட்டத்தை திருத்தும் பணியையும் அவர் கையாளுகிறார் என்றும் கூறப்படுகிறது.

CEA (தலைமை பொருளாதார ஆலோசகர்) ஆனந்த நாகேஸ்வரன்

மத்திய பட்ஜெட் 2025 சமர்ப்பிக்கப்படுவதற்கு ஒரு நாள் முன்னதாக, அதாவது ஜனவரி 31 அன்று பொருளாதார ஆய்வு அறிக்கை சமர்ப்பிக்கப்படும். விவசாயம், தொழில், சேவைகள் போன்ற இந்தியாவின் பொருளாதாரத் துறைகளின் நிலைமை பற்றிய விரிவான கண்ணோட்டத்தை இந்த ஆவணம் வழங்குகிறது. தலைமை பொருளாதார ஆலோசகர் அனந்த நாகேஸ்வரன் இந்த பொருளாதார ஆய்வறிக்கையை பார்வையிட்டு அதன் உருவாக்கத்தில் முக்கிய பங்கு வகிப்பார்.

செலவின துறை செயலர் மனோஜ் கோவில்

நிர்மலா சீதாராமனின் நிதியமைச்சகத்தின் செலவினத் துறையின் செயலாளராக மனோஜ் கோவில் உள்ளார் . அவர் ஒரு ஐஐடி பட்டதாரி ஆவார், அவர் பொதுக் கொள்கையில் (Public Policy) முதுகலைப் பட்டம் மற்றும் பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் முனைவர் பட்டம் பெற்றார். பட்ஜெட் 2025 தயாரிப்பின் கீழ் மானியங்கள் குறித்த அறிவிப்புகள், அரசால் நடத்தப்படும் திட்டங்களில் செலவினங்களை அதிகரிப்பது போன்ற முக்கிய பணிகளை அவர் கையாளுகிறார்.

இதையும் படிங்க – Budget 2025 Date : மத்திய பட்ஜெட் 2025 எப்போது தாக்கல் செய்யப்படுகிறது? முக்கிய அம்சங்கள் என்னவாக இருக்கும்?

நிதி சேவைகள் துறை செயலர் எம்.நாகராஜு

எம் நாகராஜு, இந்தியாவில் செயல்படும் பல்வேறு நிதிச் சேர்க்கை திட்டங்களை மதிப்பாய்வு செய்வதற்காக பொதுத்துறை வங்கிகளின் தலைவர்களுடன் பல சந்திப்புகளை நடத்தினார். மத்திய பட்ஜெட்டில் கடன், காப்பீடு உள்ளிட்டவை குறித்த அறிவிப்புகளை நாகராஜு தயாரிப்பார் என்று கூறப்படுகிறது.

பொருளாதார விவகாரங்கள் துறை செயலர் அஜய் சேத்

பொருளாதார விவகாரங்கள் துறையின் செயலாளரான அஜய் சேத், 1987 பேட்ச்சைச் சேர்ந்த கர்நாடக அதிகாரி ஆவார். 33 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவத்தை பெற்ற அவர், 18 ஆண்டுகளாக பொது நிதி மற்றும் வரிவிதிப்பு ஆகியவற்றில் விரிவாக பணியாற்றியுள்ளார். இவரும் மத்திய பட்ஜெட் உருவாக்கத்தில் முக்கிய பங்கு வகிக்கிறார்.



Source link