சென்னையில் நடந்த புஷ்பா-2 பட புரோமோஷன் நிகழ்ச்சி, இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் மற்றும் தயாரிப்பு நிறுவனம் இடையிலான மோதலை வெளிச்சம்போட்டுக் காட்டியது.
புஷ்பா 2 படத்தின் தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸின் ரவிசங்கர் குறித்து இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத், சென்னையில் நடந்த நிகழ்வில் கொந்தளித்தார். அதில், ‘‘நீங்கள் என்னை விரும்புகிறீர்கள் என்று தெரியும், ஆனால் என் மீதான அன்பை விட என் மீது உங்களுக்கு அதிக புகார்கள் இருப்பது போல் தெரிகிறது’’ என ரவி குறித்து பொது மேடையிலேயே போட்டுடைத்தார் தேவி ஸ்ரீ பிரசாத்.
அல்லு அர்ஜூன், ராஷ்மிகா கூட்டணியில் உருவான புஷ்பா-1 பட வெற்றியில் இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத்தின் பங்கும் அளப்பரியது. இந்தப் படம் சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதையும் அவருக்குப் பெற்றுக்கொடுத்தது. ஆனால் ‘புஷ்பா 2’ படத்தின் பாடல்களுக்கு இசையமைத்தாலும், பின்னணி இசைப் பொறுப்பில் இருந்து தேவி ஸ்ரீ பிரசாத் அதிரடியாக நீக்கப்பட்டார். அவருக்குப் பதிலாக தமன், சாம் சி.எஸ், அஜ்னிஷ் லோக்நாத் ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள்.
பின்னணி இசையில் இருந்து நீக்கப்பட்டதற்கான காரணம் தெரியாமல் இருந்த நிலையில், சென்னையில் நடந்த புஷ்பா 2 பட விளம்பர நிகழ்ச்சி காரணத்தை வெளிச்சம்போட்டுக் காட்டியது.
புஷ்பா படத்தில் பணியாற்றியபோது, மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்துடன் ஏற்பட்ட புகைச்சல் தேவி ஸ்ரீ பிரசாத்தின் மற்றொரு பட வாய்ப்பையும் பறித்தது. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடிக்கும் ‘குட் பேட் அக்லி’ படத்தில் இருந்தும் இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் நீக்கப்பட்டார். அவருக்குப் பதில் ஜி.வி.பிரகாஷ் அல்லது அனிருத் இசையமைக்க உள்ளதாகக் கூறப்படுகிறது.
அஜித் படத்தில் தேவி ஸ்ரீ பிரசாத் நீக்கத்திற்கு, கங்குவா பட விமர்சனமும் காரணமாகச் சொல்லப்படுகிறது.
சூர்யா நடித்த இந்தப் படத்தின் ஒலிச் சத்தத்தை முன்வைத்து பலரும் கடுமையாக விமர்சித்தார்கள். பின்னர் திரையரங்குகளில் ஒலி அளவைக் குறைக்கச் சொன்னதையும் மறந்துவிட முடியாது.
எது எப்படியோ, இனி மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் படத்தில், இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இணைந்து பணியாற்றுவது சந்தேகமே.
.