Last Updated:

36 வயதான புஜாரா, கடைசியாக 2021-23 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக விளையாடினார்.

கம்பீர் – புஜாரா

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர்-கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் இந்திய அணியின் பேட்டிங் வரிசை தொடர்ந்து சொதப்பி வருவதால், அனுபவ வீரர் சேதேஷ்வர் புஜாராவை மீண்டும் அணியில் சேர்க்க தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீர் தீவிரமாக முயன்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் மோதும் பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இதுவரை நடந்த 4 போட்டிகளில், இந்திய அணி 1-2 என்ற நிலையில் பின்னடைவை சந்தித்துள்ளது. ரோகித் சர்மா, விராட் கோலி போன்ற மூத்த வீரர்கள் தொடர்ந்து சொதப்பி வருவதால் இந்திய அணி தோல்வியை தழுவுகிறது என ரசிகர்கள் விமர்சனம் வைத்து வருகிறார்கள்.

இந்த நிலையில், ஆங்கில செய்தி நிறுவனமான “இந்தியன் எக்ஸ்பிரஸ்” தகவல்படி, கம்பீர் புஜாராவை டெஸ்ட் அணியில் மீண்டும் சேர்க்க விரும்பினார் என்றும், ஆனால் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) தேர்வுக்குழு அந்த கோரிக்கையை நிராகரித்து விட்டது என்றும் கூறப்பட்டுள்ளது. பெர்த் டெஸ்டில் இந்தியா வெற்றி பெற்ற பிறகும் கம்பீர் புஜாராவின் திறமையை பற்றி தொடர்ந்து பிசிசிஐ-யிடம் பேசியதாக கூறப்படுகிறது.

இதையும் படிக்க: இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடர்… ரோஹித், கோலி, பும்ராவுக்கு ஓய்வு அளிக்க முடிவு

தற்போது சௌராஷ்டிரா அணிக்காக விளையாடும் 36 வயதான புஜாரா, கடைசியாக 2021-23 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக விளையாடினார். குறிப்பாக, 2018 மற்றும் 2020/21 ஆஸ்திரேலிய சுற்றுப்பயணங்களில் புஜாரா தனது சிறப்பான ஆட்டத்தால் இந்திய அணியின் வெற்றிக்கு பெரிதும் உதவினார். 2018ஆம் ஆண்டு தொடரில் புஜாரா அதிகபட்சமாக 521 ரன்கள் குவித்தார். கடந்த 2020/21 தொடரில், காபா டெஸ்டில் அவர் 56 ரன்கள் எடுத்திருந்தாலும், 211 பந்துகளை எதிர்கொண்டு ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்களின் வேகத்தைக் கட்டுப்படுத்திய விதம் இன்றளவும் பேசப்படுகிறது.

புஜாராவின் டிஃபன்ஸ் அணுகுமுறை ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்களுக்கு பெரும் சவாலாக இருந்து வந்துள்ளது. ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் ஜோஷ் ஹேசல்வுட் கூட ஒருமுறை புஜாராவை எதிர்கொள்ள வேண்டியதில்லை என்பதில் மகிழ்ச்சி தெரிவித்திருந்தார். இந்திய அணியில் தற்போது புஜாராவைப் போன்ற ஒரு வீரர் இல்லாதது தெளிவாக தெரிகிறது. அவரது இடத்தில் தேவ்தத் படிக்கல், சுப்மன் கில் மற்றும் கே.எல்.ராகுல் ஆகியோர் விளையாடியும் புஜாராவின் வெற்றிடத்தை நிரப்ப முடியவில்லை. ராகுல் ஓரளவுக்கு புஜாராவின் பாணியில் விளையாடி ரன்களை குவித்தாலும், ஆஸ்திரேலியாவின் பலம் வாய்ந்த பந்துவீச்சை எதிர்கொள்ள புஜாராவின் அனுபவம் மிகவும் உதவியிருக்கும் என்று கிரிக்கெட் வல்லுநர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

தற்போது ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலியா 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. ஆனால் கடைசி டெஸ்டில் வெற்றி பெற்று தொடரை வெல்லும் முனைப்பில் இந்திய அணி உள்ளது. எனவே இந்திய அணி தொடரை சமன் செய்து பார்டர் – கவாஸ்கர் கோப்பையை தக்கவைக்க கடுமையாக போராடும் என எதிர்பார்க்கப்படுகிறது.



Source link