எட்டு அணிகள் பங்கேற்கும் 9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் (பெப்ரவரி) 19ம் திகதி முதல் மார்ச் 9ம் திகதி வரை பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடக்கிறது.

பாதுகாப்பு காரணங்களுக்காக இந்திய அணி பாகிஸ்தானுக்கு செல்ல மறுத்ததால் இந்திய அணிக்குரிய ஆட்டங்கள் மட்டும் துபாய்க்கு மாற்றப்பட்டுள்ளது. ‘ஏ’ பிரிவில் அங்கம் வகிக்கும் இந்திய அணி தனது தொடக்க லீக்கில் பெப்ரவரி 20ம் திகதி வங்காளதேசத்தையும், 23ம் திகதி பாகிஸ்தானையும், மார்ச்.2ம் திகதி நியூசிலாந்தையும் சந்திக்கிறது. இந்த தொடருக்கான இந்திய அணி ரோகித் சர்மா தலைமையில் அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக மும்பையில் புகழ்பெற்ற வான்கடே கிரிக்கெட் ஸ்டேடியம் கட்டப்பட்டு 50 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டது. இதன் 50 ஆண்டுகால கொண்டாட்டம் மும்பை கிரிக்கெட் சங்கம் சார்பில் நேற்று நடைபெற்றது. இதில் சாம்பியன்ஸ் டிராபி காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது.

இந்த நிகழ்ச்சியில் பேசிய ரோகித் சர்மா, “டி20 உலகக் கிண்ணத்தினை வென்று தாயகம் திரும்பியபோது, மும்பையில் நடந்த வெற்றி ஊர்வலத்தை மறக்க முடியாது. உலகக் கிண்ணத்தினை வென்று, அதனை உள்ளூர் மக்களுடன் கொண்டாடுவது வித்தியாசமான உணர்வை ஏற்படுத்தும். விரைவில் ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி நடைபெற உள்ளது. இந்த தொடரில் பங்கேற்க நாங்கள் துபாய் சென்றடையும்போது, நிச்சயம் 140 கோடி இந்தியர்களின் வாழ்த்துகள் எங்களுடன் இருக்கும். சாம்பியன்ஸ் டிராபியை வென்று வான்கடே ஸ்டேடியத்துக்கு மீண்டும் கொண்டு வருவோம்” என்று கூறினார்.



Source link