துபாய் வாழ் இந்திய பணக்காரர்களில் ஒருவரும், பேராசிரியராக தனது வாழ்க்கையைத் தொடங்கியவருமான ஆசாத் மூப்பன் தற்போது, ரூ.23,022 கோடி ரூபாய் மதிப்பிலான நிறுவனத்தை நடத்தி வருகிறார். ஒரு இந்திய சுகாதார தொழில்முனைவோர், மருத்துவர் மற்றும் தொழிலதிபரான ஆசாத் மூப்பன் துபாயில் ஓர் முக்கிய தொழிலதிபராக விளங்கி வருகிறார். இந்தியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் 1987 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டு நடத்தப்பட்டு வரும் ஆஸ்டர் டிஎம் ஹெல்த்கேரின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநரான இவர், ஆசியா-பசிபிக் பகுதியில் பல சுகாதார வசதிகளை உருவாக்கி வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது.
பல இந்தியர்கள் சிறந்த வாய்ப்புகளுக்காக ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட பிற நாடுகளுக்குச் செல்கின்றனர். அவர்களில் பலர் இப்போது பல ஆயிரம் கோடி மதிப்புள்ள நிறுவனங்களை வைத்திருக்கிறார்கள். அப்படிப்பட்டவர்களில் ஒருவர் தான் ஆசாத் மூப்பன், ஒரு இந்திய சுகாதார தொழில்முனைவோரான இவர், 1987 இல் துபாய்க்கு குடிபெயர்ந்தார். அவர் இப்போது துபாயில் உள்ள பணக்கார இந்தியர்களில் ஒருவராகவும், ஐக்கிய அரபு எமிரேட்ஸில் பிரபலமான மனிதராகவும் மாறி உள்ளார். ஆஸ்டர் டிஎம் ஹெல்த்கேரின் நிறுவனரான ஆசாத் மூப்பனின் சந்தை மதிப்பு ரூ.23,022 கோடி என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
71 வயதான அவர், 1982 இல் கோழிக்கோடு அரசு மருத்துவக் கல்லூரியில், மருத்துவ விரிவுரையாளராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார். பின்னர், 1987 இல் அவர் துபாய்க்கு இடம்பெயர முடிவு செய்தார். அங்கு ஒரு மருத்துவர் மட்டும் இருக்கும் ஓர் சிறய கிளினிக்கை தொடங்கி, தற்போது ஆஸ்டர் டிஎம் ஹெல்த்கேர் என்கிற ஒரு உலகளவில் பிரபலமான ஹெல்த்கேர் குழுமமாக தனது நிறுவனத்தை வளர்த்துள்ளார்.
எம்பிபிஎஸ்-ல் தங்கப் பதக்கம் வென்ற ஆசாத் மூப்பன், கேரளாவின் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள கல்பகஞ்சேரியில் பிறந்தவர். இவர் சுதந்திரப் போராட்ட வீரரும், சமூகத் தலைவருமான மறைந்த மண்டையபுரத் அகமது உன்னி மூப்பனின் மகன் ஆவார். கேரளாவின் கோழிக்கோடு மருத்துவக் கல்லூரியில் பொது மருத்துவத்தில் முதுகலை பட்டம் பெற்ற ஆசாத் மூப்பன், டெல்லி பல்கலைக்கழகத்தில் மார்பு நோய் (Chest Diseases) குறித்த பட்டையப்படிப்பும் படித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
நசீரா ஆசாத் என்பவரை மணந்த இவருக்கு அலிஷா மூப்பன், ஜிஹாம் மூப்பன் மற்றும் ஜெபா மூப்பன் ஆகிய மூன்று மகள்கள் உள்ளனர். ஆசாத் மூப்பனின் சுகாதாரப் பேரரசு ஆப்பிரிக்கா, இந்தியா மற்றும் வளைகுடா கூட்டுறவு கவுன்சில் (GCC) உட்பட ஒன்பது நாடுகளில் பரவியுள்ளது. இவரது குழுமத்தில் 20,790 பேர் பணிபுரிகின்றனர் மற்றும் நிறுவனத்தின் இணையதளத்தில் வழங்கப்பட்டுள்ள தகவல்படி மருத்துவமனைகள், கிளினிக்குகள் மற்றும் மருந்தகங்கள் உட்பட 323 வசதிகளை நிறுவனம் கொண்டுள்ளது.
போர்ப்ஸ் பத்திரிகையின் படி, ஐக்கிய அரபு அமீரகத்தின் சிறந்த 100 இந்தியத் தலைவர்கள் பட்டியலில் ஆசாத் மூப்பனுக்கு 6 வது இடம் வழங்கப்பட்டுள்ளது. மேலும் அரேபிய பிசினஸ் பத்திரிகையின்படி மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள 50 பணக்கார இந்தியர்களில் இவர் 29 வது இடத்தைப் பெற்றுள்ளார்.
.