Last Updated:
காட்டுத்தீயின் பதற்றமான சூழ்நிலையில் சட்ட விதிமீறல் சம்பவங்களும் அதிகரித்துள்ளதால் காவல்துறையினரின் பணிச்சுமை அதிகரித்துள்ளது.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் கடந்த ஜனவரி 7-ம் தேதி தொடங்கிய காட்டுத்தீ, லாஸ் ஏஞ்சல்ஸ் நகருக்குள் பரவி குடியிருப்பு பகுதிகளை கடுமையாக சேதப்படுத்தி வருகிறது. கலிபோர்னிய வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு பேரழிவை ஏற்படுத்தியுள்ள இந்த தீ மேலும் பரவும் அபாயம் உள்ளதால் பெரும் அச்சம் ஏற்பட்டுள்ளது. உலகின் வல்லரசு நாடுகளில் ஒன்றான அமெரிக்காவே இந்த தீயை கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருவது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது.
தீவிரமடையும் பேரழிவு:
இந்த தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 16 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 13 பேரை காணவில்லை. உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கக்கூடும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இந்த சூழ்நிலையை போர்ச்சூழலுக்கு நிகராக ஒப்பிட்டுள்ளார். கனடா மற்றும் மெக்சிகோ நாடுகளும் மீட்பு பணிகளில் உதவி செய்து வருகின்றன. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவுக்கு தீ பரவியுள்ளதால் மேலும் பல வீடுகள் சாம்பலாகியுள்ளன. மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்தாலும், அவை பெரும் சவாலாக உள்ளன.
மேலும் பரவும் அபாயம்:
மோசமான வானிலை காரணமாக தீ மேலும் பரவும் என தேசிய வானிலை சேவை எச்சரித்துள்ளது. சாண்டா அனா மலைப்பகுதிகளில் இருந்து வீசும் பலத்த காற்று லாஸ் ஏஞ்சல்ஸ் மற்றும் வென்ச்சுரா கவுண்டிகளில் மணிக்கு 120 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த காற்று திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமை வரை நீடிக்கும் என்பதால் தீ மேலும் பரவி பேரழிவை ஏற்படுத்தும் என அஞ்சப்படுகிறது.
இதையும் படிக்கும்: பனிப்பாறை சூழ்ந்த சிறிய தீவை வாங்கத் துடிக்கும் டிரம்ப் – இப்படி ஓர் பின்னணியா?
காரணங்களும் சவால்களும்:
தீ விபத்துக்கான காரணங்கள் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. இருப்பினும், வானிலை இந்த தீ பரவுவதற்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது தெளிவாக தெரிகிறது. கலிபோர்னியாவில் இந்த முறை கடும் வெப்பத்திற்கு பிறகு குறைந்த மழைப்பொழிவு பதிவானது தீக்கு சாதகமாக அமைந்துள்ளது. பின்னர் வறண்ட காற்று தீயை மேலும் பரவச் செய்துள்ளது.
நீரின் பற்றாக்குறை சூழ்நிலையை மேலும் மோசமாக்கியுள்ளது. பல பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. பதற்றமான சூழ்நிலையில் சட்ட விதிமீறல் சம்பவங்களும் அதிகரித்துள்ளதால் காவல்துறையினரின் பணிச்சுமை அதிகரித்துள்ளது. இதன் காரணமாக பல பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தீயினால் ஏற்பட்ட புகை அருகிலுள்ள பகுதிகளுக்கும் பரவி வருவதால் அப்பகுதி மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். மக்கள் தங்கள் வீடுகளிலேயே தங்கி காற்று சுத்திகரிப்பு கருவிகளை பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளனர். பல வணிக நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்ட பகுதிகளில் மக்களின் கவலை அதிகரித்துள்ளது.
நிர்வாகத்தின் மீது மீட்பு பணிகளுக்கான அழுத்தம் அதிகரித்துள்ளது. ஆயிரக்கணக்கான வீடுகளை மக்கள் காலி செய்யுமாறு முதலில் தகவல் வெளியான நிலையில், பின்னர் நிர்வாகம் அதற்கு விளக்கம் அளிக்க வேண்டியதாயிற்று. மீட்பு பணிகளின் விரிவாக்கம் சூழ்நிலையின் தீவிரத்தை உணர்த்துவதாக உள்ளது.
ஆனால் இதுவரை தீ விபத்துக்கான காரணங்கள் தெரியவில்லை. இதை எஃப்.பி.ஐ. விசாரிக்க உள்ளது. காலநிலை மாற்றமே இதற்கு காரணம் என பலர் கருதுகின்றனர். இருப்பினும், சிலர் இந்த தீ விபத்தின் தொடக்கம் குறித்து சந்தேகம் எழுப்புகின்றனர்.
January 13, 2025 1:26 PM IST