Last Updated:

அமெரிக்காவில் இரு இடங்களில் நடந்த பயங்கர சம்பவம். பயங்கரவாத தாக்குதல் எனும் கோணத்தில் விசாரணை.

News18

அமெரிக்காவின் நியூ ஆர்லியன்ஸ் நகரில் 15 பேர் உயிரை பறித்த தாக்குதலுக்கு பயன்படுத்திய டிரக்கும் லாஸ் வேகாஸில் டிரம்பின் ஹோட்டலுக்கு வெளியே வெடித்து சிதறிய டெஸ்லா சைபர் டிரக்கும் ஒரே நிறுவனத்தில் வாடகைக்கு எடுக்கப்பட்ட நிலையில், பின்னணியில் மிகப்பெரிய பயங்கரவாத சதி திட்டம் இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

அமெரிக்காவின் லூசியானா மாகாணத்தில் நியூ ஆர்லியன்ஸ் நகரின் போர்பன் தெருவில் புத்தாண்டு நள்ளிரவு கொண்டாட்டங்கள், அதிகாலை 3 மணியை கடந்து தொடர்ந்து கொண்டிருந்தது. அப்போது, நடைபாதையின் மீது நடந்துக்கொண்டிருந்த கூட்டத்தின் மீது திடீரென சீறி பாய்ந்த டிரக் ஒன்று, அவர்களை பல அடி தூரத்துக்கு தூக்கி வீசியது. நடப்பது என்ன என்று அங்கிருந்தவர்கள் யூகிப்பதற்குள் அந்த வாகனத்தில் இருந்து இறங்கிய நபர், துப்பாக்கியால் சரமாரியாக சுடத் தொடங்கினார்.

கவச உடை, தலையில் ஹெல்மெட் அணிந்தவாறும் முகத்தை துணியால் மறைத்தவாறும் வந்த அந்த நபர், கண்ணில் பட்டவர்களையெல்லாம் தனது துப்பாக்கிக்கு இரையாக்கினார். இந்தக் கொடூர தாக்குதலில் 15 பேர் கொல்லப்பட்டனர். 30க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்தனர். போலீசார் நடத்திய பதில் தாக்குதலில் கொலையாளி கொல்லப்பட்டார்.

தாக்குதலுக்கு பயன்படுத்திய டிரக்கில் துப்பாக்கிகள், ஐஎஸ்ஐஎஸ் கொடி இருந்ததும், அதில் இருந்த கூலரில் பைப் வெடிகுண்டுகள் உள்பட பல வெடிப்பொருட்கள் இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இதனால், பயங்கரவாத தாக்குதல் என்ற அடிப்படையில் விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது.

ஈவிரக்கமின்றி கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்திய நபர், டெக்சாஸைச் சேர்ந்த 42 வயது ஷம்சுத்-தின் ஜப்பார் என்று அமெரிக்காவின் புலனாய்வு அமைப்பான FBI தெரிவித்துள்ளது. கணினி பட்டதாரியான ஜப்பார், அமெரிக்க ராணுவத்திலும் சில ஆண்டுகளுக்கு முன்பு வரை ரிசர்வ் படையிலும் தொழில்நுட்ப நிபுணராகப் பணியாற்றியது விசாரணையில் தெரியவந்தது.

இந்தத் தாக்குதலுக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன், கண்டனம் தெரிவித்துள்ளார். ஜப்பார் தனி ஆளாய் இதைச் செய்யவில்லை என்று கூறப்படும் நிலையில் அவரது நண்பரைச் சுற்றி வளைத்து போலீசார் கைது செய்தனர். மேலும், நியூ ஆர்லியன்ஸின் பல இடங்களில் தாக்குதல்களை நிகழ்த்த 3 ஆண்கள் மற்றும் ஒரு பெண் வெடிகுண்டுகளைப் பொருத்தியதாக சிசிடிவி காட்சி ஒன்று வெளியாகி உள்ளது.

இதையும் படியுங்கள் : “பெண்கள் பாதுகாப்பில் கவனம் செலுத்தாமல் அரசியலாக்குவது ஏன்?” – உயர்நீதிமன்றம் கேள்வி

இந்தத் தாக்குதல் நடந்த சில மணி நேரத்தில் லாஸ் வேகாஸில் உள்ள டொனால்டு டிரம்பின் இன்டர்நேஷனல் ஹோட்டலுக்கு வெளியே வெடிப்பொருட்களுடன் வந்த டெஸ்லாவின் சைபர் டிரக் வெடித்துச் சிதறியது. இதில் காரில் இருந்த ஒருவர் உயிரிழந்தார்.

நியூ ஆர்லியன்ஸ் தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட போர்டு நிறுவனத்தின் F-150 பிக்அப் டிரக், லாஸ் வேகாஸில் வெடித்த டெஸ்லாவின் சைபர் டிரக் ஆகிய இரண்டுமே டுரோ ஆப் மூலமாக வாடகைக்கு எடுக்கப்பட்டவை. இதனால், இந்த இரு தாக்குதலுக்கும் தொடர்பு இருக்கலாம் என டெஸ்லா நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்க் சந்தேகம் தெரிவித்துள்ளார்.



Source link