உலக அளவில் 5ஜி ஸ்மார்ட் போன் சந்தையில் அமெரிக்காவை பின்னுக்கு தள்ளி இந்தியா இரண்டாம் இடத்தில் இருப்பதாக கவுன்டர்பாயிண்ட் ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது. மேலும், சீனா தொடர்ந்து முதலிடத்தில் இருப்பதும் அந்த ஆய்வறிக்கையில் தெரியவந்துள்ளது.
இந்த ஆய்வறிக்கை குறித்து கவுன்டர்பாயிண்ட் நிறுவனத்தின் மூத்த ஆய்வாளர் பிரசீர் சிங் தெரிவித்ததாவது; இதில், சாம்சங், விவோ, சியோமி மற்ற நிறுவனங்களின் ஸ்மார்ட் போன்கள் பெரும் பங்கு வகிக்கின்றன.
இதையும் படியுங்கள் :
8வது ஆண்டு விழா… இலவச Zomato Gold மெம்பர்ஷிப், 10GB டேட்டா வவுச்சர்… ஆஃபர்களை அள்ளித் தரும் ஜியோ!
ஒட்டுமொத்தமாக ஸ்மார்ட் போன் சந்தையில் சீனா 32%, இந்தியா 13% கொண்டுள்ளது. அமெரிக்கா 10% பங்களிப்புடன் மூன்றாவது இடத்திலும் உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் உலக அளவில் 5ஜி போன்கள் அதிக அளவில் ஏற்றுமதி செய்யும் நிறுவனமாக ஆப்பிள் நிறுவனம் உள்ளது. இதன் பங்கு உலக அளவில் 25% என்றும், சாம்சங் நிறுவனத்தின் பங்கு 21% என்றும், அதனைத் தொடர்ந்து சியோமி மூன்றாம் இடத்திலும் இருப்பதாக அந்த ஆய்வறிக்கையில் தெரியவந்துள்ளது.
இந்த ஆய்வின் இயக்குநரான தருண் பதக், “2024ஆம் ஆண்டின் முதல் பாதியில் ஒட்டுமொத்த கைப்பேசி சந்தையில் 5ஜி போன்களின் பங்களிப்பு 54% இருக்குறது. முதல் முறையாக 50% கடந்திருக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கடந்த 2022ம் ஆண்டு முதல் 5ஜி தொழில் நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்டு உபயோகிக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
.