Last Updated:

அமெரிக்க அதிபராகப் பதவி ஏற்க இருக்கும் டிரம்பின் உயிருக்கு ஆபத்து இருப்பதாக ரஷ்ய அதிபர் புதின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

News18

அமெரிக்க அதிபர் தேர்தல் சமீபத்தில் நடந்து முடிந்தது. இதில், குடியரசுக் கட்சி வெற்றி பெற்று, டொனால்ட் டிரம்ப் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து டொனால்ட் டிரம்ப், வரும் ஜனவரி மாதம் அமெரிக்க அதிபராகப் பதவி ஏற்க இருக்கிறார். அதுவரை அமெரிக்க அதிபராக ஜோ பைடன் இருப்பார்.

முன்னதாக அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான பிரச்சாரங்களின்போது டிரம்ப் மீது இரு முறை கொலை முயற்சி நடைபெற்றது. அதன்படி ஒருமுறை பென்சில்வேனியாவில் டிரம்ப் பிரச்சாரம் மேற்கொண்டபோது, அவரை நோக்கி ஒருவர் துப்பாக்கியால் சுட்டார். அப்போது அந்தத் துப்பாக்கி தோட்டா டிரம்பின் காதில் பட்டது. இதற்காக அவர் சில தினங்கள் மட்டுமே சிகிச்சை பெற்றுவிட்டு, மீண்டும் பிரச்சாரத்திற்கு வந்தார்.

இரண்டாவதாக டிரம்ப், ஃபுளோரிடா கோல்ஃப் மைதானத்தில் கோல்ஃப் விளையாடியபோது, அந்த மைதானத்தில் ஒருவர் பயங்கர ஆயுதங்களுடன் டிரம்பை நெருங்கினார். அவரும் உடனடியாகப் பாதுகாப்பு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து நடந்த தேர்தலில் அவர் வெற்றியும் பெற்றார்.

இந்தச் சமயத்தில் ரஷ்யா உக்ரைன் போரும் தீவிரம் அடைந்தது. உக்ரைன் அமெரிக்கா கொடுத்த ஆயுதங்களை வைத்து ரஷ்யாவின் தாக்குதலைச் சமாளித்து வந்தது. அதேசமயம், தொலைதூரம் சென்று தாக்கும் ஏவுகணைகளை, ரஷ்யா மீதான தாக்குதலுக்குப் பயன்படுத்த உக்ரைன் தொடர்ந்து அமெரிக்காவிடம் கோரிக்கை வைத்து வந்தது. அதனைத் தொடர்ந்து அமெரிக்கா, உக்ரைனின் கோரிக்கைக்கு அனுமதி அளித்தது.

அமெரிக்காவின் இந்த அனுமதி வந்ததும் ரஷ்யா தனது அணு ஆயுதக் கொள்கையில் சில திருத்தங்களை மேற்கொண்டது. அதன்படி, அணு ஆயுதம் இல்லாத நாட்டிற்கு அணு ஆயுதம் கொடுத்து, அதன் மூலம் அணு ஆயுதம் இல்லாத நாடு தங்கள் நாட்டின் மீது தாக்குதல் நடத்தினால், அந்த நாட்டின் மீது ரஷ்யா அணு ஆயுதத்தைப் பயன்படுத்தும் என்று தெரிவிக்கப்படிருந்தது.

இப்படியான சூழலில், கஜகஸ்தானில் நடந்த உச்சி மாநாட்டில் ரஷ்ய அதிபர் புதின் பங்கேற்றார். இந்த மாநாட்டிற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த புதின் அமெரிக்க அதிபர் டிரம்பின் உயிருக்கு ஆபத்து இருப்பதாகத் தெரிவித்தார்.

இதையும் படியுங்கள்: 16 வயதுக்குட்பட்டவர்கள் சமூக வலைதளங்களை பயன்படுத்த தடை விதிக்கும் மசோதா.. ஆஸ்திரேலியா எவ்வாறு செயல்படுத்தும்?

அந்தச் செய்தியாளர் சந்திப்பில் அவர் தெரிவித்திருப்பதாவது; “அமெரிக்காவில் தேர்தல் பிரச்சாரம் நடந்த விதம் என்னை அதிர்ச்சியடையச் செய்தது. அநாகரிகமான முறையில் பிரச்சாரம் நடந்தது. டிரம்பிற்கு எதிராக முற்றிலும் நாகரீகமற்ற முறைகள் பயன்படுத்தி பிரச்சாரம் செய்துள்ளனர். ஜனநாயக நாட்டின் வன்முறைக்கு இடம் இருக்கக்கூடாது. ஆனால், டிரம்பை எதிர்ப்போர் அவரைப் படுகொலை செய்யவும் முயன்றுள்ளனர். இதனை எல்லாம் வைத்துப் பார்க்கும்போது, டிரம்ப் பாதுகாப்பாக இல்லை என்றே சொல்லத் தோன்றுகிறது” என்று தெரிவித்துள்ளார்.



Source link