அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் உள்ளிட்டவை உக்ரைனின் இந்தத் தாக்குதல்களுக்கு ஆயுதம் மற்றும் நிதியுதவி அளித்துவருகின்றன. இதனைக் கொண்டு உக்ரைன் தொடர்ந்து ரஷ்யா மீது தாக்குதல் நடத்திவருகிறது.
உக்ரைனுக்கு அமெரிக்கா ஆயுதங்களை வழங்கியது. அதேசமயம், அந்த ஆயுதங்களை ரஷ்யத் தாக்குதலில் இருந்து தற்காத்துக் கொள்ள மட்டுமே பயன்படுத்த வேண்டும் எனத் தெரிவித்தது. அதேபோல், உக்ரைனும் பயன்படுத்திவந்தது. ஒரு கட்டத்திற்கு மேல், ஏவுகணை உள்ளிட்ட ஆயுதங்களைப் பயன்படுத்த அனுமதி வேண்டும் என உக்ரைன் அமெரிக்காவிடம் வலியுறுத்திவந்தது.
ரஷ்யா – உக்ரைன் போர் ஒரு பக்கம் நடந்துவரும் வேளையில், அமெரிக்க அதிபர் தேர்தலும் சமீபத்தில் நடந்து முடிந்தது. இந்தத் தேர்தலில் வென்றுள்ள டொனால்ட் டிரம்ப் வரும் ஜனவரியில் அதிபராகப் பதவியேற்க இருக்கிறார். தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு பேசிய டிரம்ப், “போர்களை நான் தொடங்கவில்லை” என்றும், அதே நேரம் “போர்களை நிறுத்த முயற்சி எடுப்பேன்” என்றும் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் ரஷ்ய அதிபர் புதினுடன் டிரம்ப் தொலைபேசி வாயிலாகப் பேசியதாகவும் சொல்லப்படுகிறது. ஐரோப்பிய கண்டத்தில் அமைதியை நிலை நிறுத்த இருதரப்பினரும் பேசியதாகவும், உக்ரைன் மீதான போரை விரைவில் நிறுத்த டிரம்ப் கேட்டுக் கொண்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப் வெற்றி பெற்றிருந்தாலும், வரும் ஜனவரி மாதம் அவர் பதவி ஏற்கும் வரை அமெரிக்காவின் அதிபராக ஜோ பைடனே செயல்படுவார். இந்நிலையில், நீண்ட தூர இலக்கைத் தாக்கும் ஏவுகணைகளை உபயோகிக்க அனுமதி கேட்டுவந்த உக்ரைனுக்கு அமெரிக்கா அனுமதி வழங்கியுள்ளது.
நீண்ட தூர ஏவுகணைகளை உபயோகிக்க உக்ரைனுக்கு அமெரிக்கா அனுமதி வழங்கியதை அடுத்து, ரஷ்யாவின் அணு ஆயுதக் கொள்கையில் முக்கிய திருத்தம் மேற்கொள்ளப்பட்டு அந்தத் திருத்தத்திற்கு ஒப்புதல் வழங்கி அதிபர் புதின் கையெழுத்திட்டார்.
அதன்படி, அணு ஆயுதம் இல்லாத நாட்டிற்கு, அணு ஆயுதம் வைத்துள்ள நாடு ஆதரவளித்து ரஷ்யா மீது தாக்குதல் நடத்தினால், அந்த நாட்டின் மீது அணு ஆயுதம் கொண்டு தாக்குதல் நடத்த ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
இதன்மூலம், உக்ரைன் மீது அணு ஆயுதத் தாக்குதலை நடத்துவோம் என ரஷ்யா வெளிப்படையாக அறிவித்திருந்தது. அதேபோல், ட்ரோன் தாக்குதலில் ஈடுபடும் நாடுகள் மீதும் அணு ஆயுதம் பயன்படுத்தப்படும் என ரஷ்யாவின் அணு ஆயுதக் கொள்கையில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.
இதையும் படியுங்கள் : தேர்தல் முடிவு வருவதற்கு முன்பே CM போட்டி! காங்கிரஸ் கூட்டணியில் சண்டை!
ரஷ்யாவின் அணு ஆயுதக் கொள்கயில் மாற்றம் கொண்டு வந்த அதேநேரத்தில், அமெரிக்கா வழங்கிய அனுமதியை பயன்படுத்தி, நீண்ட தூர இலக்கைத் தாக்கும் ஏவுகணைகளை உக்ரைன் பயன்படுத்தி கடந்த 19ம் தேதி ரஷ்யா மீது தாக்குதலைத் துவங்கியது.
இந்தத் தாக்குதலுக்கு ரஷ்யா பதிலடி கொடுக்கும் என பேச்சுகள் அப்போதே எழுந்தன. இந்நிலையில், இன்று ரஷ்யா ஐசிபிஎம் எனப்படும் கண்டம் விட்டு கண்டம் தாண்டி தாக்கும் சக்தி கொண்ட ஏவுகணையை உக்ரைன் மீது வீசியுள்ளது.
கண்டம் விட்டு கண்டம் தாண்டி தாக்கக் கூடிய சக்தி படைத்த இந்த ஐசிபிஎம் (ICBM-Intercontinental ballistic missile) ஏவுகணை கொண்டு தாக்குதல் நடத்தப்பட்டிருந்தாலும், அதில் அணு ஆயுதங்கள் இருந்தனவா என்பது குறித்து இதுவரை எந்த உறுதியான தகவலும் வெளியாகவில்லை.
November 21, 2024 9:43 PM IST