அமெரிக்க அதிபர் தேர்தலில் நாளை (5ம் தேதி) வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், இறுதிக்கட்ட பரப்புரையில் கமலா ஹாரிஸ் மற்றும் ட்ரம்ப் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
அமெரிக்காவின் பெரும்பாலான மாகாணங்கள் ஜனநாயக கட்சி அல்லது குடியரசுக் கட்சி என இரு கட்சிகளில் ஏதேனும் ஒன்றுக்கு ஆதரவான நிலையிலேயே உள்ளன. எனவே, இழுபறி நிலவும் சில மாநிலங்களிலேயே கூடுதல் கவனம் உள்ளது. இந்த மாகாணங்கள் “இழுபறி மாகாணங்கள்” என அழைக்கப்படுகின்றன. இவையே பெரும்பாலும் வெற்றியைத் தீர்மானிக்கின்றன. இந்த ஆண்டு அரிசோனா, ஜார்ஜியா, மிச்சிகன், நெவாடா, பென்சில்வேனியா, விஸ்கான்சின் மற்றும் வட கரோலினா ஆகியவை இழுபறி மாகாணங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. இம்மாகாணங்களில் கூடுதல் கவனம் செலுத்தி கமலா ஹாரிஸும், ட்ரம்பும் பரப்புரை மேற்கொண்டு வருகின்றனர்.
உலகமே உற்றுநோக்கும் அமெரிக்க அதிபர் தேர்தல் நாளை நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் ஆளும் ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிடும் கமலா ஹாரிஸுக்கும், குடியரசுக் கட்சி சார்பில் போட்டியிடும் முன்னாள் அதிபர் ட்ரம்புக்கும் இடையே கடும் போட்டி நிலவும் சூழலில், இருவரும் தங்களது வெற்றியை தீர்மானிக்கும் முக்கிய மாகாணங்களில் இறுதி கட்ட பரப்புரையில் ஈடுபட்டனர்.
பென்சில்வேனியாவில் நடந்த பரப்புரைக் கூட்டத்தில் பேசிய ட்ரம்ப், “தான் அதிபராக பதவிக்கு வந்தால் புதிய அமெரிக்காவை படைப்பேன்” என்று சூளுரைத்தார். பண வீக்கத்தை குறைக்கவும், வெளிநாடுகளை சேர்ந்த குற்றவாளிகள் அமெரிக்காவிற்குள் நுழைவதை தடுக்கவும் நடவடிக்கை எடுப்பேன் என்றும் உறுதியளித்தார். கமலா ஹாரிஸ் அமெரிக்காவை சிதைத்துவிடுவார் என்றும் கடுமையாக விமர்சித்தார். தன்னை தோல்வியடைந்த நாட்டின் அதிபராக மீண்டும் தேர்வு செய்யும் படியும் ட்ரம்ப் கேட்டுக் கொண்டார்.
இதையும் படியுங்கள் :
மத்திய அரசை ஒன்றிய அரசு என விஜய் கூறுகிறார்.. அவர் பாஜகவின் ‘பி’ டீமா? – ஹெச். ராஜா கேள்வி
ட்ரம்பின் குற்றச்சாட்டுகளுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக மிச்சிகனில் நடந்த பரப்புரைக் கூட்டத்தில் பேசிய கமலா ஹாரிஸ், தனக்கு சாதகமான அலை வீசுவதாகவும், யாரும் தவறிழைத்துவிட வேண்டாம் என்றும் கூறினார். மருத்துவ செலவு உட்பட அனைத்துவிதமான செலவுகளை குறைக்க நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளித்தார். “இது தங்களுடையது எதிர்காலத்திற்கான போராட்டம்” என்றும் “இதில், இருந்து பின் வாங்க மாட்டோம்” என்றும் கமலா ஹாரிஸ் திட்டவட்டமாகத் தெரிவித்தார். அமெரிக்கர்களின் வாழ்நாளின் மிக முக்கியமான இந்த தேர்தலில் தாங்கள் வெற்றி பெறுவோம் என்றும் கமலா ஹாரிஸ் தெரிவித்தார்.
.