புதுச்சேரியில் அரசுக்கு சொந்தமான ஹோட்டலை நயன்தாராவின் கணவரும், திரைப்பட இயக்குநருமான விக்னேஷ் சிவன் விலைக்கு கேட்டதால் அம்மாநில சுற்றுலாத்துறை அமைச்சர் அதிர்ச்சி அடைந்தார்.
புதன்கிழமையன்று புதுச்சேரிக்கு சென்றிருந்த விக்னேஷ் சிவன், அம்மாநில சுற்றுலாத்துறை அமைச்சர் லட்சுமி நாராயணனை சந்தித்து பேசினார். அப்போது, புதுச்சேரி கடற்கரை சாலையில் உள்ள அரசுக்கு சொந்தமான ‘சீகல்ஸ்’ ஹோட்டலை விலை பேசியதாக தெரிகிறது. அதனை கேட்ட அதிர்ச்சி அடைந்த அம்மாநில அமைச்சர் லட்சுமி நாராயணன், அது அரசு சொத்து என்றும் அதனை விற்க முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து, புதுச்சேரியில் கலைநிகழ்சிகளை நடத்துவதற்காக இடம் தேவைப்படுவதாக விக்னேஷ் சிவன் கூறிய நிலையில், துறைமுக வளாகத்தில் பொழுதுபோக்கு மையம் உள்ளதாகவும், இதே போல் பழைய துறைமுக வளாகத்தில் பொழுதுபோக்கு மையம் இருப்பதாகவும் அமைச்சர் கூறியுள்ளார். அதனை தொடர்ந்து, அமைச்சர் குறிப்பிட்ட அந்த பொழுது போக்கு மையங்களை விக்னேஷ் சிவன் பார்வையிட்டுச் சென்றார்.
அரசு கட்டடம் விலைக்கு வருவதாக சில இடைத்தரகர்கள் கூறிய பொய்யான தகவலை நம்பி, அமைச்சரிடம் விக்னேஷ் சிவனை அழைத்துச் சென்றதாக தெரிகிறது. இது குறித்து அமைச்சரிடம் கேட்டதற்கு, அரசுக்கு சொந்தமான கட்டடத்தை விலைக்கு தருமாறு விக்னேஷ் சிவன் கேட்டது உண்மைதான் என்றும் தவறான தகவல்களை நம்ப வேண்டாம் என கூறியதாகவும் தெரிவித்துள்ளார்.
.