ரிலீஸ் தேதி அறிவிப்பை விடாமுயற்சி மற்றும் குட் பேட் அட்லி படத்தின் தயாரிப்பு நிறுவனங்கள் மாற்றாத நிலையில், வரும் பொங்கலையொட்டி 2 அஜித் படங்கள் ரிலீஸ் ஆகுமா என ரசிகர்கள் பேசத் தொடங்கியுள்ளனர்.
துணிவு படத்தின் வெற்றியை தொடர்ந்து அஜித்குமார் விடாமுயற்சி என்ற படத்தில் நடித்து வருகிறார். மகிழ் திருமேனி இயக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். விடாமுயற்சி படத்தில் அர்ஜுன், த்ரிஷா, ஆரவ், ரெஜினா உள்பட பலர் நடித்துள்ளனர்.
ஹாலிவுட்டில் சூப்பர் ஹிட்டான பிரேக் டவுன் என்ற படத்தை தழுவி விடாமுயற்சி திரைப்படம் உருவாக்கப்பட்டு வருகிறது. இதனை முன்னணி தயாரிப்பு நிறுவனமான லைகா ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் அதிக பொருட்செலவில் தயாரித்து வருகிறது.
இந்த படத்துடைய எதிர்பார்க்கப்பட்ட ரிலீஸ் தேதி அடுத்தடுத்து மாற்றப்பட்டுள்ள நிலையில் பொங்கலையொட்டி இந்த படம் வெளியாகும் என்று லைகா நிறுவனம் அறிவித்துள்ளது. இன்றுவரையில் இந்த தேதியை லைகா மாற்றிக்கொள்ளவில்லை. இதேபோன்று அஜித், குட் பேட் அக்லி என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் இந்த படத்தை தெலுங்கில் முன்னணி தயாரிப்பு நிறுவனமாக இருக்கும் மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் (புஷ்பா பட தயாரிப்பு நிறுவனம்)தயாரித்து வருகிறது. இந்த படம் பொங்கலையொட்டி வெளியாகும் என மைத்ரி மூவி மேக்கர்ஸ் ஏற்கனவே பலமுறை அறிவித்துள்ளது.
தற்போது வரை விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி படங்களின் ரிலீஸ் தேதியை தயாரிப்பு நிறுவனங்கள் மாற்றவில்லை. இரு நிறுவனங்களுமே தங்களது படம் பொங்கலையொட்டி வெளியாகும் என தற்போது வரை உறுதியாக இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் இந்த பொங்கலுக்கு 2 அஜித் படங்கள் ரிலீஸ் ஆகுமா? என்று இணையத்தில் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இருப்பினும் இரு படங்களில் ஒன்றுதான் பொங்கலையொட்டி வெளியாகும் என்று கோலிவுட்டில் பேசப்படுகிறது. விரைவில் இதுகுறித்து முக்கிய அறிவிப்பு வெளியாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. குட் பேட் அக்லி படத்துடைய ஷூட்டிங் ஏற்கனவே நிறைவுபெற்றுள்ள நிலையில், விடாமுயற்சி படத்துடைய ஷூட்டிங் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.
இந்த ஆண்டு இறுதிக்குள் அஜித்குமார் தனது 2 படங்களுடைய டப்பிங் உள்பட அனைத்து பணிகளையும் முடித்துக் கொடுப்பார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இரு படங்களுமே பொங்கலுக்கு ரிலீசாக தயார் நிலையில் இருப்பதால் கோலிவுட்டில் இந்த படங்கள் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.
.