ஆஸ்கர் மேடையைப் போலவே மீண்டும் ஒரு முறை ஹாலிவுட்டை திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறார் நம் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான். பிருத்விராஜ் நடிப்பில் பிளஸ்ஸி இயக்கத்தில் மலையாளத்தில் வெளியான திரைப்படம் ‘ஆடு ஜீவிதம்’. உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்ட இந்தப் படம் தாமதமாக வெளியானாலும் ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பைப் பெற்றது. மேலும், இப்படத்திற்கு இசையமைத்ததன் மூலம் நீண்ட இடைவெளிக்குப் பிறகு மலையாளத் திரை உலகிற்குத் திரும்பி இருந்தார் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான். படத்தில் இடம் பெற்ற பாடலும் பின்னணி இசையும் பலரது பாராட்டுக்களைப் பெற்றன.
இந்த நிலையில், அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடந்த விழாவில், ‘ஆடு ஜீவிதம்’ திரைப்படத்துக்குச் சிறந்த பின்னணி இசைக்கான ’ஹாலிவுட் மியூசிக் மீடியா விருது’ வழங்கப்பட்டுள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான் சார்பில் படத்தின் இயக்குநர் பிளஸ்ஸி விருதைப் பெற்றுக் கொண்டார். கடந்த 2008-ஆம் ஆண்டு மலையாளத்தில் அதிகம் விற்பனையான ‘ஆடு ஜீவிதம்’ என்ற புத்தகத்தின் தழுவலாக அதே பெயரில் மலையாளத்தில் உருவாக்கப்பட்டது இந்தப் படம். நஜீப் என்ற நபர் சவுதி அரேபியாவுக்குச் சென்று பாலைவனத்தில் எதிர்கொண்ட துயரங்களைப் படம் தத்ரூபமாகக் காட்சிபடுத்தியிருந்தது.
இந்தப் படத்தில் நாயகனாக பிரித்வி நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டாலும், அந்தப் படத்துக்கு உயிர் கொடுத்தது ஏ.ஆர். ரஹ்மான் என்று சொன்னால் அது மிகையல்ல. இந்தப் படத்தை HMMA அமைப்பினருக்குக் கடந்த வாரத்தில் படத்தின் இயக்குநர் பிளஸ்ஸி திரையிட்டுக் காட்டியதுடன், படத்தின் பின்னணி இசை மற்றும் பாடல்கள் பிரிவில் விருதுக்கும் விண்ணப்பித்திருந்தார். இந்த நிலையில் படத்தின் பின்னணி இசையைக் கண்டதும் சிலிர்த்துப் போன நடுவர்கள், வெளிநாட்டுப் படப்பிரிவில் ‘ஆடு ஜீவிதம்’ படத்தின் பின்னணி இசைக்கு விருதை வழங்கினர்.
இதையும் படிங்க:
சாதாரண ஹோட்டலில் வித்தியாசமாக பிறந்தநாள் கொண்டாடிய நயன்தாரா… வைரல் வீடியோ!
ஏ.ஆர்.ரஹ்மானின் பின்னணி இசையும், பாடல்களும் மாயாஜாலத்தை நிகழ்த்தியிருப்பதாக விருது மேடையில் இயக்குநர் பிளஸ்ஸி புகழாரம் சூட்டினார். ஹாலிவுட் இசை விருது மிகப்பெரிய கவுரவம் என ஏ.ஆர்.ரஹ்மான் காணொலி வாயிலாகப் பெருமிதம் தெரிவித்துள்ளார். ஏ.ஆர்.ரஹ்மானின் பின்னணி இசையும், பாடல்களும் மாயாஜாலத்தை ஏற்படுத்தியிருந்ததாக பிளஸ்ஸி கூறினார்.
.