Last Updated:
ஒரு சரக்கு வாகனத்தில் தினக்கூலிகள் சென்றுள்ளனர். அவர்களுடன் திருமண விழாவில் கலந்துகொள்ளச் சென்றவர்களும் அந்த சரக்கு வாகனத்தில் பயணித்துள்ளனர்.
எத்தியோப்பியாவில் வாகனம் ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 71 ஆக உயர்ந்துள்ளது.
ஆப்பிரிக்காவின் இரண்டாவது அதிக மக்கள்தொகை கொண்ட நாடான எத்தியோப்பியாவில் சாலை விபத்துக்கள் அடிக்கடி நிகழும். அதற்கு அங்குள்ள சாலைகள் மோசமாகப் பராமரிக்கப்படுவதே காரணமாகச் சொல்லப்படுகிறது. 2024ம் ஆண்டின் தொடக்கத்தில், தெற்கு எத்தியோப்பியாவில் வோலைட்டாவில் பேருந்து ஆற்றில் கவிழ்ந்ததில் 28 பேர் உயிரிழந்தனர். தற்போது ஆண்டின் இறுதியில் இதைவிடப் பெரிய சோகம் நிகழ்ந்துள்ளது.
தெற்கு எத்தியோப்பியாவில் உள்ள சிடாமா மாநிலத்தில் கோர விபத்து நடந்துள்ளது. ஒரு சரக்கு வாகனத்தில் தினக்கூலிகள் சென்றுள்ளனர். அவர்களுடன் திருமண விழாவில் கலந்துகொள்ளச் சென்றவர்களும் அந்த சரக்கு வாகனத்தில் பயணித்துள்ளனர்.
இந்நிலையில், சிடாமா தலைநகர் அடிஸ் அபாபாவிற்கு அருகே உள்ள நதியில் சரக்கு வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், இதுவரை 71 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகின்றன.
உயிரிழந்தவர்களில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உட்பட 68 ஆண்கள், 3 பெண்கள் அடக்கம். வாகனம் கவிழ்ந்தபோது நதியில் இருந்த பெரிய பாறைகள் மீது மோதியதில் இவ்வளவு பேர் உயிரிழக்கக் காரணமாக அமைந்தது என சிடாமா மாநில போலீஸ் தெரிவித்துள்ளது.
சரக்கு வாகனம் நதியின் பாலத்திற்கு முன்னால் இருந்த வளைவில் திருப்ப முயன்றபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்து நேரிட்டது என்று கூறப்படுகிறது. மேலும் சரக்கு வாகனத்தில் அளவுக்கு அதிகமான ஆட்களை ஏற்றிச் சென்றதும் இவ்வளவு பெரிய விபத்துக்குக் காரணமாக அமைந்தது என்றும் போலீஸார் தெரிவித்துள்ளனர். இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக 5 பேர் உயிர் பிழைத்தனர்.
Chennai [Madras],Chennai,Tamil Nadu
December 31, 2024 7:54 AM IST