வங்கதேச கிரிக்கெட்டில் புதிய நட்சத்திரமாக உருவெடுத்துள்ளார் வேகப்பந்து வீச்சாளர் ஹசன் மஹ்முத்.
சென்னையில் இந்திய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் வங்கதேச வேகப்பந்து வீச்சாளர் ஹசன் மஹ்முத் அபாரமாக பந்து வீசி ஐந்து விக்கெட்களை கைப்பற்றினார். இந்த 5 விக்கெட்களில், இந்திய அணியின் டாப் ஆர்டர்களான ரோஹித் சர்மா (6), ஷுப்மன் கில் (0), விராட் கோலி (6), ரிஷப் பந்த் (39) ஆகியோரை ஆட்டமிழக்கச் செய்தார். நேற்று இந்திய அணி இழந்த முதல் 4 விக்கெட்களும் இவர் வீழ்த்தியவையே. 24 வயதான ஹசன் மஹ்முதுக்கு இது 4-வது டெஸ்ட் போட்டி ஆகும்.
யார் இவர்?: வங்கதேசத்தின் சட்டோகிராமுக்கு அருகே உள்ள ஒரு கிராமத்தில் விவசாய குடும்பத்தில் பிறந்தவர் ஹசன் மஹ்முத். இளையோருக்கான கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த இவரின் திறமையை கண்டறிந்தது கிரிக்கெட்டின் ஆல் டைம் பேவரைட்டும் தென் ஆப்பிரிக்க முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஆலன் டொனால்ட்தான்.
வங்கதேச பந்துவீச்சு பயிற்சிக்குழுவில் மேற்கிந்திய தீவுகள் வேகப்பந்து வீச்சாளர் ஓட்டிஸ் கிப்சன் உடன் ஒரு அங்கமாக இருந்தபோது ஆலன் டொனால்ட், ஹசன் மஹ்முத் திறமையை கண்டறிந்தார்.
முதன்முதலாக வங்கதேச அணியின் யு-16 அணியில் இடம்பெற்ற ஹசன், அதன்பின் 2018-ல் நடந்த யு-19 உலகக் கோப்பையில் வங்கதேச அணிக்காக களமிறங்கி தாக்கத்தை ஏற்படுத்தினார். அந்த தாக்கம், யு-23 அணி, ஆசிய கோப்பை தொடர் என அவருக்கான வாய்ப்பை பெற்றது கொடுத்தது.
ஷார்ட் பார்மெட் போட்டிகளான டாக்கா பிரீமியர் லீக், வங்கதேச பிரீமியர் லீக், வங்கதேச கிரிக்கெட் லீக்கிலும் தனது முத்திரையை பதித்தார். 2020-ல் ஜிம்பாப்வேக்கு எதிரான டி20 தொடர்தான் சர்வதேச கிரிக்கெட்டில் ஹசனுக்கான அறிமுகம். இதற்கு அடுத்த ஆண்டு ஒருநாள் கிரிக்கெட் அணியிலும் இடம் கிடைத்தது.
இந்த ஆண்டு வங்கதேச அணிக்கு பெயரை பெற்றுக் கொடுத்தது இலங்கை மற்றும் பாகிஸ்தான் டெஸ்ட் தொடர்தான். இதில், இந்த ஆண்டு மார்ச் மாதம் இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர் மூலமாக டெஸ்ட் கிரிக்கெட்டில் அடியெடுத்து வைத்த ஹசன், அதில் இரு இன்னிங்ஸையும் சேர்த்து 6 விக்கெட்கள் வீழ்த்தியிருந்தார்.
ராவில்பிண்டி ஷோ…: கடந்த மாதம் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி வங்கதேசம் வரலாற்றில் இடம்பெற்றது. இந்த தொடரில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தியதில் முக்கிய ரோல் வகித்தார் ஹசன். குறிப்பாக ராவல்பிண்டியில் நடந்த 2-வது டெஸ்ட் போட்டியின் 2-வது இன்னிங்ஸில் 5 விக்கெட்களை வீழ்த்தி வரலாற்று வெற்றியைப்பெற உதவினார்.
Also Read |
IND vs BAN சென்னை டெஸ்ட் | 2ம் நாளில் சோபிக்காத வீரர்கள்… இந்தியா 376 ரன்களுக்கு ஆல் அவுட்!
இது இந்திய தொடருக்கான வாய்ப்பை பெற்றுத்தர, சென்னையில் தொடங்கிய முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாளில் 18 ஓவர்களை வீசிய அவர், 4 மெய்டன்களுடன் 58 ரன்களை விட்டுக்கொடுத்து 4 விக்கெட்களை கைப்பற்றியுள்ளார்.
இரண்டாம் நாளில் பும்ரா விக்கெட்டை வீழ்த்தி ஐந்து விக்கெட் வீழ்த்தினார். வங்கதேசத்தின் முன்னாள் பயிற்சியாளர் ரஸ்ஸல் டொமிங்கோ, ஹசன் மஹ்முத்தின் ஸ்விங் திறனை ‘கடவுளின் வரம்’ என்று குறிப்பிடுகிறார். உண்மைதான் அது!
.