Last Updated:
145 ரன்கள் முன்னிலை பெற்றுள்ள இந்திய அணி நாளைய 3-ஆம் நாள் ஆட்டத்தில் கூடுதல் ரன்களை சேர்க்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இதற்கிடையே காயம் காரணமாக ஜஸ்பிரித் பும்ரா விளையாடுவாரா என்பதிலும் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட பார்டர் – கவாஸ்கர் கிரிக்கெட் தொடரில் இந்திய அணி தடுமாறி வந்தாலும், தனிப்பட்ட முறையில் வீரர்கள் புதிய ரெக்கார்டுகளை ஏற்படுத்தி வருகின்றனர்.
வெளிநாட்டில் நடைபெற்ற போட்டிகளில் அதிக விக்கெட் வீழ்த்திய வீரர் என்ற சாதனையை ஜஸ்பிரித் பும்ரா ஏற்படுத்தியிருந்தார். இந்த தொடரில் இந்திய அணி இதுவரை முடிந்துள்ள 4 போட்டிகளில் ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்று பின்தங்கியுள்ளது. 2 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ள ஆஸ்திரேலியா அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
சிட்னியில் நடைபெற்று வரும் கடைசி டெஸ்ட் போட்டியும் தற்போது வரை இந்திய அணிக்கு சாதகமாக இல்லை. முதல் இன்னிங்ஸில் இந்தியா 185 ரன்களும், ஆஸ்திரேலியா 181 ரன்களும் எடுத்துள்ளன. இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணி 6 விக்கெட் இழப்புக்கு 141 ரன்கள் எடுத்துள்ளது.
ஆஸ்திரேலியாவை விடவும் 145 ரன்கள் இந்தியா முன்னிலை பெற்று இருக்கிறது. இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் 20 ஓவர் போட்டியை போன்று அதிரடியாக விளையாடி ரன்கள் சேர்த்தார். 33 பந்துகளை எதிர்கொண்ட ரிஷப் பந்த் 4 சிக்சர் மற்றும் 6 பவுண்டரியுடன் 61 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். இந்திய அணியில் அதிகமாக ரன் அடித்த வீரரும் அவர்தான்.
4 சிக்ஸர்களை ரிஷப் பந்த் அடித்த நிலையில் அவர் புதிய சாதனையை ஏற்படுத்தி உள்ளார். அதாவது, ஆஸ்திரேலிய மண்ணில் இதுவரை கிறிஸ் கெயில் மற்றும் விவியன் ரிச்சர்ட்ஸ் ஆகியோர் அடித்த 12 சிக்சர்கள்தான் வெளிநாட்டைச் சேர்ந்த வீரர் ஒருவர் எடுத்த அதிகபட்ச சிக்சர் ஆக இருந்தது. அதனை ரிஷப் பந்த் முறியடித்துள்ளார்.
இன்றைய நாள் ஆட்டத்தில் அவர் அடித்த 4 சிக்ஸர்கள் மூலம் மொத்தம் 15 சிக்ஸருடன் கிறிஸ் கெயில், விவியன் ரிச்சர்ட்ஸ் ஆகியோரின் ரெக்கார்டுகளை முறியடித்துள்ளார் ரிஷப் பந்த். சிட்னியில் நடைபெற்று வரும் ஐந்தாவது டெஸ்ட் போட்டியை பொறுத்த அளவில் 2 நாட்கள் ஆட்டமே முடிந்துள்ளதால் இந்த போட்டி டிராவில் முடிவதற்கு வாய்ப்பு இல்லை.
145 ரன்கள் முன்னிலை பெற்றுள்ள இந்திய அணி நாளைய 3-ஆம் நாள் ஆட்டத்தில் கூடுதல் ரன்களை சேர்க்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இதற்கிடையே காயம் காரணமாக ஜஸ்பிரித் பும்ரா விளையாடுவாரா என்பதிலும் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனால், அடுத்து வரும் 2 நாட்கள் இந்திய அணிக்கு மிகுந்த சவாலாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
January 04, 2025 11:42 PM IST