Last Updated:

முகமது சிராஜ் – டிராவிஸ் ஹெட் இருவரும் டி-மெரிட் என்ற மோசமான நடத்தைக்கான புள்ளியை பெற்றுள்ளனர்

News18

ஆஸ்திரேலிய அணியின் பேட்ஸ்மேன் டிராவிஸ் ஹெட் உடன் மோதல் போக்கை கடைபிடித்த விவகாரத்தில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜுக்கு அபராதம் விதித்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட பார்டர்-கவாஸ்கர் டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்டில் இந்திய அணி வெற்றி பெற்ற நிலையில், இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோல்வியை சந்தித்தது.

தற்போது இரு அணிகளும் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளன. இரண்டாவது டெஸ்ட் போட்டியின் போது ஆஸ்திரேலியா அணியின் பேட்ஸ்மேன் டிராவிஸ் ஹெட், ஒருநாள் போட்டியைப் போன்று விளையாடி அதிரடியாக ரன்கள் சேர்த்தார். வெறும் 141 பந்துகளில்  4 சிக்சர், 17 பவுண்டரியுடன் 140 ரன்கள் எடுத்தார். இவரை இந்திய அணியின் பவுலர் சிராஜ் போல்ட் என்ற முறையில் ஆட்டமிழக்கச் செய்து வெளியேற்றினார்.

அப்போது இருவருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த நிலையில் இருவருக்கும் ஐசிசி அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்துள்ளது.

சிராஜுக்கு அவரது போட்டி கட்டணத்தில் 20% அபராதத் தொகையாக விதிக்கப்பட்டு இருக்கிறது. மேலும் இருவரும் டி-மெரிட் என்ற மோசமான நடத்தைக்கான புள்ளியை பெற்றுள்ளனர். இந்நிலையில், இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதும் மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி வரும் சனிக்கிழமை அன்று பிரிஸ்பேன் மைதானத்தில் தொடங்க உள்ளது.

இதையும் படிங்க – உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் : பாயின்ட்ஸ் டேபிளில் பின்தங்கியது இந்திய அணி…

இன்னும் 3 போட்டிகள் மீதமுள்ள நிலையில், அவை அனைத்திலும் வென்றால் மட்டுமே இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் மோதும் வாய்ப்பைப் பெற முடியும் என்பது கவனிக்கத்தக்கது.



Source link