கடந்த சில ஆண்டுகளாகவே இந்திய மக்களிடையே டிஜிட்டல் பரிவர்த்தனைகளின் பயன்பாடு அதிகரித்துள்ளது. பெரும்பாலான மக்கள் சில்லறை காசுகள் முதல் பெரிய தொகை வரை தங்களது ஸ்மார்ட்போன்களை பயன்படுத்தி பணம் செலுத்தி வருகின்றனர். அந்த வகையில், மக்களின் பயன்பாட்டுக்கு ஏற்றவாறு பேடிஎம், கூகுள் பே, ஃபோன் பே, பாரத் பே என பல்வேறு மூன்றாம் தரப்பு ஆப்கள் மக்களின் பயன்பாட்டில் பிரதானமாக உள்ளன. இது தவிர, வங்கிகளும் மக்களின் வசதிக்கேற்ப தங்களது ஆப்களை மாற்றி வடிவமைத்து வருகின்றன.

இந்த வரிசையில், தற்போது வாட்ஸ்அப் பே-யும் இணைந்துள்ளது. அதாவது, இந்தியாவில் வாட்ஸ்அப் மூலம் ஆன்லைன் பேமெண்ட்களை மேற்கொள்ள குறிப்பிட்ட நபர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டிருந்தது. தற்போது, அனைத்து மக்களும் வாட்ஸ்அப் மூலம் பணம் அனுப்ப வழிவகை செய்யப்பட்டுள்ளது.

அதாவது, வாட்ஸ்அப் பே இப்போது இறுதியாக இந்தியாவில் உள்ள அனைத்து பயனர்களுக்கும் கிடைக்கிறது. முன்னதாக, இந்த சேவையானது இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் (NPCI) விதித்த பயன்பாட்டுக் கட்டுப்பாடுகளை எதிர்கொண்ட நிலையில், தற்போது இந்த வரம்புகள் நீக்கப்பட்டதால், நாடு முழுவதும் மக்களின் தடையற்ற பயன்பாட்டிற்கு வாட்ஸ்அப் பே கிடைப்பது உறுதியாகி இருக்கிறது.

கடந்த இரண்டு ஆண்டுகளாக அதிகபட்சமாக 100 மில்லியன் பயனர்களுக்கு மட்டுமே வாட்ஸ்அப் பே பயன்படுத்தும் வசதி வழங்கப்பட்டிருந்தது. இந்த ஆன்லைன் பணப் பரிவர்த்தனைக்கான சேவையின் பாதுகாப்பு மற்றும் தடையற்ற செயல்பாட்டிற்கு உத்தரவாதம் அளிக்க என்பிசிஐ (NPCI)ஆல் வாட்ஸ்அப்பிற்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், அதன் சமீபத்திய முன்னேற்றங்கள், வாட்ஸ்அப் பே இப்போது அனைத்து இந்திய பயனர்களுக்கும் யுபிஐ சேவைகளைப் பெற முடியும் என்பதை உறுதி செய்துள்ளது. இது குறித்து என்பிசிஐ (NPCI) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “வாட்ஸ்அப் பே மூலம் இந்தியாவில் உள்ள அனைத்து பயனர்களும் இப்போது யுபிஐ சேவைகளை பெற முடியும் என்பதை அறிவிப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்” என்று தெரிவித்துள்ளது.

இதையும் படிக்க: ஸ்மார்ட்ஃபோன் vs சாட்டிலைட் ஃபோன்… வித்தியாசம் என்ன? எப்படி வேலை செய்கின்றன…?

இந்த நடவடிக்கை வாட்ஸ்அப் யூசர்கள் யுபிஐ அடிப்படையிலான மற்ற ஆப்களைப் போலவே, இதிலும் அதே வசதியை பெற அனுமதிக்கிறது. மேலும், வாட்ஸ்அப் பே வங்கி பரிவர்த்தனைகளை ஒழுங்குப்படுத்துகிறது. யூசர்கள் வாட்ஸ்அப்பை விட்டு வெளியேறாமல் பணம் செலுத்த அனுமதிக்கிறது.

கூகுள் பே, ஃபோன் பே மற்றும் பேடிஎம் போன்ற யுபிஐ செயல்படுத்தப்பட்ட பிற ஆப்களைப் போலவே, வாட்ஸ்அப் பே ஆனது பயனர்கள் பணத்தைப் பெற அல்லது பணத்தை அனுப்ப வழி செய்வதுடன், இது தடையற்ற சேவை அனுபவத்தை வழங்குவதை உறுதி செய்கிறது.

இதையும் படிக்க: 2025ஆம் ஆண்டில் ரூ.10,000க்குள் வாங்கக்கூடிய 5 சிறந்த சாம்சங் ஸ்மார்ட்ஃபோன்கள்..! 

இந்தியாவில் வாட்ஸ்அப் பே: வேலை செய்வது எப்படி?

  • முதலில் வாட்ஸ்அப்பைத் திறக்க வேண்டும்.
  • பின்னர், சேட் பக்கத்தின் மேல் வலது மூலையில் உள்ள மூன்று புள்ளிகளை தொட வேண்டும்.
  • அடுத்ததாக, பேமெண்ட் தகவல்களை தேர்வு செய்ய வேண்டும்.
  • அதில், Add Payment Method என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
  • இப்போது, ​​பணம் செலுத்தும் விதிமுறைகளை ஏற்க, ஏற்றுக்கொள் (Accept button) என்கிற பட்டனைத் தொட வேண்டும், இதையடுத்து நீங்கள் வாட்ஸ்அப் பே-ஐ பயன்படுத்த தொடங்கலாம்.
  • அடுத்ததாக சேட் பகுதிக்கு சென்று நீங்க பணம் அனுப்ப வேண்டிய நபரின் பெயரை தேர்வு செய்ய வேண்டும்.
  • பின்னர் கீழ் வலது மூலையில் உள்ள ரூ-ஐ தொட வேண்டும்.
  • இதையடுத்து, நீங்கள் அனுப்ப விரும்பும் தொகையை உள்ளிட வேண்டும்.
  • பரிவர்த்தனையை உறுதிப்படுத்த உங்கள் யுபிஐ பின்னைப் பயன்படுத்தி பணத்தை அனுப்புங்கள்
  • இறுதியாக, உங்கள் பதிவு செய்யப்பட்ட வங்கியிலிருந்து எஸ்எம்எஸ் மூலம் பணம் அனுப்பியது அல்லது பெற்றது உறுதிசெய்யப்படும்.

மெட்டாவுக்குச் சொந்தமான வாட்ஸ்அப், அதன் பிரதான ஆப்பின் மூலம் பணம் செலுத்தும் முறையைக் கொண்டு வந்துள்ளது. இதன்மூலம், பணம் அனுப்புவதற்காக இனி வேறு எந்த ஆப்பிற்கும் செல்ல வேண்டிய அவசியமில்லை என்பதை வாட்ஸ்அப் உறுதி செய்கிறது.



Source link