கான்பூர் டெஸ்டில் இந்தியாவுடனான தோல்வி குறித்து வங்கதேச அணியின் கேப்டன் நஜ்முல் ஷாண்டோ அதிருப்தி தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச அணி, கான்பூரில் 2 ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் விளையாடியது. இதில் முதலில் ஆடிய வங்கதேச அணி, முதல் நாளன்று 107 ரன்கள் எடுத்திருந்த போது மழை குறுக்கிட்டது.
இதனை தொடர்ந்து 2 மற்றும் 3 ஆவது நாள் ஆட்டமும் மழையால் பாதிக்கப்பட்டது. இந்நிலையில், 4ஆம் நாளான நேற்று, வங்கதேச அணி 233 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது. பின்னர், பேட்டிங் ஆடிய இந்திய அணி, அதிரடியாக விளையாடி 34 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 285 ரன்கள் சேர்த்து டிக்ளேர் செய்தது.
தொடர்ந்து, தனது 2 ஆவது இன்னிங்ஸை தொடங்கிய வங்கதேச அணி, 11 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 26 ரன்கள் எடுத்தது. இந்நிலையில், கடைசி நாளான இன்று, வங்கதேசம் தனது ஆட்டத்தை தொடர்ந்து 47 ஓவர்களில் 146 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதன்மூலம் இந்திய அணிக்கு 95 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
ஜெய்ஸ்வால் அதிரடியால் 17.2 ஓவர்களில் இந்திய அணி 95 ரன்கள் வெற்றி இலக்கை எளிதாக எட்டியது. இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த விராட் கோலி 29 ரன்களும், ரிஷப் பந்த் 4 ரன்களும் எடுத்திருந்தனர்.
இந்நிலையில் போட்டியில் தோல்வியடைந்தது குறித்து வங்கதேச அணியின் கேப்டன் நஜ்முல் ஷாண்டோ கூறியதாவது-
2 டெஸ்ட் போட்டியிலும் எங்கள் பேட்டிங் திருப்தி அளிக்கவில்லை. டெஸ்டில் நீண்ட நேரம் பேட்டிங் செய்தால் மட்டுமே மைதானத்தின் தன்மையை புரிந்து கொண்டு ரன்கள் குவிக்க முடியும். ஆனால் எங்கள் வீரர்கள் அதிகபட்சம் 40 பந்துகள் வரை சந்தித்து விக்கெட்டை இழக்கிறார்கள்.
இதையும் படிங்க – கான்பூர் டெஸ்டில் இந்திய அணியின் வெற்றிக்கான காரணங்கள்… ரோஹித் சர்மா ஓபன் டாக்
முதல் டெஸ்டில் அஷ்வின், ஜடேஜா பேட்டிங் செய்த விதம் சிறப்பாக இருந்தது. பந்து வீச்சில் எங்கள் வீரர்கள் சிறப்பான திறமையை வெளிப்படுத்தி நெருக்கடியை குறைத்தனர். சரியான பார்ட்னர்ஷிப் இல்லாததால் எங்கள் அணியால் தோல்வியை தவிர்க்க முடியவில்லை. என்று தெரிவித்தார்.
.