Last Updated:

இங்கிலாந்து அணி தற்போது நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் போட்டி தொடரில் விளையாடி வருகிறது.

News18

147 ஆண்டுகால கிரிக்கெட் வரலாற்றில் மற்ற எந்த அணியும் எளிதில் நெருங்க முடியாத சாதனையை இங்கிலாந்து அணி ஏற்படுத்தியுள்ளது. இதனை அந்த அணியின் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

இங்கிலாந்து அணி தற்போது நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் போட்டி தொடரில் விளையாடி வருகிறது. 3 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் முதல் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று முன்னிலையில் உள்ளது.

இந்நிலையில் இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி வெலிங்டன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 280 ரன்கள் எடுத்தது. முதல் இன்னிங்ஸை தொடர்ந்த நியூசிலாந்து அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 125 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதன் மூலம் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 155 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

இந்நிலையில் இன்று 2-ஆவது இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து அணி பொறுப்புடன் விளையாடி ரன்களை குவித்தது. அந்த அணியின் 4 பேட்ஸ்மேன்கள் அரை சதத்தை நிறைவு செய்தனர். இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி 5 விக்கெட் இழப்புக்கு 378 ரன்கள் எடுத்துள்ளது.

இதன்மூலம் இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவிலேயே இங்கிலாந்து அணி 533 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. இதனால் இந்த டெஸ்டில் இங்கிலாந்து அணி தோல்வி அடைவதற்கு வாய்ப்புகள் மிக மிக குறைவாகவே உள்ளன.

இந்த விபரங்கள் ஒரு பக்கம் இருந்தாலும், 147 ஆண்டுகால கிரிக்கெட் வரலாற்றில் டெஸ்ட் போட்டிகளில் 5 லட்சம் ரன்களை எடுத்த ஒரே அணி என்ற சாதனையை இன்று இங்கிலாந்து ஏற்படுத்தியுள்ளது. இந்த சாதனையை ஏற்படுத்த இங்கிலாந்து அணிக்கு 1082 டெஸ்ட் போட்டிகள் தேவைப்பட்டன.

இந்த சாதனை பட்டியலில் 4 லட்சத்து 28 ஆயிரத்து 688 ரன்கள் எடுத்து ஆஸ்திரேலியா அணி இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்திய அணி மூன்றாம் இடத்தை பிடித்திருக்கிறது. இந்திய அணி டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் ஒட்டுமொத்தமாக 2 லட்சத்து 78 ஆயிரத்து 751 ரன்கள் எடுத்திருக்கிறது.

மற்ற சர்வதேச அணிகள் ஏற்படுத்திய பல சாதனைகளை இந்திய அணி முறியடித்தாலும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இங்கிலாந்துடைய இந்த உச்சபட்ச சாதனையை இந்திய அணியால் எளிதில் நெருங்க முடியாது என்று சர்வதேச கிரிக்கெட் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.



Source link