டி-20 மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட்டில் 58 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி இந்திய அணியை வீழ்த்தியது.
மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகள் கடந்த 3 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகின்றன. இதில் இந்திய மகளிர் அணியின் முதல் லீக் போட்டி துபாயில் நேற்று நடைபெற்றது.
டாஸ் வென்ற நியூசிலாந்து முதலில் பேட்டிங் செய்தது. இந்திய வீராங்கனைகள் வீசிய பந்துகளை எதிரணி வீராங்கனைகள் பதம் பார்த்தனர். நியூசிலாந்து தரப்பில் ஆட்டமிழக்காமல், சோஃபி டெவின் 57 ரன்கள் குவித்தார். 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்த நியூசிலாந்து அணி 160 ரன்கள் குவித்தது.
இதையும் படிக்க:
இன்னும் எத்தனை போட்டிகளில் வென்றால் WTC பைனலுக்கு இந்தியா தகுதிபெறும் தெரியுமா?
161 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய இந்திய வீராங்கனைகள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து அதிர்ச்சியளித்தனர். கேப்டன் ஹர்மன் பிரீத் கவுர் மட்டுமே அதிகபட்சமாக 15 ரன்கள் எடுத்தார். மற்ற வீராங்கனைகள் பிரகாசிக்கத் தவறியதால் இந்திய அணி 19 ஓவர்கள் முடிவில் 102 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது.
இதனால் 58 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி அபார வெற்றி பெற்றது. இந்திய அணி பாகிஸ்தான் அணியுடன் நாளை பலப்பரீட்சை நடத்த உள்ளது. மாலை 3 மணிக்கு தொடங்கும் இந்த போட்டி, துபாயில் உள்ள மைதானத்தில் நடைபெற உள்ளது.
.