இந்திய சினிமா வரலாற்றில் அதிவேகமாக ரூ. 500 கோடி வசூல் செய்த முதல் திரைப்படம் என்ற சாதனையை அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளிவந்துள்ள ‘புஷ்பா 2’ திரைப்படம் ஏற்படுத்தியுள்ளது.
முதல் பாகம் மிகப் பெரும் வரவேற்பைப் பெற்ற நிலையில், 2-ஆவது பாகம் டிசம்பர் 5-ஆம் தேதி கடந்த வியாழன் அன்று வெளியானது. தமிழ்நாட்டில் இந்தப் படத்திற்கு அதிகமான திரையரங்குகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்தி வட்டாரங்களிலும் ‘புஷ்பா’ படத்தின் முதல் பாகம் மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. இதனால் இரண்டாம் பாகத்திற்கான எதிர்பார்ப்பு அதிகம் காணப்பட்டது.
படம் வெளியான நாள் முதல் பாசிட்டிவான விமர்சனங்கள் ‘புஷ்பா’ படத்திற்கு வந்து கொண்டே இருக்கின்றன. இந்தப் படத்துக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். சாம் சி.எஸ். பின்னணி இசை அமைத்திருக்கிறார். சுகுமார் இயக்கியுள்ள இந்தப் படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
‘புஷ்பா 2’ திரைப்படம் வெளியான நாள் முதல் வசூலில் புதிய சாதனையை ஏற்படுத்தி வருகிறது. முதல் நாளில் மட்டும் இந்தத் திரைப்படம் உலகம் முழுவதும் ரூ. 294 கோடி வசூலித்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்திருந்தது. முதல் 2 நாட்களில் 449 கோடி ரூபாய் அளவுக்கு இந்தப் படம் வசூலித்ததாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், மூன்று நாட்கள் முடியும் முன்பே ‘புஷ்பா 2’ படத்தின் வசூல் 500 கோடி ரூபாயை கடந்துள்ளது.
இன்று விடுமுறை நாள் என்பதால் வசூல் உச்சபட்சமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த வாரம் இந்தத் திரைப்படம் ஹவுஸ் ஃபுல்லாக ஓடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் இந்தத் திரைப்படம் மிக எளிதாக ரூ. 1000 கோடி வசூல் தாண்டும் என சினிமா வர்த்தக நிபுணர்கள் கணித்துள்ளார்கள்.
இதையும் படிங்க – OTT New Movies | இந்த வாரம் ஓடிடி-யில் வெளியான படங்கள்.. மிஸ் பண்ணாம பாருங்க..!!
தெலுங்கு வட்டாரத்தைத் தாண்டி இந்தி மொழி பேசும் மாநிலங்களிலும் ‘புஷ்பா 2’ படத்திற்கு மிகுந்த வரவேற்பு இருப்பதுதான் படம் வசூலை அள்ளுவதற்கு முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது.
.