பாதுகாப்பான தகவல் தொடர்பை நோக்கமாகக் கொண்டு இந்த ‘சம்பவ்’ (SAMBHAV) (Secure Army Mobile Bharat Version) ஸ்மார்ட்போன்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இந்த திட்டம் கடந்த ஆண்டு தொடங்கப்பட்டது. ராணுவத்தினர், அவர்களது சொந்த ஸ்மார்ட்போன்களைப் பயன்படுத்துவதில்கூட குறிப்பிட்ட கட்டுப்பாடுகள் இருந்து வருகிறது. இராணுவத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும்விதமாக இதுபோன்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன.
அதே நேரத்தில், ஒவ்வொரு ஆண்டும் நாட்டின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, இராணுவத்திற்கென மத்திய அரசு பெரிய பட்ஜெட்டை ஒதுக்கி வருகிறது. இதன்மூலம் இராணுவ தளவாடங்கள் வாங்கப்படுவதுடன், பிற பாதுகாப்பு அம்சங்களும் உருவாக்கப்படுகின்றன. இதன்மூலம் எல்லை பாதுகாப்பும் உறுதி செய்யப்படுகிறது.
அந்த வகையில், ராணுவ அதிகாரிகளுக்கு பாதுகாப்பான தகவல் தொடர்பு சாதனங்களை வழங்குவதன் மூலம் அவர்களின் பாதுகாப்பை மேம்படுத்த முடியும் என்பதில் இந்திய ராணுவம் உறுதியாக உள்ளது. பாதுகாப்பான தகவல் தொடர்புக்காக, 30,000 சம்பவ் தொலைபேசிகள் இராணுவ அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ளதாக பிரபல செய்தி நிறுவனமான ஏஎன்ஐ தெரிவித்துள்ளது.
முன்னதாக, 2024 அக்டோபரில் சீனாவுடன் நடைபெற்ற இறுதிக்கட்ட பேச்சுவார்த்தையின்போது, இந்திய ராணுவம் சம்பவ் ஸ்மார்ட்போன்களைப் பயன்படுத்தியது. ராணுவத் தளபதி ஜெனரல் உபேந்திர திவேதி தனது வருடாந்திர செய்தியாளர் கூட்டத்தில், சம்பவ் தொலைபேசி பாதுகாப்பான தகவல் தொடர்புக்காக பயன்படுத்தப்பட்டதை உறுதிப்படுத்தினார்.
‘சம்பவ்’ ஸ்மார்ட்ஃபோன்கள்
SAMBHAV (Secure Army Mobile Bharat Version) ஸ்மார்ட்போன்கள் நவீன 5G தொழில்நுட்பத்தில் செயல்படுகின்றன மற்றும் பாதுகாப்புக்காக முழுவதுமாக என்கிரிப்ட் செய்யப்பட்டுள்ளன.
இவ்வாறாக என்கிரிப்ட் செய்யப்பட்ட சுமார் 30,000 எண்ணிக்கையிலான ஸ்மார்ட்போன்கள், பாதுகாப்பான தகவல் தொடர்புக்காக இராணுவ அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன. மேலும், இந்த ஸ்மார்ட்போன்கள் மிகவும் முக்கியமான இராணுவ தகவல்களைப் பகிர பயன்படுத்தப்படுவதால், முழுவதுமாக அதன் சொந்த அப்ளிகேஷன்களையே பயன்படுத்துகின்றன.
இதையும் படிக்க: iQOO Neo 10R 5ஜி மொபைல்…. இந்தியாவில் எப்போது அறிமுகமாகிறது தெரியுமா…?
மேலும், தகவல் தொடர்புக்காக பயன்படுத்தப்படும் இந்த ஸ்மார்ட்போன்களில், எம்-சிக்மா (M-Sigma) போன்ற ஆப்கள் இடம்பெற்றுள்ளன. இது மெசேஜ், டாக்குமெண்ட்ஸ், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களைப் பகிர்வதற்காக வடிவமைக்கப்பட்டதாகும். இது கிட்டத்தட்ட, பிரபல மெசேஜிங் ஆப்பான வாட்ஸ்அப் போன்றே இருக்கும் என்று கூறப்படுகிறது.
ஏர்டெல் மற்றும் ஜியோ மொபைல் நெட்வொர்க்குகளை பயன்படுத்தக்கூடிய இந்த குறிப்பிட்ட ஸ்மார்ட்போன்கள், முக்கியமான ஆவணங்கள் பொது வெளியில் அல்லது மக்களிடம் கசிவதைத் தடுக்க உதவும் என்று இராணுவம் நம்புகிறது.
முன்னதாக, பல இந்திய இராணுவ அதிகாரிகள், இராணுவ தகவல் மற்றும் ஆவணங்களைப் பகிர வாட்ஸ்அப் உள்ளிட்ட பிற ஆப்களை பயன்படுத்தி வந்தனர். மேலும், அவர்கள் பகிர்ந்த தகவல்கள் வெளியில் கசிந்தன. எனவே, இந்த பிரச்சனையை தவிர்ப்பதில் எம்-சிக்மா முக்கியப் பங்கு வகிக்கும் என்று கூறுகிறார்கள்.
இதையும் படிக்க: உங்கள் சிம் கார்டு வேலிடிட்டியை அதிகரிக்க வேண்டுமா…? ரூ.20க்கு ரீசார்ஜ் செய்தாலே போதும்…!
உடனடி இணைப்புடன், பாதுகாப்பான தகவல் தொடர்புகளை வழங்குவதற்காக, இந்திய இராணுவம் உள்நாட்டிலேயே “எண்ட்-டு-எண்ட் செக்யூர் மொபைல் எக்கோசிஸ்டமை” உருவாக்கியுள்ளது. இந்த ஸ்மார்ட்போன்களில், அனைத்து முக்கிய அதிகாரிகள் மற்றும் அவசர உதவி எண்கள் பதியப்பட்டிருக்கும். எனவே, தொடர்பு எண்களை யாரும், தனியாக பதிந்து கொள்ள வேண்டிய அவசியமில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
January 27, 2025 6:48 PM IST