இரண்டு நாடுகளை தாக்க தங்களுக்கு உரிமை உள்ளதாக ரஷ்ய அதிபர் புதின் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்கா தந்த நீண்ட தூர ஏவுகணைகளை ஏவி உக்ரைன் தாக்கிய நிலையில் ஹைப்பர்சானிக் மீடியம் ரேஞ்ச் ஏவுகணைகள் மூலம் ரஷ்யா பதிலடி கொடுத்துள்ளது. உக்ரைனுக்கு தாங்கள் தந்த தொலைதூரம் சென்று தாக்கக் கூடிய ஏவுகணைகளை ரஷ்யா மீது ஏவ அமெரிக்க அதிபர் பைடன் ஒப்புதல் தந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பு உக்ரைன் அவற்றை அண்டை நாடு மீது ஏவியது.
தங்கள் மீது தாக்குதல் நடத்தினால் அணு ஆயுதம் மூலம் பதிலடி தருவோம் என ரஷ்ய அதிபர் புடின் எச்சரித்திருந்த நிலையில், சில தொழிற்சாலைகள் மீது ஹைப்பர்சானிக் ஏவுகணைகளை ரஷ்யா நேற்று வீசியது. ஓர்ஷ்னிக் என்ற இந்த ஏவுகணையை எந்த ஆயுதத்தாலும் தடுக்க முடியாது என்று பெருமிதத்துடன் புதின் கூறியுள்ளார்.
இது தொடர்பாக ரஷ்ய அரசு தொலைக்காட்சியில் உரையாற்றிய அதிபர் விளாடிமிர் புதின், புதிதாக தயாரிக்கப்பட்ட ஹைப்பர்சானிக் நடுத்தர தூர ஏவுகணை, அணு ஆயுதம் இன்றி, உக்ரைனில் உள்ள புகழ்வாய்ந்த தொழிற்சாலைகளை தாக்கியதாக தெரிவித்துள்ளார். அமெரிக்கா, இங்கிலாந்து நாடுகளில் தயாரான ஆயுதங்களைக் கொண்டு ரஷ்யா தாக்கப்பட்டுள்ளதற்கு இது பதிலடி என்றும் அந்நாடுகள் மீதும் தாக்குதல் நடத்தி ரஷ்யாவுக்கு முகாந்திரம் உள்ளதாகவும் புடின் கூறியுள்ளார்.
இந்நிலையில் இது தொடர்பாக வீடியோ வெளியிட்டுள்ள உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, கண்டம் விட்டு கண்டம் தாக்கும் ஏவுகணையை தங்கள் நாட்டை ஒரு சோதனைக் கூடமாக புத்தியற்ற ஒரு அண்டை நாடு பயன்படுத்துவதாக விமர்சித்துள்ளார். அதேபோல் அமெரிக்காவையும், இங்கிலாந்தையும் தாக்க தங்களுக்கு உரிமை இருப்பதாக ரஷ்ய அதிபர் புடின் அறிவித்துள்ளார்.
.