இன்றைய காலகட்டத்தில் டெஸ்ட் கிரிக்கெட்டில் காணப்படும் அதிரடி கிரிக்கெட் அணுகுமுறையை இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி பாராட்டியுள்ளார்.
சமீப காலமாக டெஸ்ட் கிரிக்கெட்டை பல அணிகளும் அதிரடியாக விளையாடத் தொடங்கியுள்ளனர். 5 நாட்கள் டெஸ்ட் கிரிக்கெட் விளையாடி அதை டிராவில் முடிப்பதற்குப் பதிலாக, அதிரடியாக விளையாடி, அந்தப் போட்டிக்கு ஒரு முடிவு வரவேண்டும் என நினைக்கிறார்கள்.
இந்த ‘பேஸ்பால்’ அணுகுமுறைக்கு இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி தனது வரவேற்பைத் தெரிவித்துள்ளார். இந்தியாவிற்காக 90 டெஸ்ட் போட்டிகள் விளையாடிய தோனி, இதுகுறித்து தோனி பேசும்போது, “கிரிக்கெட்டுக்கு நீங்கள் எந்தப் பெயரையும் சூட்டலாம். கிரிக்கெட் என்பது தொடர்ந்து வளர்ந்து வருகிறது. மக்கள் கிரிக்கெட்டை விளையாடுவது மிகவும் வித்தியாசமாக இருக்கிறது. ஒரு காலத்தில் ஒரு ஓடிஐ போட்டியில் ஒரு குறிப்பிட்ட ஸ்கோர் பாதுகாப்பானதாகக் கருதப்பட்டது, இப்போது அந்த ஸ்கோர் டி20 போட்டியிலும் பாதுகாப்பானதாக இல்லை.
இதையும் படிக்க:
தோனி குறித்து சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகி வெளியிட்ட தகவல்… ரசிகர்கள் உற்சாகம்!
நீங்கள் அதற்கு ஒரு பெயர் கொடுத்தால், அது மிகவும் சுவாரஸ்யமாகிறது, ஏனென்றால் நீங்கள் அதைப் பற்றிப் பேசத் தொடங்குகிறீர்கள், அதைப் பற்றிச் சிந்திக்கத் தொடங்குகிறீர்கள், ஆனால் இறுதியில் அது என்ன? அது கிரிக்கெட்டை விளையாடுவதற்கான ஒரு வழி மட்டும்தான்” எனக் கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், ஐந்தாவது நாளில் டிராவாகப்போகும் போட்டியில் விளையாடுவதன் சவால்கள் குறித்துப் பேசினார்.
“எனக்கு மிகவும் கடினமான நேரம் டெஸ்ட் போட்டியின் ஐந்தாவது நாள், அதாவது கடைசி நாள். அது 100% டிராவாகப் போகிறது என்பதை உங்களுக்குத் தெரிந்தாலும், நான் இன்னும் கிட்டத்தட்ட 2.5 செஷன்களுக்கு விக்கெட் கீப்பிங் செய்ய வேண்டும். அது மிகவும் சோர்வடையச் செய்யும். பந்து வீச்சாளர்கள் விக்கெட்டுகளை எடுக்க விரும்புவார்கள், பேட்ஸ்மேன்கள் ரன்கள் எடுக்க முயற்சிப்பார்கள், ஆனால் அந்த டெஸ்ட் போட்டி முடிவுக்கு வரப்போவதில்லை.
கிரிக்கெட் பற்றி அதிகம் தெரியாத ஒருவருக்கு நாம் ஐந்து நாட்கள் காலை 9.30 மணிக்குத் தொடங்கி 4.30 மணி வரை விளையாடுகிறோம், ஐந்து நாட்களுக்குப் பிறகும் எங்களுக்கு முடிவு கிடைக்கவில்லை அது டிராவாக முடிவடைகிறது எனச் சொல்லுங்கள். அது விளையாட்டிற்குச் சரியானது அல்ல. இன்று டெஸ்ட் போட்டி ஒரு முடிவை நோக்கி இருப்பதை நான் விரும்புகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
.