கடும் மழையுடனான சீரற்ற கால நிலையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக அரசாங்கம் 345 மில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ளதாக பாதுகாப்பு பிரதியமைச்சர் அருண ஜயசேகர பாராளுமன்றத்தில் தெரிவித்தார். நாட்டில் 24 மாவட்டங்களில் 1, 39,439 குடும்பங்களைச் சேர்ந்த 4 இலட்சத்து 69 ஆயிரத்து 872 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் சபையில் அவர் சுட்டிக் காட்டினார்.

இந்த இயற்கை சீற்றத்தில் 18 பேர் பலியாகி 20 பேர் காயமடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் 247 நலன்புரி நிலையங்களில் 12, 300க்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த 38 ஆயிரத்து 600 பேர், பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டதாகவும் அவர்களில் 7,600ற்கும் மேற்பட்டவர்கள் தொடர்ந்தும் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

நாட்டில் கடந்த சில தினங்களாக நிலவும் சீரற்ற காலநிலை மற்றும் அதன் பாதிப்புகள் தொடர்பில், அரசாங்கம் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பில் பாராளுமன்றத்தில் நேற்று விளக்கமளிக்கும் போதே பாதுகாப்பு பிரதியமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.அது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்; சீரற்ற காலநிலையால் ஏற்பட்ட அனர்த்தங்களில் மரணமடைந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்தின் சார்பில் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

பாதிக்கப்பட்ட அனைத்து மக்கள் தொடர்பிலும் அரசாங்கம் விசேட கவனம் செலுத்தியுள்ளது.

அந்த வகையில் நாட்டின் 24 மாவட்டங்களில் நேரடியாகவும் மறைமுகமாகவும் இலட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வடக்கு, கிழக்கு, மத்திய,வடமத்திய மாகாணங்கள் உட்பட பல மாவட்டங்களிலும் இந்த பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. தொடர்ச்சியாக நாட்டில் பெய்த கடும் மழையே இதற்குக் காரணமாகும்.இந்த நிலையில் அவசர நிலையை பிரகடனப்படுத்தி ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் முப்படையினர் உட்பட சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அனைத்து பணிப்புரைகளையும் வழங்கினார். உயிராபத்துக்களிலிருந்து மக்களை பாதுகாப்பதற்காக அனைத்து நடவடிக்கைகளையும் உடனடியாக மேற்கொள்ளுமாறு அவர் கேட்டுக் கொண்டார். இதற்கு தேவையான போதியளவு நிதியை திறைசேரியிடமிருந்து பெற்றுக் கொடுப்பதாகவும் அவர் அதன் போது தெரிவித்திருந்தார்.அந்த வகையில் அரசாங்கம் அது தொடர்பில் அர்ப்பணிப்புடன் செயற்பட்டது.

மேற்படி பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக திறைசேரியினால் 345 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டது.

The post இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம்: ரூ. 345 மில். ஒதுக்கீடு appeared first on Thinakaran.



Source link