இலங்கையின் 10வது நாடாளுமன்றத்திற்கான தேர்தல் வாக்குப் பதிவு நேற்று (14ம் தேதி) நடைபெற்றது. இதனை அடுத்து அங்கு பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, அதிபர் அநுர குமார திசநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் கட்சி மொத்தம் 141 இடங்களில் வென்று பெரும்பான்மை பெற்றுள்ளது.

இலங்கை நாடாளுமன்றத்தில் உள்ள 225 இடங்களுக்கான தேர்தல் நேற்று நடைபெற்றது. இதில், அதிபர் அநுர குமார திசாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி, ஐக்கிய மக்கள் சக்தி, இலங்கை தமிழரசு கட்சி, புதிய ஜனநாயக முன்னணி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன உள்ளிட்ட கட்சிகள் போட்டியிட்டன.

விளம்பரம்

இலங்கையை பொறுத்தவரையில் அதிபர் ஆட்சி முறை கொண்ட நாடு என்றாலும், நாடாளுமன்றத்திற்குத் தான் முக்கியமான அதிகாரங்கள் உள்ளன. மொத்தமுள்ள 225 இடங்களில் 196 இடங்களுக்கான உறுப்பினர்களை மக்கள் நேரடியாக வாக்களித்துத் தேர்வு செய்வார்கள். மீதமுள்ள 29 இடங்கள், கட்சிகள் தேசிய அளவில் பெற்ற வாக்கு சதவீதத்தின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.

இலங்கை நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பெற குறைந்தபட்சம் 113 இடங்களை வெல்ல வேண்டும். 150 இடங்களுக்கு மேல் வெற்றி பெற்றால் சிறப்பு பெரும்பான்மை (மெஜாரிட்டி) கிடைக்கும். அதன் மூலம் அரசியலமைப்புச் சட்டத்தில் மாற்றங்களைக் கொண்டுவருவது போன்ற பெரிய நடவடிக்கைகளையும் மேற்கொள்ள முடியும்.

இப்படியான சூழலில் அதிபர் அநுர குமார திசாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி 141 இடங்களில் வென்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கிறது. அதேபோல், ஐக்கிய மக்கள் சக்தி 35 இடங்களிலும், இலங்கை தமிழரசுக் கட்சி 7 இடங்களிலும், புதிய ஜனநாயக முன்னணி 3 இடங்களிலும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன 2 இடங்களிலும் வென்றுள்ளன.

விளம்பரம்

இதையும் படியுங்கள் :
ரஷ்யாவில் ‘செக்ஸ்’ அமைச்சகத்தை ஏற்படுத்த அதிபர் புதின் திட்டம்… அதிர்ச்சி தரும் பின்னணி

அதேபோல், தேசிய அளவில் கட்சிகள் பெற்ற வாக்கு சதவீதத்தின் அடிப்படையில் தேர்வு செய்யப்படும் 29 இடங்களில் அநுர குமார திசாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி 61.56% பெற்றுள்ளது. இதன் மூலம், அந்தக் கூட்டணிக்கு 18 இடங்கள் கிடைத்துள்ளன. எனவே இலங்கை நாடாளுமன்றத்தில் தேசிய மக்கள் சக்தி மக்கள் வாக்களித்ததன்படி 141 இடங்களும், வாக்கு சதவீதத்தின்படி 18 இடங்களும் என மொத்தம் 159 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.

விளம்பரம்

இதற்கு அடுத்தப்படியாக 17.66% வாக்குகள் பெற்ற ஐக்கிய மக்கள் சக்திக்கு 5 இடங்களும், 4.49% வாக்குகள் பெற்றுள்ள புதிய ஜனநாயக முன்னணி 3 இடங்களும் பெற்றுள்ளன. ஸ்ரீலங்க பொதுஜன பெரமுனவுக்கும், இலங்கை தமிழரசுக் கட்சிக்கும் தலா ஓரிடம் கிடைத்துள்ளது.

இந்த வெற்றி குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு செய்துள்ள அதிபர் அநுர குமார திசாநாயக்க, “மறுமலர்ச்சி யுகத்தை ஆரம்பிக்க‌ தோள் கொடுத்த அனைவருக்கும் நன்றி” என்று தெரிவித்துள்ளார்.

.



Source link