முன்பு, வங்கி அல்லது வங்கி அல்லாத எந்த நிதி நிறுவனத்திலும் கடன் பெறுவது என்பது எளிதான காரியம் இல்லை. பொதுவாக, கடன் வழங்கும் நிதி நிறுவனங்கள் சம்பளம், பாஸ்புக் ஸ்டேட்மெண்ட் உள்ளிட்ட சில முக்கிய விவரங்களை கடன் பெறுநரிடமிருந்து வாங்குகின்றன. மேலும் தனிநபரின் கிரெடிட் ஸ்கோரையும் சோதித்த பிறகே கடன் வழங்குவது குறித்து முடிவுகளை எடுக்கின்றன. இந்த செயல்முறைகளை எளிதாக்கும் வகையில், வங்கிகள் உள்ளிட்ட பல நிதி நிறுவனங்கள் மக்களுக்கு நிமிடத்தில் கடன் வழங்கும் எளிய அம்சங்களை அறிமுகப்படுத்தி இருக்கின்றன. ஆனால், அதற்கும் சில குறிப்பிட்ட தகவல்களை நாம் கடன் பெறுவதற்காக வழங்க வேண்டியிருக்கும்.
எனவே, இதுபோன்ற நிதி நிறுவனங்களில் கடன் பெற சம்பளதாரராக இருக்கும் வேண்டும் என்று தான் பலரும் நினைக்கிறார்கள். ஆனால், இல்லத்தரசிகளும் பயனடையும் வகையில், பல்வேறு நிதி நிறுவனங்கள் வீட்டில் இருக்கும் பெண்களுக்கும் கடன் வழங்கும் வசதியை அறிமுகப்படுத்தி இருக்கின்றன. உடனடி கடன்களைப் பெறவும், நிதி நெருக்கடிகளை எளிதாகக் கையாளவும் விரும்பும் இல்லத்தரசிகளுக்கு இந்த தகவல் உதவியாக இருக்கும். உடனடி தனிநபர் கடன்கள் குறுகிய கால மற்றும் விரைவான நிதி உதவியை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.
முக்கிய ஆவணங்கள் மற்றும் ஒப்புதல் செயல்முறைகள் போன்றவற்றை பூர்த்தி செய்யும் பாரம்பரிய கடன்களைப் போலல்லாமல், விண்ணப்பம் மற்றும் ஒப்புதலை விரைவாக வழங்கும் ஆன்லைன் தளங்கள் மூலம் உடனடி கடன்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த வசதியை பயன்படுத்தி, ஒரு சில கிளிக்குகளில், இல்லத்தரசிகள் கடன் பெற விண்ணப்பிக்கலாம் மற்றும் சில மணிநேரங்களுக்குள் தங்களது வங்கிக் கணக்கில் கடன் தொகைகயைும் பெறலாம்.
கடன்களின் முக்கிய அம்சங்கள்:
மலிவான வட்டி விகிதங்கள்: பெண்களுக்காக வடிவமைக்கப்பட்டிருக்கும் கடன்கள் பெரும்பாலும், குறைந்த வட்டி விகிதங்களில் வழங்கப்படுகிறது. எனவே, மலிவு விலையில் கடன் பெறவும், எளிதாக நிர்வாகிக்கவும் இது சிறந்த தேர்வாக இருக்கிறது.
குறைந்த கட்டணங்கள்: நிதி நிறுவனங்கள் பொதுவாக, பெண்களை இலக்காகக் கொண்ட கடன்களுக்கு குறைவான செயலாக்கக் கட்டணங்களையே வசூலிக்கின்றன.
பணயம் தேவையில்லை: இத்தகைய உடனடி கடன்களுக்கு ஈடாக மக்கள் எந்தவிதமான பொருளையோ, உத்தரவாத்தையே சமர்பிக்கத் தேவையில்லை. எனவே, மதிப்புமிக்க சொத்துக்களை பணயம் வைத்து நிதி உதவி தேட வேண்டிய சூழல் இல்லாததால் இல்லத்தரசிகளுக்கு இது மன அழுத்தத்தைக் குறைக்கிறது.
விரைவான செயல்முறை: அங்கீகரிக்கப்பட்ட சில மணி நேரங்களுக்குள், கடன் தொகை கடன் வாங்குபவரின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும்.
தேவையான ஆவணங்கள்:
உடனடி தனிநபர் கடனுக்கு விண்ணப்பிக்க, குறைந்தபட்ச ஆவணங்களே தேவைப்படும் என்பதால் இது ஒரு எளிமையான செயல்முறையாகும். ஆதார் அட்டை, பாஸ்போர்ட், பான் கார்டு அல்லது வாக்காளர் அடையாள அட்டை போன்ற அடிப்படை அடையாளச் சான்றில் தேவையானவற்றை வழங்க வேண்டும். இதில் முகவரிச் சான்றுடன், ஆதார் அட்டை, பாஸ்போர்ட், பயன்பாட்டு பில் அல்லது வாக்காளர் ஐடி ஆகியவை அடங்கும்.
விண்ணப்பிப்பது எப்படி?:
- உடனடி தனிநபர் கடனுக்கு விண்ணப்பிப்பது என்பது மிகவும் எளிய வழிமுறைகளில் ஒன்று.
- நீங்கள் தேர்ந்தெடுக்கும் வங்கி அல்லது கடன் வழங்குநரின் வலைத்தளத்தை பார்வையிட வேண்டும் அல்லது மொபைல் ஆப்பை பயன்படுத்த வேண்டும்.
- பின்னர், பதிவுசெய்யப்பட்ட உங்களது மொபைல் எண்ணைப் பயன்படுத்தி உள்நுழைய வேண்டும்.
- அதில், உடனடி தனிநபர் கடனுக்கான விருப்பத்தைத் தேர்வு செய்ய வேண்டும்.
- அடுத்ததாக, தேவையான விவரங்களை கொடுத்து, தேவையான ஆவணங்களையும் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
- இதையடுத்து, குறிப்பிட்ட கடன் வழங்குநர் உங்களது கோரிக்கையை அங்கீகரித்த பின்னர், கடன் தொகை உங்களது வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும்.
விண்ணப்பிப்பதற்கு முன் கவனிக்க வேண்டியவை:
உடனடி கடனுக்கு விண்ணப்பிப்பதற்கு முன்பாக, கவனத்தில் கொள்ள வேண்டிய சில விவரங்களை இங்கே பார்ப்போம்.
கடனை திருப்பிச் செலுத்தும் காலம்: இந்தக் கடன்கள் பொதுவாக குறுகிய காலத்தில் திருப்பிச் செலுத்தும் முறைகளில் வருகின்றன, எனவே உங்கள் பட்ஜெட்டுக்கு ஏற்றவாறு அதனை தேர்வு செய்வது முக்கியம்.
தகுதி: உங்களது கோரிக்கை நிராகரிக்கப்படுவதைத் தவிர்க்க, நீங்கள் கடன் பெறுவதற்கான தகுதியை பெற்றிருக்கிறீர்கள் என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். ஏனெனில், இது உங்கள் கிரெடிட் ஸ்கோரை எதிர்மறையாக பாதிக்கும்.
விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்: கட்டணங்கள் மற்றும் நிபந்தனைகளைப் முழுவதுமாக அறிந்துகொள்ள எப்போதும் சிறிய எழுத்துக்களில் கொடுக்கப்பட்டுள்ளதை முழுவதுமாக படிக்க வேண்டும்.
இத்தகைய, உடனடி கடன்கள் இல்லத்தரசிகளுக்கு நிதி சவால்களை எதிர்கொள்ள விரைவான தீர்வை வழங்குகின்றன. எனவே, ஆன்லைன் தளங்கள் மற்றும் மைக்ரோபைனான்ஸ் உள்ளிட்ட விருப்பங்களை ஆராய்வதன் மூலம், திட்டமிடப்படாத செலவுகளுக்கான நிதியை அணுகலாம் மற்றும் தகவலறிந்த முடிவுகளை எடுக்கலாம்.
January 21, 2025 1:55 PM IST