Last Updated:
இஸ்ரேல் – ஹமாஸ் போர் நடைபெற்றுவரும் நிலையில், இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவுக்கு சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.
இஸ்ரேல் – ஹமாஸ் இடையே கடந்த ஆண்டு அக்டோபர் 7ம் தேதி போர் மூண்டது. ஒரு வருடமாகியும் அங்கு தொடர்ந்து தாக்குதல் சம்பவங்கள் நடந்துவருகின்றன. முதலில் இஸ்ரேல் – ஹமாஸ் இடையே துவங்கிய போர், பிறகு பெலனானின் ஹிஸ்புல்லா, ஈரான் என தற்போது நீண்டுள்ளது.
இதுவரை இஸ்ரேல் – ஹமாஸ் இடையேயான போரில் இஸ்ரேல் தாக்குதலில் காசா பகுதியில் இருக்கும் பாலஸ்தீனியர்கள் சுமார் 44,056 பேர் கொல்லப்பட்டுள்ளனர். அதேபோல், 1,04,286 பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளது.
இதேபோல், ஹமாஸ் தாக்குதலில் இஸ்ரேல் நாட்டிற்குள் 1,139 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
இது மட்டுமின்றி, காசாவில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு செல்லும் உணவு, நீர், மருந்து உள்ளிட்டவற்றை எல்லாம் ஒரு கட்டத்தில் இஸ்ரேல் தடுத்து நிறுத்தியது. இப்படி அங்கு தொடர்ந்து பல்வேறு இன்னல்களுக்கு மக்கள் உள்ளாகிவருகின்றனர்.
இந்நிலையில், இந்தப் போரில் மனித உரிமைகள் மீறப்பட்டதாகவும் போர் குற்றங்கள் நடந்ததாகவும் விமர்சனங்கள் எழுந்தன. அதேபோல், இது தொடர்பான வழக்கு சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திலும் நடந்துவந்தது.
இதையும் படியுங்கள் : “குற்றம் நிரூபணம் ஆகும் வரை நாங்கள் நிரபராதிகள்..” – ஊழல் புகாரில் அதானி குழுமம் விளக்கம்
அந்த வழக்கில் தற்போது இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவுக்கு சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது. மேலும், இஸ்ரேல் நாட்டின் முன்னாள் பாதுகாப்புத் துறை அமைச்சர் யோவ் கேலண்டிற்கு எதிராகவும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.
இவர்களுக்கு மட்டுமின்றி, ஹமாஸ் தலைவர் முகமது தியாப் இப்ராஹிம் அல்-மஸ்ரிக்கும் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
November 21, 2024 7:11 PM IST