Last Updated:
வடக்கு இஸ்ரேலை குறிவைத்த ஹிஸ்புல்லா அமைப்பினர், ராக்கெட்டுகள் மூலம் தாக்குதலில் ஈடுபட்டனர்.
இஸ்ரேல் மீது கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் பாலஸ்தீன ஆயுதக் குழுவான ஹமாஸ் தாக்குதல் நடத்தியது. இதனைத் தொடர்ந்து ஹமாஸ் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இதில், 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். அதேசமயம், இந்தத் தாக்குதல் சம்பங்களில் ஹமாஸ் ஆயுதக்குழுவுக்கு ஈரான் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா அமைப்பு மறைமுக உதவி செய்துவருவதாக தொடர்ந்து இஸ்ரேல் குற்றம்சாட்டிவந்த நிலையில், லெபனானில் ஹிஸ்புல்லா அமைப்புகளை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டது.
இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பின் முக்கிய தலைவர் ஹசன் நஸ்ரல்லாவை கொன்றது. இதனையடுத்து ஈரான், இஸ்ரேல் மீது நேற்று 184 ஏவுகணைகளை வீசி பயங்கர தாக்குதலை நடத்தியது. ஈரானின் தாக்குதல்களுக்கு இஸ்ரேலும் பதிலடி கொடுத்து வான்வழி தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் இரு நாடுகளுக்கு இடையே போர் அபாயம் அதிகரித்து வருகிறது.
மேலும் லெபனானில் பேஜர் மற்றும் வாக்கி டாக்கிகளை வெடிக்க வைத்து தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் உலக நாடுகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த தாக்குதலை நடத்த தாம் தான் உத்தரவிட்டதாக, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அண்மையில் தெரிவித்திருந்தார்.
Also Read : ரஷ்யா – உக்ரைன் போர்… அமெரிக்க அதிபர் டிரம்ப் முடிவால் ரஷ்யா மகிழ்ச்சி!
இந்நிலையில் வடக்கு இஸ்ரேல் பகுதியில் ஹிஸ்புல்லா அமைப்பினர், 90க்கும் அதிகமான ராக்கெட்களை ஏவி தாக்குதலில் ஈடுபட்டனர். இதனால் இஸ்ரேலில் சாலையில் கார்கள் பற்றி எரிந்தன. தாக்குதலில் ஒரு வயது பெண் குழந்தை உட்பட சிலர் காயமடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. ஹிஸ்புல்லா அமைப்பினரின் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க இஸ்ரேல் தீவிரம் காட்டி வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளன.
November 12, 2024 8:41 AM IST