Last Updated:
அமெரிக்காவின் தலையீட்டைத் தொடர்ந்து, இஸ்ரேல்- ஹிஸ்புல்லா அமைப்பினரிடையே போர் நிறுத்தம்
அமெரிக்காவின் தலையீட்டைத் தொடர்ந்து, இஸ்ரேல்- ஹிஸ்புல்லா அமைப்பினரிடையே போர் நிறுத்தம் ஏற்பட்டுள்ளது.
இஸ்ரேல் மற்றும் லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா படைகளுக்கு இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் 27-ம் தேதி அதிகாலை முதல் அமலானது. இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்தின் காசாவில் உள்ள ஹமாஸ் அமைப்பினருக்கு போர் நடைபெறும் நிலையில், காசாவுக்கு ஆதரவாக ஹிஸ்புல்லா அமைப்பினர் தாக்குதல் நடத்துகின்றனர்.
ஓராண்டுக்கும் மேல் நீடிக்கும் இந்த போரில், கடந்த 2 மாதத்தில் ஹமாஸ் மற்றும் ஹிஸ்புல்லாவின் முக்கிய தலைவர்களை இஸ்ரேல் சுட்டு வீழ்த்தியது. அமெரிக்காவின் தலையீட்டை தொடர்ந்து, ஹிஸ்புல்லா-வுடன் போர் நிறுத்த ஒப்பந்தம் மேற்கொள்ள பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு பரிந்துரைத்தார். இதற்கு இஸ்ரேல் அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
இந்நிலையில், இரு நாட்டு பிரதமர்களுடன் தான் பேசியதாகவும், பேரழிவுகரமான மோதலை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான அமெரிக்காவின் முன்மொழிவை அவர்கள் ஏற்றுக் கொண்டுள்ளதாகவும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். உள்ளூர் நேரப்படி 27-ம் தேதி அதிகாலை 4 மணி முதல் இந்த போர் நிறுத்த ஒப்பந்தம் அமலுக்கு வந்தது. ஒப்பந்தத்தின்படி, தெற்கு லெபனானில் இருந்து இஸ்ரேலிய படைகள் திரும்பப் பெறப்படுவதுடன், இஸ்ரேலின் எல்லையில் இருந்து 20 மைல் தொலைவில் ஹிஸ்புல்லா தங்களது இருப்பை குறைக்க வேண்டும். ஒருவேளை போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறினால் மீண்டும் ஹிஸ்புல்லாவை தாக்குவோம் என்று இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்த ஒப்பந்தமானது ஹிஸ்புல்லா படைகளுடன் மட்டுமே என்றும், ஹமாஸ் படைகளுடன் போர் நீடிக்கும் என்றும் கூறப்படுகிறது.
November 27, 2024 7:39 PM IST