லாக்கர் சாவியை இழப்பது அல்லது லாக்கரைத் திறக்க வேண்டிய பிற சூழ்நிலைகளை நீங்கள் எதிர்கொள்வது என்பது பாதுகாப்பான மற்றும் முறையான ஆவணங்களை உறுதிப்படுத்த வங்கிகள் பின்பற்றும் நன்கு வரையறுக்கப்பட்ட செயல்முறைகளை உள்ளடக்கியது. இதுபோன்ற சூழ்நிலைகளில் சிக்கல்களைத் தவிர்க்க, உங்கள் வங்கி லாக்கர் சம்பந்தப்பட்ட பொறுப்புகள் மற்றும் கொள்கைகள் குறித்து எப்போதும் விழிப்புடன் இருக்க வேண்டியது அவசியம்.
வங்கி லாக்கர்கள் வாடிக்கையாளர்கள் தங்கள் மதிப்புமிக்க பொருட்களை பாதுகாப்பாக வைத்திருக்க பரவலாகப் பயன்படுத்தப்படும் ஒரு வங்கி சேவையாகும். நீங்கள் ஒரு லாக்கரை வாடகைக்கு எடுக்கும்போது, சம்பந்தப்பட்ட வங்கி உங்களுக்கு ஒரு சாவியை வழங்கும், அந்த சாவியை வைத்து தங்களுக்கு வழங்கப்பட்ட லாக்கரை மட்டுமே அணுக முடியும். ஆனால் அந்த சாவியை தொலைத்தால் என்ன ஆகும்? இதுபோன்ற சூழ்நிலையில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து இங்கு விரிவாகப் பார்க்கலாம்.
சாவியை தொலைத்தால் என்ன செய்வது? :
உங்கள் வங்கி லாக்கர் சாவியை தொலைத்துவிட்டால், உடனடியாக சம்பந்தப்பட்ட வங்கிக்கு தகலலை தெரிவிப்பது தான் முதல் நடவடிக்கையாகும். பின்னர் இதுகுறித்து உள்ளூர் காவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கையை (எஃப்ஐஆர்) பதிவு செய்ய வேண்டும்.
லாக்கரை எவ்வாறு பயன்படுத்தலாம்? :
இதுபோன்ற சந்தர்ப்பங்களில், வங்கி நகல் சாவியை வழங்கும் அல்லது வேறு ஒரு லாக்கரை வழங்கும். ஒருவேளை சாவியைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், லாக்கரை உடைத்து அதில் இருக்கும் பொருட்களை புதிய லாக்கருக்கு மாற்றி, புதிய சாவியை உங்களுக்கு வழங்க வங்கி முடிவு செய்யலாம். இதுபோன்ற சூழலில் லாக்கர் ரிப்பேர் அல்லது உடைப்பதற்கான தொடர்புடைய செலவுகளுக்கு நீங்களே பொறுப்பாவீர்கள் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
வங்கி லாக்கரை உடைப்பதற்கான விதிகள் :
பொதுவாக, ஒரு லாக்கரை திறக்க வேண்டும் அல்லது உடைக்க வேண்டும் என்றால், வாடிக்கையாளர் மற்றும் வங்கி பிரதிநிதி இருவரின் மேற்பார்வையின் கீழ் இந்த செயல்முறை நிகழ்த்தப்படுகிறது. ஒருவேளை இருவர் சேர்ந்து கூட்டு லாக்கர் (Joint Locker Holders) வைத்திருப்பின், அனைத்து உறுப்பினர்களும் சம்பந்தப்பட்ட இடத்தில் இருக்க வேண்டும். வாடிக்கையாளர் ஒருவேளை அங்கு இருக்க முடியாவிட்டால், அவர்கள் இல்லாத நேரத்தில் லாக்கரைத் திறக்க எழுத்துப்பூர்வமாக ஒப்புதல் அளிக்க வேண்டும்.
லாக்கரை உடைப்பதற்கான வங்கியின் உரிமைகள் :
பாரத ஸ்டேட் வங்கியின் (SBI) கொள்கையின்படி, ஒரு வாடிக்கையாளர் தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக லாக்கர் வாடகையை செலுத்தத் தவறினால், நிலுவைத் தொகையை திரும்பப் பெற லாக்கரை உடைக்கும் உரிமை வங்கிக்கு இருக்கிறது. கூடுதலாக, ஒரு லாக்கர் ஏழு ஆண்டுகளாக செயலிழந்திருந்தால், மற்றும் இந்த காலகட்டத்தில் வாடிக்கையாளர் பார்வையிடவில்லை என்றால், வாடகை செலுத்தப்பட்டிருந்தாலும் கூட வங்கி குறிப்பிட்ட லாக்கரை உடைக்கலாம்.
குற்ற விசாரணையில் லாக்கரை உடைத்தல் :
லாக்கர் வைத்திருப்பவருக்கு எதிராக கிரிமினல் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்படும் சந்தர்ப்பங்களில், லாக்கரில் குற்றம் தொடர்பான ஆதாரங்கள் இருப்பதாக அதிகாரிகள் சந்தேகித்தால், வாடிக்கையாளர் இல்லாமல் வங்கி லாக்கரை உடைக்கலாம். இதுபோன்ற சூழ்நிலைகளில், வங்கி அதிகாரிகள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் இருவரும் சம்பந்தப்பட்ட இடத்தில் இருப்பார்கள். இதுபற்றிய சரியான செயல்முறை உங்களுக்குத் தெரியாவிட்டால், குறிப்பிட்ட வழிகாட்டுதலுக்கு உங்கள் வங்கியை நேரடியாகத் தொடர்புகொள்வது நல்லது.
.