‘வணங்கான்’ படத்தில் நடித்ததற்காக இயக்குநர் பாலாவுக்கு நடிகர் அருண் விஜய் நன்றி தெரிவித்துள்ளார்.
2018-ல் பாலாவின் ‘நாச்சியார்’ வெளிவந்தது. அதுதான் அவரது இயக்கத்தில் வெளிவந்த கடைசிப் படம். அதற்கு முன் ‘தாரை தப்பட்டை’ 2016-ல் வெளியானது. இவ்விரு படங்களும் பாலாவுக்கு எதிர்பார்த்த வெற்றியை அளிக்கவில்லை. இதனைத் தொடர்ந்து சூர்யாவை வைத்து ‘வணங்கான்’ என்ற படத்தின் அறிவிப்பை வெளியிட்டார் பாலா. இதன் படப்பிடிப்பு சில நாட்கள் நடைபெற்ற நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக நடிகர் சூர்யா இந்தப் படத்திலிருந்து விலகினார்.
இதன்பின்னர் அருண் விஜய் முன்னணி கேரக்டரில் நடிப்பார் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டு, ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. படப்பிடிப்பு அனைத்தும் முடிந்து தற்போது படம் வெளியீட்டுக்கு தயாராக உள்ளது. சில மாதங்கள் முன் ‘வணங்கான்’ பட ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது.
இந்த நிலையில், இயக்குநர் பாலாவுக்கு நெகிழ்ச்சியுடன் நடிகர் அருண் விஜய் நன்றி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில், ‘‘மன நெகிழ்வுடனும் கனத்த இதயத்துடனும், என் இயக்குனர் பாலா சார் அவர்களுக்கு, நான் திரையுலகில் கால் பதித்த காலத்தில் இருந்து, உங்கள் படைப்புகளின் ரசிகனாகவும், உங்களைக் கண்டு வியந்து, நேசித்து, ஒரு நடிகனாக “எனக்கும் இப்படி ஒரு வாய்ப்பு கிடைக்காதா” என ஏங்கியவனுக்கு தங்களின் இயக்கத்தில் பணியாற்ற ‘வணங்கான்’ படத்தின் மூலம் வாய்ப்பளித்தமைக்கு மனமார்ந்த நன்றிகள்.
நம் படப்பிடிப்பின் பொழுதுகூட இக்கதையின் பாதிப்பை நான் முழுமையாக உணரவில்லை. ஆனால் அதனை இப்பொழுது வெள்ளித்திரையில் காண்கையில், என் உணர்ச்சிகளை வெளிப்படுத்த வார்த்தைகள் இல்லை. என் பெற்றோரை பெருமையில் நெகிழ்வடைய செய்தமைக்கு உங்களை வணங்குகிறேன்.
எனது திரையுலக பயணத்தில், வணங்கான் ஒரு மிக முக்கியமான பாகமாக அமையும் என்பதில் எனக்கு துளி அளவும் சந்தேகமில்லை.
இப்படைப்பின் மீது முழுமையான நம்பிக்கை வைத்து, பக்க பலமாக இருந்து கொண்டிருக்கும் சுரேஷ் காமாட்சிக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள். மக்கள் அனைவரும் இப்படத்தை விரைவில் திரையில் காணும் நாளை மிகவும் ஆவலுடன் எதிர்நோக்கிக் காத்துக் கொண்டிருக்கிறேன்.” என்று நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.
.