Last Updated:

மதுபான வணிகமானது உலகளவில் மிகவும் இலாபகரமான தொழில்களில் ஒன்றாகும். கடுமையான கட்டுப்பாடுகள் அல்லது மதுபானம் மீதான தடைகள் உள்ள நாடுகளில் கூட இந்த வணிகம் லாபகரமாக இருக்கிறது. 96% முஸ்லிம்கள் வாழும் நாடான பாகிஸ்தான் இதற்கு சிறந்த உதாரணமாகும்.

News18

மதுபான வணிகமானது உலகளவில் மிகவும் இலாபகரமான தொழில்களில் ஒன்றாகும். கடுமையான கட்டுப்பாடுகள் அல்லது மதுபானம் மீதான தடைகள் உள்ள நாடுகளில் கூட இந்த வணிகம் லாபகரமாக இருக்கிறது. 96% முஸ்லிம்கள் வாழும் நாடான பாகிஸ்தான் இதற்கு சிறந்த உதாரணமாகும்.

பாகிஸ்தான் சட்டத்தின்படி, முஸ்லிம்கள் மது அருந்துவது தடைசெய்யப்பட்டுள்ளது. அவ்வாறு செய்வது தண்டனைக்குரிய குற்றமாகும். இருப்பினும், முஸ்லீம் அல்லாதவர்கள் மற்றும் வெளிநாட்டவர்களுக்கு சிறப்பு அனுமதியுடன் மதுபானம் சட்டப்பூர்வமாக இங்கு விற்பனை செய்யப்படுகிறது. பாகிஸ்தானில் மிகவும் ஒழுங்குபடுத்தப்பட்ட மதுபான வணிகத்தில் பண்டாரா குடும்பம் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. பார்சி குடும்பமான இவர்கள் முர்ரீ மதுபான ஆலையை நடத்தி வருகிறார்கள். ஆசியாவிலேயே மிகப் பழமையான இந்த மதுபான ஆலை, பாகிஸ்தான் சுதந்திரம் பெற்ற பிறகு 1947-ல் பண்டாரா குடும்பத்தால் கையகப்படுத்தப்பட்டது. இன்று, முக்கிய தொழிலதிபரும் அரசியல்வாதியுமான இஸ்பான்யார் பண்டாரா, முர்ரீ மதுபான ஆலையை நடத்தி வருகிறார். இந்நிறுவனம் பாகிஸ்தான் நாட்டின் மிகப்பெரிய மதுபான உற்பத்தியாளராக உள்ளது.

கடுமையான கட்டுப்பாடுகள் இருந்தபோதிலும், முர்ரீ ப்ரூவரி இஸ்பான்யாரின் தலைமையின் கீழ் செழித்து வளர்ந்தது. நிறுவனம் அதன் பானங்களை உற்பத்தி செய்ய உயர்தர மூலப்பொருட்களைப் பயன்படுத்தி, தரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கிறது. இது பீர், விஸ்கி மற்றும் வோட்கா போன்ற மதுபானங்களில் நிபுணத்துவம் பெற்றாலும், உலகளவில் ஏற்றுமதி செய்யப்படும் பழச்சாறுகள் மற்றும் பாட்டில் குடிநீர் போன்ற மது அல்லாத பானங்களையும் உற்பத்தி செய்கிறது.

ஆஸ்திரேலியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட பார்லியில் காய்ச்சப்படும் முர்ரீ பீர் மிகவும் பிரபலமானது. ப்ரீமியம் தரத்திற்கு பெயர் பெற்ற சிங்கிள் மால்ட் விஸ்கி மற்றும் ஓட்காவையும் இவர்கள் தயாரிக்கிறார்கள். முர்ரீ பீர் இந்தியாவில் ஒரு காலத்தில் விற்கப்பட்டாலும், 2004 இல் நிறுத்தப்பட்டது. இருப்பினும், 2013-ம் ஆண்டில், பெங்களூரைச் சேர்ந்த ஒரு தொழிலதிபர் இந்தியாவில் முர்ரீ பீர் காய்ச்சவும் சந்தைப்படுத்தவும் உரிமையைப் பெற்றார்.

இஸ்பான்யார் பண்டாராவின் பங்கு மற்றும் பார்சி மரபு: இஸ்பான்யார் பண்டாரா ஒரு வெற்றிகரமான தொழிலதிபர் மட்டுமல்ல; பிரபல அரசியல்வாதி மற்றும் பாகிஸ்தானின் தேசிய சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். ஜியா-உல்-ஹக் ஆட்சியில் இவரது தந்தை அமைச்சராகவும், பின்னர் பர்வேஸ் முஷாரப்பின் ஆட்சியின் போது நாடாளுமன்ற உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளார்.

பண்டாரா குடும்பம் பாகிஸ்தானில் மிகவும் வசதியான குடும்பமாக உள்ளது. ஆனால் நாட்டில் பார்சி சமூகம் கணிசமாக குறைந்து வருகிறது. 1947-ல் 20,000-க்கும் அதிகமான எண்ணிக்கையில் இருந்த பார்சிகள், இன்று 1,000-க்கும் குறைவாகவே உள்ளனர். பலர் பொருளாதார மற்றும் சமூக-அரசியல் காரணங்களுக்காக வேறு நாட்டிற்கு இடம்பெயர்ந்துள்ளனர்.

அப்படி புலம்பெயர்ந்தவர்களில் ஒருவர் தான் இஸ்பான்யாரின் அத்தையும் புகழ்பெற்ற நாவலாசிரியருமான பாப்சி சித்வா. அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்த இவர், 1998-ல் தீபா மேத்தாவின் எர்த் திரைப்படத்திற்கு உத்வேகமாக இருந்த ஐஸ் கேண்டி மேன் நாவலுக்காக அறியப்படுகிறார்.

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான வர்த்தக உறவுகளின் அவசியம் குறித்து இஸ்பான்யார் பண்டாரா தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார். முர்ரி ப்ரூவரி இந்தியாவில் இருந்து மூலப்பொருட்கள் மற்றும் இயந்திரங்களை இறக்குமதி செய்தாலும், இந்த இறக்குமதிகள் துபாய் வழியாக செல்ல வேண்டும் என்பதால் செலவுகள் அதிகரிக்கிறது. ஆகையால் வாகா எல்லையை நேரடி வர்த்தகத்திற்காக திறக்குமாறு இரு நாடுகளையும் பண்டாரா வலியுறுத்தியுள்ளதோடு,. “இருநாடுகளுக்கு இடையே வணிகம் அதிகமானால் பின்தங்கியவர்களுக்கு, குறிப்பாக பாகிஸ்தானில் உள்ளவர்களுக்கு மிகவும் பயனளிக்கும்” என்றும் அவர் கூறுகிறார்.



Source link