அல்லு அர்ஜுன் நடித்திருக்கும் புஷ்பா-2 படம் இந்த வாரம் உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது. முழுக்க முழுக்க கமர்ஷியல் பார்முலாவில் எடுக்கப்பட்டுள்ள அந்தப் படம் எபப்டி இருக்கிறது என்பதை பார்க்கலாம்.
சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ஃபகத் பாசில், சுனில், ராஷ்மிகா மந்தனா உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான புஷ்பா படத்தின் தொடர்ச்சியாக இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது. முதல் பாகம் புஷ்பா கதாபாத்திரத்தின் வளர்ச்சி பற்றியிருந்த நிலையில் இரண்டாம் பாகம் அந்த கதாபாத்திரத்தின் கொள்கை, விதி, அதிகாரத்தைப் பற்றியதாக உருவாக்கப்பட்டுள்ளது.
செம்மரம் கடத்தலின் சிண்டிக்கேட்டிற்கு தலைவனாக, அசுர பலம் கொண்டவனாக இருந்தாலும் மனைவிக்கும், பெண்களுக்கும் மரியாதை கொடுக்கும் வகையில் புஷ்பா கதாபாத்திரம் வடிவமைக்கப்பட்டுள்ளது. அப்படி, தன் மனைவியின் ஆசைக்காக புஷ்பா எடுக்கும் முடிவுதான் இந்த இரண்டாம்பாகத்திற்கான ஒட்டுமொத்த ஆடுகளம். அதை ஆக்ரோசமான ஆட்டத்துடன் பக்கா கமர்ஷியல் பார்முலாவில் படமாக்கியிருக்கிறார் இயக்குநர் சுகுமார்.
ஒரு கடத்தல்காரனான ஹீரோவை எந்த அளவுக்கு நல்லவனாக காட்டமுடியுமோ, அந்த அளவிற்கு காட்டியுள்ளார் இயக்குநர். அதுவும், புஷ்பாவிற்கான செண்டிமெண்ட், மனைவியின் மீதான பாசம், குடும்ப பெயருக்கான தவிப்பு ஆகியவற்றை எமோஷ்னலாக்கியுள்ளனர்.
முதல் பாகத்தில் அல்லு அர்ஜுனால் அவமானப்படுத்தப்படும் ஃபகத் பாசிலுக்கு இந்த இரண்டாவது பாகத்தில் காட்சிகள் அதிகம். அதுவும் இவர்கள் இருவருக்குள்ளான ஈகோ, படத்திற்கு பெரும் உறுதுணையாக இருக்கிறது. அதுவும் ஒருவர் இன்னொருவரை வீழ்த்த வேண்டும் என்ற திரைக்கதை, படத்தை வேகப்படுத்துகிறது.
நடிகர்களை பொறுத்தவரை அனைவரும் சிறப்பாக நடித்துள்ளனர். அல்லு அர்ஜுன் புஷ்பா கதாபாத்திரமாகவே காட்சியளிக்கிறார். ஒரு சோல்டரை தூக்கிக்கொண்டு, கண்களால் கோவத்தை கடத்தும் காட்சியாகட்டும், கை கால்களை கட்டிக்கொண்டு எதிரிகளை பந்தாடும் காட்சியாகட்டும், சாமி முன்பு ஆடும் ஆக்ரோச ஆட்டமாகாட்டும் தனக்கென ஒரு ஸ்டைலை கடைப்பிடுத்து ரசிக்க வைக்கிறார். இவரைப் போலவே ஃபகத் பாசில் தன்னுடைய வழக்கமான ஸ்டைலில் பின்னி எடுத்துள்ளார். ஒரு அதிகாரியாக, தான் சந்தித்த அவமானத்திற்கு எப்படியாவது பழிவாங்க துடிக்கும் கதாபாத்திரத்தை மிக சுலபமாக கையாண்டு ரசிக்க வைக்கிறார். இவர்களை தவிர ராஷ்மிகா மந்தனா, சுனில் என அனைவரும் வரும் காட்சிகளை சிறப்பாக நடித்துக்கொடுத்துள்ளனர். இருந்தாலும் Peeling பாடலுக்கான நடனத்திற்கு ராஷ்மிகா சற்று சிரமப்பட்டுள்ளார்.
Also Read |
இன்னும் டப்பிங் வேலைகளே முடியலையா..? விடாமுயற்சி அப்டேட்..!
தொழில்நுட்பக் கலைஞர்களை பொருத்த வரை, ஒளிப்பதிவு சுகுமாரின் எண்ணத்தை தத்ரூபமாக பிரதிபலித்துள்ளது. சண்டைக்காட்சி, பாடல் என அனைத்தையும் சிறப்பாக படம்பிடித்துள்ளார். தேவி ஸ்ரீ பிரசாத்தின் பாடல்கள் முதல்பாகத்தின் பாடல்கள் அளவிற்கு இல்லையென்றாலும், இந்தப் பாடல்களும் ரசிக்கவே வைக்கின்றன. சாம்.CSயின் பின்னணி இசை சில இடத்தில் நன்றாகவும், சில இடங்களில் சத்தமாகவும் இருக்கிறது. ஆனால் அவருக்கான Trade Markஇல் இசை இல்லை. சண்டைக்காட்சிகளில் ஒருவித ஸ்டைலை புஷ்பா கதாபாத்திரத்திற்கு உருவாக்கி மிரட்டியுள்ளனர். மதன் கார்க்கியின் வசனமும், அதை சரியான உச்சரிப்புடன் பதிவு செய்த விதமும், இது நேரடி தமிழ்ப்படம் என்ற எண்ணத்தை கொடுக்கிறது.
புஷ்பா-2 படம் முழுக்க முழுக்க கமர்ஷியல் பார்முலா படம். திரைக்கதையும் வேகமாக செல்கிறது. ஆனால் அல்லு அர்ஜுன் – ஃபகத் பாசில் ஆகியோருக்கு இடையிலான ஈகோ படத்திற்கு பலம் சேர்த்தாலும் அனைத்து இடங்களிலும் ஹீரோவே ஜெயிக்கிறார். இதனால் ஒரு கட்டத்திற்கு பிறகு, ஆமா எப்படியும் இவர்தானே ஜெயிக்க போறார் என்ற எண்ணம் வந்துவிடுகிறது. அதில் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்காலாம். அதேபோல் படத்தின் நீளம் மிக அதிகமாக உள்ளது. அதில் நிச்சயம் சில காட்சிகளை தூக்க வாய்ப்பு இருந்தும் நீக்காமல் விட்டுவிட்டனர் இதனால் 3 மணி நேரம் 20 நிமிடம் படம் ஓடுகிறது. இது நிச்சயம் ஒரு மைனஸ்.
ஒட்டுமொத்தத்தில் படம் ரசிக்க வைத்தாலும், ஹீரோவை கடத்தல் கும்பலின் தலைவனாக உருவாக்கி, அதன்மூலம் பெண்கள் மீதான மரியாதை உள்ளிட்ட நல்ல விஷயங்கள் சிலவற்றை சொல்வது சரியா என்பது ஒரு பெரிய கேள்வியே.
.