Last Updated:
இந்திய சினிமாவில் 12 வருடங்களுக்குப் பிறகு வெளியாகி பிளாக் பஸ்டரான ஒரே திரைப்படம் மதகஜராஜா என விஷால் பெருமைப்பட பேசி உள்ளார்.
தமிழ் சினிமாவில் ரசிகர்கள் ரசிக்கும் படங்களையும், தயாரிப்பாளர்களுக்கு லாபகரமான படங்களையும் கொடுத்து வரும் தன்னுடைய பெயர் நல்ல இயக்குனர் என்ற பட்டியலில் வராதது வருத்தம் என சுந்தர்.சி வேதனை தெரிவித்திருக்கிறார். அதேசமயம் இந்திய சினிமாவில் 12 வருடங்களுக்குப் பிறகு வெளியாகி பிளாக் பஸ்டரான ஒரே திரைப்படம் மதகஜராஜா என விஷால் பெருமைப்பட பேசி உள்ளார். இது குறித்த தொகுப்பை பார்க்கலாம்.
மதகஜராஜா திரைப்படம் உருவாகி 12 ஆண்டுகள் கழித்து இந்த பொங்கலுக்கு வெளியானது. ஆக்சன், காமெடி என பக்கா கமர்சியல் ஃபார்முலாவில் வெளியான இந்தப் படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். தமிழகத்தில் மட்டும் இந்த திரைப்படம் சுமார் 50 கோடி ரூபாய் வசூலை ஈட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதில் தற்போது வரை மட்டும் 20 கோடி ரூபாய் தாண்டி வசூல் செய்துள்ளது.
இந்நிலையில் மதகஜராஜா திரைப்படத்தின் வெற்றி விழா சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் விஷால், அஞ்சலி, விஜய் ஆண்டனி, சுந்தர்.சி உள்ளிட்ட படக் குழுவினர் பலரும் கலந்து கொண்டனர். இந்த விழாவில் பேசிய அஞ்சலி, மதகஜராஜாவை திரையரங்கில் ரசிகர்கள் கொண்டாடுகிறார்கள் எனக் கூறினார். சுந்தர்.சி எல்லா படங்களிலும் ஒரே பெயரை தன்னுடைய கதாபாத்திரத்திற்கு வைக்கிறார். அடுத்த படத்தில் மாற்ற வேண்டும் என வேண்டுகோள் வைத்தார். கலகலப்பு மதகஜராஜா படங்களில் நடித்த அஞ்சலி தன்னுடைய ராசியான நடிகை என்று சுந்தர்.சி பாராட்டினார். பின்னர் படத்தின் இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி பேசுகையில், விஷால் பாடிய ‘ஓ மை டியர் லவ்வர்’ பாடல் படத்திற்கான அடையாளத்தை கொடுத்திருக்கிறது. அந்தப் பாடலை தன்னுடைய கான்செட்டில் விஷால் பாட இருக்கிறார் எனவும் தெரிவித்தார்.
மதகஜராஜா படத்தின் வெற்றியை பற்றி பேசிய சுந்தர்.சி திரையரங்குகளில் இவ்வளவு ரசிகர்களை பார்க்க மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த வெற்றியை கொடுத்த ரசிகர்களுக்கு கண்ணீரைதான் காணிக்கையாக கொடுக்க முடியும் என கூறினார். அது மட்டும் இல்லாமல் ரசிகர்கள் கொடுக்கும் காசு இருக்கு அவர்கள் சந்தோஷமாக இருக்க வேண்டும். தயாரிப்பாளர்கள் போட்ட பணத்தை எடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் படத்தை எடுக்கிறேன். இத்தனை வெற்றி படங்கள் கொடுத்திருந்தாலும், என்னுடைய பெயர் சிறந்த இயக்குனர் என்ற பட்டியலில் இடம் பிடிக்கவில்லை என்பது வருத்தம் என தெரிவித்தார்.
இந்திய சினிமா வரலாற்றில் 12 ஆண்டுகள் கழித்து வெளியான ஒரு திரைப்படம் பிளாக் பஸ்டர் ஹிட் என்ற வரலாற்றைப் படைத்தது மதகஜராஜா படம் மட்டும் தான் என விஷால் தெரிவித்தார். சுந்தர்.சி திரைப்படங்களில் நடிக்கும்போது எந்த கவலையும் இல்லாமல், மனதளவில் உற்சாகமாக இருக்க முடியும் என்றும் சுட்டிக்காட்டினார். எனவே, சுந்தர்.சி கூட்டணியில் தொடர்ந்து படம் நடிக்க ஆர்வமாக இருப்பதாகவும் விஷால் கூறினார். நடிகர்களைப் பற்றி பேசுகையில் வரலட்சுமி தன்னுடைய வெற்றிக்காக பல நாள் காத்திருந்தார். ஹனுமன் திரைப்படத்தில் அவருடைய நடிப்பை பார்த்துவிட்டு நான் கண்ணீர் விட்டேன். அவருடைய திருமண வாழ்விற்கும் திரைப்பட வாழ்வியல் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாக கூறினார்.
அதேபோல் அஞ்சலி நடிப்பும் சிறப்பாக இருந்தது என்று தெரிவித்தார். சந்தானத்தை பற்றி பேசுகையில் தனக்கு பிடித்த நடிகன், காமெடியன், நல்ல மனிதன் என விஷால் புகழாரம் சூட்டினார். மதகஜராஜா படத்தின் இரண்டாவது நாயகன் சந்தானம், அனைவரும் அவர் மீண்டும் காமெடி படங்களில் நடிக்க வேண்டும் என்று கூறுகிறார்கள். அவர் இன்று ஹீரோவாக ஆகிவிட்டார் இருந்தாலும் சுந்தர்.சி காம்பினேஷனில் அவர் படங்கள் நடிக்க வேண்டும் என வேண்டுகோள் வைத்தார். இந்த நிகழ்ச்சியில் தன்னுடைய உடல்நிலை பற்றி விமர்சனம் செய்தவர்களுக்கும் விஷால் பதிலடி கொடுத்தார். குறிப்பாக ஒரு மருத்துவர் பேசியுள்ளார். அவரெல்லாம் மருத்துவராய் என்ற சந்தேகம் இருக்கிறது எனவும் விஷால் கூறினார்.
அதேபோல் ஜெமினி நிறுவனம் மீண்டும் சினிமா தயாரிக்க வேண்டும். தற்போது உள்ள தயாரிப்பாளர்கள் ஜி.எஸ்.டி உள்ளிட்ட வரிகளை கட்டுவதில்லை. அவர்களின் தயாரிப்பில் நடிக்கவே பயமாக இருக்கிறது. எனவே, சினிமா தெரிந்த சரியான தயாரிப்பாளர்கள் வரவேண்டும் எனவும் கோரிக்கை வைத்தார். பொங்கல் பண்டிகைக்கு வெளியான மதகஜராஜா திரைப்படம் திரையரங்குகள் அதிகரிக்கப்பட்டு 400க்கும் அதிகமான திரையரங்குகளில் திரையிடப்பட்டு வருகிறது. இதைத்தொடர்ந்து வரும் 31ஆம் தேதி தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளிலும் வெளியிடப்படுகிறது என படக் குழுவினர் அறிவித்திருக்கின்றனர்.
January 17, 2025 4:58 PM IST