இந்தியாவில் எலெக்ட்ரிக் கார் மார்கெட் சமீபத்திய ஆண்டுகளில் கணிசமாக வளர்ந்துள்ளது. ஆனால் ஒட்டுமொத்த பயணிகள் வாகன சந்தையின் அளவோடு ஒப்பிடுகையில், இந்த வளர்ச்சி சிறியதாகவே உள்ளது. உண்மையில், இந்தியாவில் EV புரட்சியானது மின்சார இருசக்கர வாகனங்களால் தான் வளர்ந்து வருகிறது.
ஏனென்றால் பேட்டரி மூலம் இயங்கும் கார்கள் நகர்ப்புறங்களில் மட்டுமே உள்ளன. கடந்த 2023-ஆம் ஆண்டில், நாட்டின் மொத்த வாகன விற்பனையில் EV-க்கள் 6 சதவீதமாக இருந்தன. இதே ஆண்டில் இந்த எண்ணிக்கை சீனாவில் 30 சதவீதமாகவும், அமெரிக்காவில் 10 சதவீதமாகவும் இருந்தது. அப்படியானால், இந்திய மக்களை பேட்டரியால் இயங்கும் வாகன உலகில் அடியெடுத்து வைக்கவிடாமல் தடுப்பது எது?
நாட்டின் முன்னணி தணிக்கை, வரி மற்றும் ஆலோசனை சேவை நிறுவனமான Forvis Mazars-ன் சமீபத்திய அறிக்கையானது இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனம் வாங்க நினைப்பவர்களுக்கு ரேஞ்ச் (மைலேஜ்) பற்றிய கவலை மிகப்பெரியதாக உள்ளது என்பதை வெளிப்படுத்தியுள்ளது. பிப்ரவரி 2024 நிலவரப்படி, இந்தியாவில் வெறும் 12,146 பப்ளிக் சார்ஜிங் ஸ்டேஷன்கள் மட்டுமே உள்ளன என்பதை எடுத்துக்காட்டி, இது 135 எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு ஒரு சார்ஜிங் ஸ்டேஷன் என குறிப்பிடப்படுள்ளது. அதே நேரம் சீனாவில், 10 EV-க்களுக்கு ஒரு பப்ளிக் சார்ஜிங் ஸ்டேஷனும், அமெரிக்காவில் 20 EV-க்களுக்கு ஒன்றும் உள்ளது.
இந்தியாவை பொறுத்த வரை தற்போதைய EV உரிமையாளர்களில் சுமார் 90 சதவீதம் பேர் தங்கள் வாகனங்களுக்கு சார்ஜ் ஏற்ற, வீட்டில் சார்ஜ் செய்வதையே நம்பியுள்ளனர் என்பதை அறிக்கை எடுத்துக்காட்டுகிறது.
EV-யை எங்கே சார்ஜ் செய்யலாம்?
தற்போதைய நிலவரப்படி பெட்ரோல் அல்லது டீசல் எஞ்சின்களில் இயங்கும் வாகனங்களுக்கு எரிபொருளை மீண்டும் நிரப்பி கொள்வதை போல் EV-யை சார்ஜ் செய்வது அவ்வளவு எளிதானது அல்ல. Forvis Mazars நடத்திய ஆய்வில், பப்ளிக் சார்ஜர்கள் கிடைப்பது ஒரு பெரிய பிரச்சினையாக இருந்தாலும், 25 சதவீத சார்ஜிங் ஸ்டேஷன்கள் தொழில்நுட்ப சிக்கல்கள், லிமிட்டட் கிரிட் கனெக்டிவிட்டி அல்லது பராமரிப்பில் ஏற்படும் தாமதங்கள் காரணமாக அடிக்கடி வேலையில்லா நேரத்தை எதிர்கொள்ள நேரிடுகிறது. தவிர சார்ஜிங் டைமிங்கிலும் பிரச்சினை உள்ளது. இந்தியாவில் சராசரியாக EV சார்ஜிங் நேரம் 90 நிமிடங்கள் முதல் 120 நிமிடங்கள் வரை உள்ளது. ஆனால் இது உலகளாவிய சராசரியான சார்ஜிங் டைமிங்கான 30 நிமிடங்கள் முதல் 60 நிமிடங்களை விட அதிகமாக உள்ளதாக அறிக்கை கூறுகிறது.
மக்கள் EV வாங்குவதை இந்தியாவில் விரைவுபடுத்த முடியும்?
உலகின் மூன்றாவது பெரிய வாகன சந்தையாக உள்ள இந்தியா EV செக்மென்ட்டில் சிறந்த இடத்தில் தான் உள்ளது. மஹிந்திரா, மாருதி சுசுகி, ஜேஎஸ்டபிள்யூ எம்ஜி மோட்டார், ஹூண்டாய், கியா மற்றும் டாடா மோட்டார்ஸ் போன்ற முன்னணி வாகன தயாரிப்பு நிறுவனங்கள் அடுத்தடுத்து தங்களின் எலெக்ட்ரிக் தயாரிப்புகளை களமிறக்கி வருகின்றனர்.
Forvis Mazars-ன் கூற்றுப்படி, இந்தியாவில் EV வாங்குவதை அதிகரிக்க உதவும் முக்கிய காரணிகள் லாங்-ரேஞ்ச் பேட்டரிகள், மலிவு அல்லது பட்ஜெட் விலையில் EV வாகனங்களை கிடைக்க செய்வது மற்றும் நகர்ப்புற மையங்களுக்கு மட்டுமே மட்டுப்படுத்தப்படாத ஒரு விரிவான சார்ஜிங் நெட்வொர்க் போன்றவை உள்ளன. அதே நேரம் இரண்டு மற்றும் மூன்று சக்கர வாகனங்களின் குறிப்பிட்ட விஷயத்தில், பேட்டரி-ஸ்வேப்பிங் ஆப்ஷன்கள் ரேஞ்ச் தொடர்பான கவலைகளை தீர்க்க உதவ கூடும்.
.