Last Updated:

இந்தியாவில் பெரும்பாலான நிறுவனங்களில் ஒருநாளைக்கு 8 மணிநேரம் பணி நேரமும், வாரத்திற்கு ஒன்று அல்லது இரண்டு நாட்கள் விடுமுறை அளிக்கப்படுகிறது.

எஸ்.என்.சுப்பிரமணியன்

ஞாயிற்றுக்கிழமை எவ்வளவு நேரம்தான் மனைவியின் முகத்தையே பார்த்துக்கொண்டிருப்பீர்கள் என்றும், வாரத்திற்கு 90 மணி நேர வேலை செய்ய வேண்டும் என்றும், எல்.அண்ட்.டி எனப்படும் லார்சன் & டூப்ரோ பன்னாட்டு நிறுவனத் தலைவர் எஸ்.என். சுப்பிரமணியன் பேசியுள்ளது சர்ச்சையாகியுள்ளது.

சென்னையில் பிறந்த எஸ்.என். சுப்பிரமணியத்தின் ஆண்டு வருமானம் 51 கோடி ரூபாயாம். L & T நிறுவனத்தில் 40 ஆண்டுகளுக்கு முன்பு, Project Planning Engineer அதாவது திட்ட வகுப்புப் பொறியாளராகப் பணியில் சேர்ந்தார். உழைப்பால் படிப்படியாகப் பல வளர்ச்சிகளை அடைந்த அவர், 2023ஆம் ஆண்டு அந்நிறுவனத் தலைவராகப் பொறுப்பேற்றார்.

இந்த நிலையில் L & T நிறுவன ஊழியர்களுடன் காணொலி வாயிலாக உரையாற்றிய எஸ்.என்.சுப்பிரமணியன், ”உங்களை ஞாயிற்றுக்கிழமைகளில் வேலை பார்க்க வைக்க முடியவில்லையே” என்ற வருத்தம் தனக்கு இருப்பதாகக் கூறினார். இதுவே அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

இதையும் படிக்க: பிபிஎஃப் – வரிச்சலுகையுடன் கூடிய முதலீட்டாளர்களுக்கு ஏற்ற சிறந்த சிறுசேமிப்புத் திட்டம்…!

ஞாயிற்றுக்கிழமைகளில் வேலை பார்க்க வைத்தால் மிகவும் மகிழ்ச்சி அடைவேன் என்று கூறிய அவர், மற்றொரு கருத்தையும் முன்வைத்தது சர்ச்சையானது. ”ஞாயிற்றுக்கிழமை எவ்வளவு நேரம்தான் மனைவியின் முகத்தையே உற்றுப் பார்த்துக்கொண்டிக்க முடியும், மனைவிகள் எவ்வளவு நேரம் கணவனைப் பார்த்துக்கொண்டிருக்க முடியும்” என வினவிய அவர், ”அலுவலகத்திற்குச் சென்று வேலையைத் தொடங்குங்கள்” எனப் பேசினார்.

சீனாவில் வாரத்திற்கு 90 மணி நேரம் வேலை செய்கிறார்கள் என்பதைச் சுட்டிக்காட்டிய எஸ்.என். சுப்பிரமணியன், அதேநேரத்தில் அமெரிக்காவில் 50 மணி நேரமே பணி செய்கிறார்கள் என்றார். வலுவான பணி நெறிமுறைகளால் விரைவில் அமெரிக்காவை சீனா முந்தும் என்றும் கூறினார்.

ஏற்கனவே நாடு முன்னேற 70 மணி நேரம் வேலை செய்ய வேண்டும் என்று இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் இணை நிறுவனர் நாராயணமூர்த்தி பேசியபோதே எதிர்ப்பு கிளம்பியது. ”பிரதமர் மோடி 100 மணி நேரம் உழைக்கும்போது நாம் ஏன் உழைக்கக்கூடாது” என்றும் நாராயணமூர்த்தி பேசியிருந்தார். எதிர்ப்பு எழுந்தபோதிலும், 70 மணி நேர வேலை என்ற தனது கருத்தை மாற்றிக்கொள்ளப்போவதில்லை என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

தற்போது அவரை விட ஒருபடி மேலே சென்று வாரத்திற்கு 90 மணி நேரம் வேலை செய்ய வேண்டும் என எல்.அண்ட்.டி நிறுவனத் தலைவர் சுப்பிரமணியன் பேசியதற்கு, சமூக வலைதளங்களில் பல்வேறு தரப்பினரும் கண்டனங்களைப் பதிவிட்டுள்ளனர். இவரது பேச்சுக்குத் தொழிற்சங்கத்தினரும் தொழிற்சங்கத்தினரும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.

இந்தியாவில் பெரும்பாலான நிறுவனங்களில் ஒரு நாளைக்கு 8 மணி நேரம் பணி நேரமும், வாரத்திற்கு ஒன்று அல்லது இரண்டு நாட்கள் விடுமுறை அளிக்கப்படுகிறது. அதாவது வார வேலை நேரம் சராசரியாக 48 மணி நேரமாக இருக்கிறது.

இதைவிட அதிகமான நேரம் பணி செய்தால், மன அழுத்தம், தூக்கமின்மை போன்ற உடல்ரீதியாகப் பாதிப்புகள் ஏற்படும் என்கிறது மருத்துவத்துறை. இந்த நிலையில் பணி நேரம் தொடர்பாகப் பிரபல தொழில் நிறுவனங்களின் தலைவர்களின் கருத்து பலரையும் அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.

தமிழ் செய்திகள்/வணிகம்/

“எவ்வளவு நேரம் மனைவியின் முகத்தை பார்ப்பீர்கள்..? 90 மணி நேரம் வேலை செய்ய வேண்டும்” – பிரபல தொழிலதிபர் சர்ச்சை பேச்சு



Source link