வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் வெற்றிக்கு பிறகு ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிகள் பட்டியலில் இந்திய அணி முன்னேற்றம் கண்டுள்ளது.
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 280 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் வங்கதேச வீரர்கள் தோல்வியை தவிர்க்க போராடினாலும், இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர்களான அஸ்வின், ஜடேஜா இணை அவர்களை எளிதாக வீழ்த்தியது. இதனால், வங்கதேச அணி 234 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அஸ்வின் 6 விக்கெட்டும், ஜடேஜா 3 விக்கெட்டும் வீழ்த்தினர். வெற்றியின் மூலம் தொடரில் இந்திய அணி 1 – 0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.
ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிகள்: நடப்பு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை பொறுத்தவரை புள்ளிகள் பட்டியலில் இந்தியா ஏற்கனவே முதலிடத்தில் இருந்துவருகிறது. எனினும், வங்கதேசத்துக்கு எதிரான இன்றைய வெற்றியின் மூலம் முதலிடத்தை வலுப்படுத்தி கொண்டது இந்திய அணி.
வங்கதேசத்துக்கு எதிரான வெற்றியை அடுத்து இந்திய அணியின் புள்ளிகள் சதவீதம் 71.66 ஆகவும், புள்ளிகள் அடிப்படையில் 10 போட்டிகளில் விளையாடி 7 வெற்றிகள் பெற்று 86 புள்ளிகள் பெற்றும் முதலிடத்தில் உள்ளது.
Also Read |
IND vs BAN | அஸ்வின் சுழலில் சிக்கிய வங்கதேசம்… சென்னை டெஸ்டில் இந்திய அணி அபார வெற்றி!
இந்தியாவுக்கு அடுத்தாக ஆஸ்திரேலியா உள்ளது. ஆஸ்திரேலிய அணியின் புள்ளிகள் சதவீதம் 62.5 ஆக உள்ளது. அதேநேரம், புள்ளிகள் அடிப்படையில் 12 போட்டிகளில் விளையாடிய ஆஸ்திரேலிய அணி 8 வெற்றிகளுடன் 90 புள்ளிகள் பெற்றுள்ளது.
பாகிஸ்தானை வென்றிருந்த வங்கதேசம், இன்றைய போட்டியில் வென்றிருக்கும்பட்சத்தில் டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிகள் பட்டியலில் நான்காம் இடத்துக்கு முன்னேறியிருக்கும். ஆனால் தோல்வியை தழுவியதால், தற்போது 7-ஆவது இடத்தில் உள்ளது வங்கதேசம்.
.